முக்கியக் கருத்து
- கர்த்தருடைய அரசாட்சியின் ஆதாரம் நீதியும் நியாயமும், அது மிகுந்த மகிழ்ச்சியைத் தரும்.
- கர்த்தரில் அன்புகூறுகிறவர்கள் தீமையை வெறுக்கும்போது மகிழ்ச்சியை அடைவார்கள்.
1. கர்த்தருடைய மேன்மையான அரசாட்சியின் தன்மை (வச.1-7)
கர்த்தருடைய அரசாட்சி நீதி, நியாயம் என்ற அஸ்திபாரத்தின்மேல் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அவர் படைத்த சிருஷ்டிப்புகள் சட்ட திட்டங்களுக்குக் கீழ்பட்டே இயங்குவதால் அவருடைய நீதிக்கு சாட்சியளிக்கின்றன என்று (வச.6) இல் சங்கீதக்காரன் கூறுகிறார். கர்த்தருடைய அரசாட்சியில் அநீதி இல்லாதபடியால் பூமியும் அதிலுள்ள தீவுகளும்கூட மிகுந்த பூரிப்படைந்து மகிழும்.
கர்த்தருடைய பல நேர்மையான மகத்துவங்கள் தற்போது உலகத்திற்கு மறைந்து மேகம் மந்தாரம் இவற்றால் மூடப்பட்டது போல காணப்பட்டாலும், அவர் இப்பூச்சக்கரத்தை அரசாட்சி செய்ய கடைசி நாளில் இறங்கி வரும்போது அக்கினி, மின்னல் போன்ற மகா பிரகாசமாக வெளிப்படும் என்று (வச.2-5) வசனங்களில் வாசிக்கிறோம். இந்த மகா பயங்கரமான வல்லமையால் இந்த உலகில் அக்கிரமத்தில் ஈடுபடும் சத்துருக்கள் அழிக்கப்படுவார்கள் என்று வச.3 இலும், ஒரே மெய்த்தேவனாகிய கர்த்தரை நாடாமல் பொய்யான விக்கிரகங்களை வணங்குகிறவர்கள் வெட்கப்பட்டுப் போவார்கள் என்று வச.7 இலும் சொல்லப்பட்டுள்ளது.
"சூளையைப்போல எரிகிற நாள் வரும்; ... அப்பொழுது ... அக்கிரமஞ்செய்கிற ... அவர்களைச் சுட்டெரிக்கும்; ...' மல்கியா 4:1.
2. தெரிந்துகொள்ளப்பட்ட தேவஜனத்தின் கிரியையும் பிரதிபலனும் (வச.8-12)
கர்த்தர் பூமி முழுவதற்கும் உயர்ந்தவரும், எல்லா சக்திகளுக்கும் மேலானவரும், பரிசுத்தமானவருமாகஇருக்கிறார் (வச.9). ஆகவே தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட தேவ ஜனம் உலகத்தின் தீமையான அசுத்தங்களை வெறுத்து, தேவன் நீதியாய் செய்யும் நியாயத்தீர்ப்புகளினிமித்தம் மகிழ்ச்சியடையவேண்டும். சீயோன் நகரமும் அதனைச் சார்ந்த யூதா ஜனங்களும்கர்த்தருக்குள் களிகூரவேண்டும் (வச.8).
கர்த்தரில் அன்பு செலுத்துகிறவர்கள் தீமையை வெறுத்து தூய்மையை விரும்பவேண்டும் (வச.10). கர்த்தரின் பரிசுத்தத்தை தங்கள் வாழ்க்கையில் கொண்டாடவேண்டும் (வச.12).
இவ்விதமாக, தேவ ஜனமாகிய நீதிமான்கள் கர்த்தருக்குள் அவர் நீதியினிமித்தம் மகிழும்போது கர்த்தர் பரிசுத்தவான்களின் ஆத்துமாவைக் காப்பாற்றி நித்திய மகிழ்ச்சியை கொடுப்பார் (10,11).
"ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; ...' என்று மல்கியா 4 ஆம் அதிகாரம் 2 ஆம் வசனத்தில் வாசிக்கிறோம்.
Author: Rev. Dr. R. Samuel