சிலர் தவறான புரிதலுடன் இருக்கிறார்கள்; தேவன் எல்லா ஜெபத்திற்கும் பதிலளிக்க வேண்டியது கட்டாயம் என நினைக்கிறார்கள். மேலும், சிலர் ஜெபம் (சொற்களின் தொகுப்பு) வெற்றியை தரும் என்று எண்ணுகிறார்கள், இது தவறானது. உண்மையில், ஜெபத்திற்கு பதிலளிக்கிற தேவனே வெற்றியை வழங்குகிறார். மக்கள் தேவனை நாடுகிறார்கள், ஏனெனில் அவர் ஜெபத்திற்கு பதிலளிக்கிறார். "ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்” (சங்கீதம் 65:2). ஆம், அவரிடம் வருகிற ஒவ்வொருவரின் ஜெபத்தையும் அவர் கேட்கிறார். ஆனால் ஏன் சில நேரங்களில் ஜெபங்கள் பதிலளிக்கப்படவில்லை என்பதற்கு வேதாகமம் சில சாத்தியமான காரணங்களைத் தெரிவிக்கிறது.
நிலைத்திராதிருத்தல்:
கர்த்தரிலும், அவருடைய வார்த்தையிலும் நிலைத்திருக்காதவர்கள் தங்களுடைய ஜெபங்களுக்கு பதில் பெற முடியாமல் இருக்கலாம். "நீங்கள் என்னில் நிலைத்திருக்கிறீர்களாயின், என் வார்த்தைகள் உங்களில் நிலைத்திருக்கிறதாயின், நீங்கள் வேண்டுகிறதை கேட்டுக்கொள்ளுங்கள், அது உங்களுக்கு ஆகும்" (யோவான் 15:7).
அவிசுவாசம்:
அவநம்பிக்கையில் மனம் முடங்கியவர்களுக்காக தேவன் செயல்படமாட்டார். "நீங்கள் விசுவாசமற்றவர்களாக இருக்கிறதினால் உங்களுக்குச் சொல்லுகிறேன்..." (மத்தேயு 17:20-21), அதாவது இது போதுமான விசுவாசம் இல்லாமை அல்ல, முற்றிலும் விசுவாசம் இல்லாததையே குறிக்கிறது.
மோசமான உறவுகள்:
கணவனும் மனைவியும் ஒற்றுமையாக வாழாதபோது, அவர்களின் ஜெபங்கள் தடைபடுகின்றன (1 பேதுரு 3:7).
ஒப்புக்கொள்ளப்படாத பாவம்:
தேவனுடைய ஆவியும், அவருடைய வார்த்தையும் ஒருவரை நிருபிப்பின், அவர் தமது பாவங்களை ஒப்புக்கொடுத்து, தேவனிடம் மன்னிப்பை தேட வேண்டும். ஆகையால், நீங்கள் ஒருவருக்கொருவர் உங்கள் குற்றங்களை ஒப்புக்கொடுத்து, ஒருவருக்கொருவர் குணமாக ஜெபம் செய்யுங்கள்; நீதிமானின் வல்லமையுள்ள ஜெபத்தால் நன்மைகள் நிகழும் (யாக்கோபு 5:16). அவர்களிலிருந்து சிலர் தங்களுடைய பாவங்களை ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக, கடின மனப்பான்மையோடு இருந்து விடுகிறார்கள்.
வஞ்சகம்:
ஒருவரின் உதடுகள் வஞ்சகமாக இருப்பின், அவர் எழுப்பும் அழுகுரல், வேதனை அல்லது ஜெபத்தை தேவன் கவனிக்காமல் இருக்கலாம் (சங்கீதம் 17:1). பொய் சொல்லும் நாவை தேவன் வெறுக்கிறார் (நீதிமொழிகள் 6:16-19).
உபவாசம் செய்யத் தவறுதல்:
விசுவாசிகள் கேட்கும் சில ஜெப விண்ணப்பங்களுக்கு உபவாசமும் மனத்தாழ்மையும் தேவை (மத்தேயு 17:21).
வேதாகம தியானம் இல்லாமை:
தேவனுடைய வார்த்தையைப் புறக்கணிக்கும், உதாசீனப்படுத்தும் அல்லது நிராகரிப்பவர்களின் ஜெபங்களை தேவன் பொருட்படுத்த மாட்டார் (நீதிமொழிகள் 28:9).
தவறான நோக்கங்கள்:
மக்கள் தவறான நோக்கங்களுடனும் சுயநலமான எண்ணங்களுடனும் ஜெபம் செய்தால், தேவன் அவர்களின் ஜெபத்திற்கு பதிலளிக்கமாட்டார். நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறீர்கள், ஆனால் பெறவில்லை, ஏனெனில் நீங்கள் தவறாக கேட்டுக்கொள்கிறீர்கள்; உங்கள் ஆசைகளை நிறைவேற்ற உபயோகிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறீர்கள் (யாக்கோபு 4:3). எடுத்துக்காட்டாக, ஒருவரைத் தம் பகைவனாகக் கருதி, அவன் அழிவுபெற வேண்டுமென்று ஜெபிப்பது தேவனுக்குப் பிரியமில்லை.
சுயநல நம்பிக்கை:
பயன்படுத்தும் சொற்கள், ஜெபத்தின் நீளம், நயம், சொல்லாடல் மற்றும் அழகிய வார்த்தைகளில் நம்பிக்கை வைக்கும் மக்கள், தேவனிடமிருந்து பதிலை பெறாமல் இருக்கலாம். நீங்கள் ஜெபம் செய்யும்போது, உபதேசம் அறியாத ஜாதிகள் செய்வது போல வீணான வார்த்தைகளை அதிகம் சொல்லாதேயுங்கள்; அவர்கள் தங்கள் அதிக சொல்லினாலே கேட்கப்படுவோமென்று நினைக்கிறார்கள் (மத்தேயு 6:7). வேதாகமம் கட்டளையிட்ட ஜெபம் என்பது மந்திரம் அல்ல, அதில் சொற்கள், ஒலிபயிற்சி, மற்றும் தாளம் தேவனை கட்டுப்படுத்தும் முறையாக இருக்கக்கூடாது. மாறாக, அது ஜீவனுள்ள தேவனோடு நடத்தும் ஒரு உரையாடலாகும்.
சுயநீதி:
தாங்கள் உண்மையுள்ளவர்கள், பரிசுத்தமானவர்கள், எல்லா நீதியான காரியங்களையும் செய்கிறவர்கள், எல்லா சடங்குகளையும் நிறைவேற்றுபவர்கள் என்று நினைப்பவர்கள் தேவனிடமிருந்து பதில்களைப் பெற மாட்டார்கள் (லூக்கா 18:9-14).
என் ஜெபங்களுக்கு பதில் கிடைக்காதபோது என்னைக் குறித்து நானே மதிப்பீடு செய்கிறேனா?
Rev. Dr. J.N. Manokaran