முக்கியக் கருத்து
- தேவ சந்நிதியில் பாடும் பாடகர் குழுவை சேர்ந்த ஆசாப் பாடிய சங்கீதம்.
- சுத்த இருதயமுள்ளவர்களுக்கு தேவன் நல்லவர்.
- துன்மார்க்கரின் வெற்றி மாயையானதும் தற்காலிகமானதும் ஆகும்.
1. ஆசாபின் நம்பிக்கை (வச.1,2,28)
சுத்த இருதயமுள்ளவர்களுக்கும், தேவனை நம்பி அவரை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கும் தேவன் நிச்சயமாகவே நல்லவராக இருக்கிறார் என்று ஆசாப் உறுதிபட கூறுகிறான். துன்மார்க்கனின் வழியைக் கண்டு ஒரு கணம் குழம்பினாலும், நல்ல தேவன் ஆசாபின் தள்ளாடுதலிலிருந்து அவனை தப்பிக்கச் செய்து உறுதியான நம்பிக்கை பெறச் செய்தார். அதை எப்படிச் செய்தார் என்பதைத் தொடர்ந்து வரும் வசனங்களில் ஆசாப் விளக்குவதை பார்க்கலாம்.
2. ஆசாபின் குழப்பம் (வச.3-14)
துன்மார்க்கர் தங்கள் வழிகளில் எந்த இடுக்கணிலும் அகப்படாமல் செழிக்கிறார்கள் (3-5). தங்கள் வெற்றியைக் குறித்துப் பெருமையாய் பேசிக்கொள்கிறார்கள் (6-10). தேவனுக்குத் தங்கள் துன்மார்க்க வழிகள் தெரியாது (11) என்று சொல்லி தங்கள் செல்வத்தைத் தவறான வழிகளில் பெருக்கிக்கொள்ளுகிறார்கள் (12). நானோ (ஆசாப்) அவர்களைப் பார்த்துப் பொறாமை கொள்கிறேன் (3). ஏனென்றால், நான் என் வழிகளைப் பரிசுத்தம் செய்து கொண்டபோதிலும் தண்டிக்கப்படுகிறேன் (13,14) என்று ஆசாப் குழம்புகிறான்.
3. ஆசாபின் தெளிவு - துன்மார்க்கரின் வெற்றி தற்காலிகமானது, மாயையானது (வச.15-22)
தன்னுடைய குழப்பம் தவறானது என்பதை ஆசாப் தேவ சந்நிதியில் வந்து, தியானித்து, யோசித்தபோது அறிந்துகொண்டதாக (வச.15-17) இல் தெரிவிக்கிறான். விசுவாசிகளாகிய நாமும் பல வேளைகளில் இப்படிப்பட்ட குழப்பத்திற்குள்ளாகிறோம். உலக மக்கள் துன்மார்க்க வழியில் பெரும் செல்வம் ஈட்டுவதையும், உலக ஆசாபாசங்களை அனுபவித்து களியாட்டுகளில் மகிழ்கிறார்கள் என்று கண்டு தவறான எண்ணம் கொள்ளுகிறோம்.
நம்முடைய தவறான எண்ணம் நீங்க வேண்டுமானால் தேவனுடைய ஆலயத்திற்கு வந்து வேத வசனங்களை ஆராய்ச்சி
செய்து பார்க்க வேண்டும். அப்போது சத்திய ஆவியானவர் தமது வசனத்தின் மூலம் தீமைக்கும் தூய்மைக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்துவார்.
"தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ... இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது' எபிரெயர் 4:12 .துன்மார்க்கரின் வழிகளை தேவன் சடுதியில் கவிழ்த்துப்போட்டு, துன்மார்க்கனுக்கு முடிவில் அழிவையும் பயங்கரத்தையும் கட்டளையிட்டு நிர்மூலமாக்குவார் என்ற சத்தியத்தை தெரிந்துகொண்டபோது, ஆசாப் தனது குழம்பிய தவறான எண்ணத்திற்காக மனஸ்தாபப்பட்டதாக கூறுகிறான் (வச.18-22).
"... கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வருவதால், ஒருவனும் உங்களை வீண்வார்த்தைகளினாலே மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்' (எபேசியர் 5:6).
4. ஆசாபின் உறுதி - தேவனை நம்பி அண்டிக்கொள்வதால் வரும் நன்மைகள் (வச.23-28)
ஆசாப், முடிவில் தேவனை நம்புவதிலும், அவரை அண்டிக்கொள்வதிலும் மாத்திரமே நிலையான நன்மையும் ஆசீர்வாதமும் கிடைக்கிறது என்ற மேன்மையான சத்தியத்தை வெளிப்படுத்துகிறான். விசுவாசிகளாகிய நாமும்கூட, கர்த்தராகியஇயேசு கிறிஸ்துவின் சிலுவையின் மேன்மையை உணர்ந்து இரட்சிப்புக்கு அது ஒன்றே வழி என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். "சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது' (1 கொரிந்தியர் 1:18).
தேவனை அண்டிக்கொள்வதால் அவர் தமது வலது கரத்தினால் தன்னைத் தாங்கி, பெலன் கொடுத்து முடிவில் மகிமையான பரலோக ராஜ்ஜியத்தில் சேர்த்துக்கொள்வார் என்றும் இப்பூலோகத்திலும் அவரே தனக்கு உதவியானவர் என்றும் ஆசாப் இந்த வசனங்களில் உறுதிபட பாடியிருப்பது விசுவாசிகளாகிய ஒவ்வொருவருக்கும் அசையா நம்பிக்கையையும் தேவன்மேல் மாறா உறுதியையும் கொடுக்கிறதாயிருக்கிறது.
Author: Rev. Dr. R. Samuel