கப்பல் விபத்துகள்

ஜாரியா கோர்வெட் உலகம் முழுவதும் நடந்த கப்பல் விபத்துகளைப் பற்றி எழுதுகிறார்.  பல வலைத்தளங்கள் தரவுத்தளத்தை வழங்குகின்றன.  விபத்துக்குள்ளான கப்பல்கள் மற்றும் படகுகளின் எண்ணிக்கை 150,000 முதல் 250,000 வரை மாறுபடும். இரண்டாம் உலகப் போரின் போது மட்டும் சுமார் 15000 கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன.  உலகப் பெருங்கடல்களில் கண்டுபிடிக்கப்படாத முப்பது லட்சம் கப்பல் சிதைவுகள் இருக்கும் என்று யுனெஸ்கோ (UNESCO) மதிப்பிட்டுள்ளது (பிபிசி செய்திகள், ஜூன் 12, 2023) . சில சீஷர்கள் தங்கள் விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தினார்கள்.  பவுல் தீமோத்தேயுவை நல்மனசாட்சியும், விசுவாசத்தைப் பற்றிக்கொள்ளும்படியும், அவனுடைய விசுவாசத்தைச் சேதப்படுத்தாமல் இருக்கும்படியும் எச்சரிக்கிறார் (1 தீமோத்தேயு 1:18-20).

உலகின் மீதான அன்பு:
தேமா தொடங்கும் போது ஒரு நல்ல சீஷராக இருந்தான். அவன் பவுலுடன் இருந்தான் (பிலேமோன் 1:24). பின்னர் அவன் உலகத்தை நேசிக்க ஆரம்பித்து, பவுலை விட்டு வெளியேறினான், ஆம், அவன் விசுவாசம் என்ற கப்பலை  மூழ்கடித்தான் (2 தீமோத்தேயு 4:10). உலகக் கோட்பாடுகளான கண்களின் இச்சை, மாம்சத்தின் இச்சை, ஜீவனத்தின் பெருமை ஆகியவற்றில் சீஷர்கள் எச்சரிக்கையாகவும் எப்போதும் விழிப்புடனும் இருக்க வேண்டும், அப்படி இல்லாவிட்டால் மூழ்கிப் போன கப்பலின் நிலைதான் (1 யோவான் 2:16).

வஞ்சகச் செல்வம்:
விதைப்பவரின் உவமையில், சில விதைகள் முட்களுக்கு இடையில் விழுந்தன. அது துளிர்விட ஆரம்பித்தது ஆனால் முட்களால் நெரிப்பட்டது.  அதாவது "முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள்; கேட்டவுடனே போய், பிரபஞ்சத்திற்குரிய கவலைகளினாலும் ஐசுவரியத்தினாலும் சிற்றின்பங்களினாலும் நெருக்கப்பட்டு, பலன்கொடாதிருக்கிறார்கள்" (லூக்கா 8:14). சாத்தான் ஐசுவரிய வேஷத்தினால் யாரையும் ஏமாற்ற முடியும்.  கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை ஒருமுறை தனிமையில் தன்னை பணிந்துக்  கொள்ள சொல்லி அவரைச் சோதிக்கும் துணிச்சல் அவனுக்கு இருந்ததே (மத்தேயு 4:9).

நல்மனசாட்சியை நிராகரித்தல்:
இமெனேயும் அலெக்சந்தரும் நன்றாகத் தொடங்கினார்கள் ஆனால் விசுவாசத்தையும் நல்ல மனசாட்சியையும் நிராகரித்தனர்;  அவர்கள் தங்கள் விசுவாசக் கப்பலைச் சேதப்படுத்தினார்கள் (1 தீமோத்தேயு 1:18-20).  பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக, அதை உறுதியாகப் பிடித்துக் கொள்வது கிறிஸ்தவ விசுவாச பயணத்திற்கு இன்றியமையாதது (யூதா 1:3).

சிக்கிக்கொள்தல்:
"கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்" (2 பேதுரு 2:20).  

கடின இதயம்:
அவிசுவாசியான, கடினப்பட்ட மற்றும் கலகத்தனமான இதயத்தின் காரணமாக, ஒரு நபர் விசுவாச கப்பலைச் சேதப்படுத்த முடியும் (எபிரெயர் 3:12-14). நொறுங்குண்ட இதயங்களைக் கொண்டவர்களுக்கும் அவருடைய வார்த்தையில் நடுங்குபவர்களுக்கும் தேவனுடைய இரக்கம் அருளப்படுகிறது (ஏசாயா 66:2).

விசுவாசக் கப்பலில் சேதப்படாமல், அதனை உறுதியாக பற்றிக் கொள்வதில் நான் கவனமாக இருக்கிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்  

Rev. Dr. J.N. Manokaran


Read more