சங்கீதம் 126- விளக்கவுரை


முக்கியக் கருத்து

 - கர்த்தர் நம் சிறையிருப்பை திருப்புவார்.
 - நாம் கண்ணீரோடே பிரயாசப்பட வேண்டும்.

1. (வச.1-3) - கர்த்தர் சிறையிருப்பை திருப்பினார். 

இஸ்ரவேல் மக்கள் தங்கள் தேவனை புறக்கணித்தபோது பாபிலோனுக்கு சிறைப்பட்டுப்போனார்கள். மீண்டும் எஸ்ரா, நெகேமியா, தானியேல் போன்ற தேவ தாசர்கள் ஜெபித்தபோது கர்த்தர் தமது ஜனத்தின் சிறையிருப்பை திருப்பினார். பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து கி.மு.538 இல் யூதர்கள் எஸ்ரா, நெகேமியா போன்றவர்கள் தலைமையில் பெர்சியா இராஜாக்களின் ஆணையின் பேரில் எருசலேமுக்கு திரும்பினார்கள். அதனால், கர்த்தர் தங்களுக்கு செய்த பெரிய காரியங்களினிமித்தம் பெருமகிழ்ச்சியடைந்தார்கள்.  2 நாளா.36:16-23, எஸ்றா 2:70, 3:12,13.
தேவனைத் தேடும் பக்தர்களுடைய சகல கட்டுகளினின்றும் கர்த்தர் விடுவித்து சிறையிருப்பு போன்ற அனுபவங்களை மாற்றி அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பார்.  யோபு 42:10, அப்.12:5,7,12,13.

2. (வச.4) - முழுமையான விடுதலை தேவை

இஸ்ரவேல் மக்களுக்கு சிறையிருப்பிலிருந்து திரும்பிய அனுபவமிருந்தாலும், அவர்களுக்கு முழுமையான திருப்பப்பட்ட நிலமை தேவைப்பட்டது. எஸ்றா, நெகேமியா போன்றவர்கள் இஸ்ரவேலரை எருசலேமில் திரும்ப கொண்டு வந்து மீண்டும் அவர்களை கட்டி எழுப்ப முற்பட்டபோது பல எதிர்ப்புகளை சந்திக்கிறார்கள். ஆகவே, யூதர்களுக்கு இப்படிப்பட்ட தடைகளினின்று முற்றிலுமான விடுதலை பெற கர்த்தரிடம் ஜெபிக்கிறார்கள். தேவனுடைய நிறைவான ஆசீர்வாதம் மீண்டும் தேவை என்று, தெற்கத்தி வெள்ளங்களின் உதாரணத்துடன் ஜெபிக்கிறார்கள். தெற்கத்தி மலைபாங்கான பகுதிகளில் மழைநாட்களில் ஏராளமான வெள்ளம் பாயும். அதுபோல மீண்டும் கர்த்தருடயை கிருபை ஏராளமாக பாய வேண்டுமென ஜெபிக்கிறார்கள்.  இன்றைக்கு உலகின் அநேக பகுதிகளில் ஊழியங்கள் நடந்தேறி சபைகள் கட்டப்படுகின்றன. ஆனாலும் பல தடைகளும்,உலக அசுத்தங்களும் சிறையிருப்பின் நிலமையை கொண்டு வருகின்றன.இவற்றை அகற்றி கர்த்தர் முன்மாரி, பின்மாரி பொழிந்து சபைகளில் மீண்டும் பெரிய எழுப்புதலை கட்டளையிட விசுவாசிகளாகிய நாம் ஜெபிக்கவேண்டும். ஆகாய் 2:9,4.

3. (வச.5,6) - கண்ணீரோடு பிரயாசம் வேண்டும் 

கர்த்தர் இவ்விதமாக ஒரு பெருவாரியான எழுப்புதலை கட்டளையிவேண்டுமானால், தேவ ஜனம் மிகுந்த பிரயாசப்படவேண்டும். தேவகட்டளையை கீழ்ப்படிதலோடே நிறைவேற்றி, தேவ வசனத்தை மிகுந்த பயபக்தியுடனும் வைராக்கியத்துடனும் விதைக்கவேண்டும். இதற்காக நாம் அனுபவிக்கும் வேதனைகளையோ வருத்தங்களையோ பாராமல் கருத்துடனும் கண்ணீருடனும் ஜெபத்தோடு ஊழியம் செய்ய வேண்டும். இந்த பிரயாசங்களே தேவனிடமிருந்து எதிர்காலத்தில் பெருத்த அறுவடையை கொண்டுவரும். பிரசங்கி 11:1 ஆதி.26:12. மழையின்மையினால் அறுவடை பொய்த்துவிடுவது போன்ற ஏமாற்ற சூழ்நிலையிலும் கண்ணீரோடே விதைக்கும்போது தேவன் அற்புதம் செய்து மிகுந்த பலன் கொடுப்பார்.  ஆகாய் 1:5-8, எரேமியா 31:9, மத்தேயு 5:4, 2 கொரி.6:9.

Author: Rev. Dr. R. Samuel


Author: Rev. Dr. R. Samuel

  • வெளிப்படுத்தின விசேஷம் 16 - விளக்கவுரை
  • வெளிப்படுத்தின விசேஷம் 15 - விளக்கவுரை
  • வெளிப்படுத்தின விசேஷம் 14 - விளக்கவுரை
  • வெளிப்படுத்தின விசேஷம் 13 - விளக்கவுரை
  • ஆகாய் அதிகாரம் 2 - நுட்பநோக்கு விளக்கவுரை
  • ஆகாய் அதிகாரம் 1 - நுட்பநோக்கு விளக்கவுரை