முக்கியக் கருத்து
- தேவ ஜனத்தின் மத்தியிலிருந்து தேவன் வல்லமையான கிரியைகளைச் செய்கிறார்.
- வல்லமையுள்ள பிரபுக்களை அடக்கி, எளிமையானவர்களைக் கர்த்தர் இரட்சிக்கிறார்.
1. தேவனுடைய வாசஸ்தலத்திலிருந்து அவர் வல்லமை புறப்படுகிறது (வச.1-3)
பாடகர் குழு தலைவன் ஆசாப் தேவனுடைய வல்லமை புறப்படும் விதத்தை வெளிப்படுத்திப் பாடுகிறார். யூதா என்பது இஸ்ரவேல் மக்கள் அனைவரையும் குறிக்கிறது. யூதா கோத்திரத்தில் இஸ்ரவேலின் இராஜா தாவீதும், நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் பிறந்ததினால் இவ்விதமாக முக்கியத்துவம் பெற்றது. "சாலேம்' என்ற நகரம் எபூசியர்களிடமிருந்து தாவீதினால் கைப்பற்றப்பட்டு "எருசலேம்' என்றழைக்கப்பட்டது. இந்த எருசலேமின் மத்தியப் பகுதியான "சீயோன்' கோட்டையில் தான் தேவனுடைய வாசஸ்தலம் கட்டப்பட்டு தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியும் வைக்கப்பட்டது (ஆதி.14:18, 2 சாமுவேல் 5:6-9, 6:12). ஆகவே, "சாலேம்' என்ற "எருசலேம்' மற்றும் "சீயோன்' நகரம் என்றழைக்கப்பட்ட தேவனுடைய நகரத்திலிருந்து தேவன் இஸ்ரவேலருக்கு அவர்கள் சத்துருக்களை முறியடிக்க, ஜெயத்தைக் கொடுக்க தமது வல்லமையை அனுப்பினார். அங்கிருந்து முழு உலகத்திற்கும் அவர் அறியப்பட்டார் உபாகமம் 7:1. ஆவிக்குரிய இஸ்ரவேலராகிய புதிய ஏற்பாட்டு சபையிலே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வாசம்செய்து, அங்கிருந்துதான் உலகம் முழுவதற்கும் அறியப்படுகிறார். திருச்சபையும், கிறிஸ்தவ விசுவாசிகளும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை உலகம் முழுவதும் அறியச் செய்யவேண்டும் (2 கொரிந்தியர் 2:14; 2 கொரிந்தியர் 10:3-5).
2. மனித வல்லமைகளைக்காட்டிலும் தேவனுடைய வல்லமையே உயர்ந்தது (வச.4-10, 12)
இந்த உலகத்திலுள்ள எல்லா மேன்மக்கள், பிரபுக்கள் எல்லாருமே மனிதர்கள் தான். இவர்களுடைய வல்லமைகளைக்காட்டிலும் தேவனே, உம்முடைய வல்லமைதான் உயர்ந்தது என்று ஆசாப் தேவனிடமே அறிக்கையிட்டு அவருக்கு கனத்தை செலுத்துகிறான் (4-7).துன்மார்க்கமான மனிதனுடைய கோபம், தேவன் தம்முடைய எளிமையான ஜனத்தை மீட்க தருணத்தை ஏற்படுத்திக்கொடுக்கிறது (8-10) என்று ஆசாப் விளக்குவது, பார்வோனின் கோபம் இஸ்ரவேலரை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்ட தேவ வல்லமையினாலும் தெளிவாகிறது. தேவ ஜனங்களாகிய விசுவாசிகள் இவ்வுலகத்தில் எந்த மனித சக்தியும், பொல்லாத பிசாசின் வல்லமைகளும் எதிர்த்து வரும்போது, தேவனிடம் நம்பிக்கை வைத்து ஜெபித்தால், தேவன் அந்த எதிர்ப்பு சக்திகளை முறியடித்து சிறுமைப்பட்ட தமது ஜனத்தை இரட்சிப்பார் (வச.8). பிரபுக்களின் ஆவியும், ராஜாக்களின் வல்லமையும் அவருக்கு முன்பாக அடங்கும் (வச.12).
3. கர்த்தருக்கு பொருத்தனை செய்து காணிக்கைகளை செலுத்தவேண்டும் (வச.11)
இப்படிப்பட்ட வல்லமையில் உயர்ந்த தேவனுக்கு அவரை அண்டிக்கொள்ளும் பரிசுத்தவான்கள் பொருத்தனைகளை செய்து, காணிக்கைகளை செலுத்துவதன் மூலம் நன்றி செலுத்துகிறோம். தேவனை இவ்விதமாக மகிமைப்படுத்துவதன் மூலம் நாம் மேன்மேலும் ஆசீர்வதிக்கப்படுவோம்.
Author: Rev. Dr. R. Samuel