நம்பிக்கைப் பெட்டி என்பது திருமணமாகாத இளம் பெண்கள் திருமணத்திற்குத் தயாராகும் போது பொக்கிஷமான பொருட்களை சேமித்து வைக்க பாரம்பரியமாகப் பயன்படுத்தும் ஒரு சிறப்பு தளபாடமாகும். இந்தப் பெட்டிகளில் கவனமாக சேகரிக்கப்பட்ட ஆடைகள், கையால் பின்னப்பட்ட குளிர்கால உடைகள், வீட்டுப் பொருட்கள், மேஜை பாய்கள், துண்டுகள், போர்வைகள் மற்றும் பாத்திரப் பொருட்கள் இருந்தன. பெரும்பாலும் அழகாக அலங்கரிக்கப்பட்ட இந்த நம்பிக்கைப் பெட்டி வீட்டில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்தது. இதுஇவரதட்சணைப் பெட்டி, சிடார்ப் பெட்டி, டிரஸ்ஸியோப் பெட்டி அல்லது மகிமைப் பெட்டி என்றும் அழைக்கப்படும், இது பொதுவாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் காணப்பட்டது. ஒரு பெண் பருவமடைந்ததும் மற்றும் திருமணத்திற்குத் தயாராகும் போது, இந்தப் பெட்டி பொதுவாகப் பெறப்படும்.
கிறிஸ்துவின் மணமகள்:
அப்போஸ்தலனாகிய பவுல் திருச்சபையை கிறிஸ்துவின் மணமகள் என்று விவரிக்கிறார், இதனால் சபை புனிதமானதாக, குற்றம் இல்லாததாக, கேடோ, பாவமோ, வேறு தவறுகளோ நடைபெறாத இடமாக இருக்க வேண்டும் என்றும் ஏங்குகிறார் (எபேசியர் 5:27).
பரலோகத்தில் பொக்கிஷம்:
ஒரு மணமகள் தனது நம்பிக்கைப் பெட்டியைத் தயார் செய்வது போல, ஒவ்வொரு விசுவாசியும் ஒரு ஆவிக்குரிய நம்பிக்கைப் பெட்டியைக் கொண்டிருக்க வேண்டும். இயேசு தம்முடைய சீஷர்களுக்குப் பரலோகத்தில் எப்படி பொக்கிஷங்களைச் சேமிக்க வேண்டும் என்றுக் கற்றுக் கொடுத்தார் (மத்தேயு 6:19-21). ஆம், அவரை உண்மையாகச் சேவிப்பவர்களுக்கு கிரீடங்களும் வெகுமதிகளும் காத்திருக்கின்றன (2 தீமோத்தேயு 4:8)..
கர்த்தருடைய ஊழியக்காரருக்கு ஒரு கோப்பை தண்ணீர் வழங்குவது போன்ற ஒரு எளிய செயல் கூட பலனளிக்காமல் போகாது (மத்தேயு 10:42) என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தம்முடைய பரிசுத்தவான்களின் உழைப்பை மறக்கும் அளவுக்கு தேவன் அநீதியானவர் அல்லவே (எபிரெயர் 6:10). பணக்கார இளைஞன் இயேசுவிடம் நித்திய ஜீவனை எவ்வாறு சுதந்தரிப்பது என்று கேட்டபோது, அவன் தன் உடைமைகளை விற்று, ஏழைகளுக்குக் கொடுத்து, சிலுவையை எடுத்துக் கொண்டு, கிறிஸ்துவைப் பின்பற்றினால், அப்போது அவனுக்குப் பரலோகத்தில் பொக்கிஷங்கள் இருக்கும் (மத்தேயு 19:21) என பதிலளிக்கப்பட்டது.
நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு:
ஒரு மணமகள் தனது திருமணத்திற்கான நாட்களை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பாள், கடக்கும் ஒவ்வொரு நாளும் தன் நேசித்தவரின் அருகில் செல்வோம் என எண்ணி மகிழ்வாள். அதேபோல், கிறிஸ்துவின் சீஷர்களும் அவருடன் என்றென்றும் இருப்பதற்கான மிகுந்த எதிர்பார்ப்பில் வாழ வேண்டும். இந்த நம்பிக்கை அதிக அர்ப்பணிப்பு, பக்தி மற்றும் ஒப்புக்கொடுத்தலை ஊக்குவிக்கிறது (1 யோவான் 3:3).
தவறவிட்ட வாய்ப்பு:
ஐந்து புத்தியில்லாத கன்னிகைகள் சரியான இடத்தில், சரியான நேரத்தில், சரியான விளக்குகளுடன் இருந்தனர்; ஆனால் அவர்களிடம் எண்ணெய் இல்லை (மத்தேயு 25:1-13). நிஜத்தில் அவர்கள் தங்கள் நம்பிக்கைப் பெட்டியைத் தயாரிக்கத் தவறிவிட்டனர் என்றே சொல்ல வேண்டும்.
பரலோகத்தில் எனது நம்பிக்கைப் பெட்டி நிரம்பியதா அல்லது காலியாக உள்ளதா?
Rev. Dr. J.N. Manokaran