முக்கியக் கருத்து
- தாவீதின் சாட்சி உத்தமத்தில் வாஞ்சை
- தாவீது தவிர்ப்பது பொல்லாதவர்களின் கூட்டம்
1. சங்கீதக்காரனாகிய தாவீது தேவனுக்கு முன்பாக தான் உத்தமமாய் நடப்பதையும், தன் கால்கள் செம்மையான இடத்தில் நிற்பதையும் குறித்து (வச. 1,3,11,12) தேவசந்நிதியில் தைரியமாக சாட்சி கொடுப்பது மிக ஆச்சரியமாக இருக்கிறது. அது மாத்திரமல்லாது, தேவன் தன்னை சோதித்தறியவும் தன்னைத்தானே ஒப்புக்கொடுக்கிறார் என்பது அவனுடைய உறுதியை யும் உத்தமத்தின்மேல் உள்ள தனது வாஞ்சையையும் காட்டுகிறது (வச.2).
2. தான் உத்தமத்தை வாஞ்சிப்பதுமல்லாமல், வீணரையும் வஞ்சகரையும், பொல்லாதவர்களையும், துன்மார்க்கரையும் வெறுத்து அவர்களைத் தவிர்ப்பதையும் திண்ணமாகக் கூறுகிறான். (4,5).
"தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார்" (1 தெசலோனிக்கேயர் 4:7).
என்ற வசனத்திற்கு தாவீது சிறந்த இலக்கணமாகத் திகழ்வது ஒவ்வொரு விசுவாசிக்கும் நல்ல எடுத்துக்காட்டு.
3. தான் கர்த்தருடைய ஆலயமாகிய பரிசுத்த ஸ்தலத்திலும் அவருடைய பீடத்தண்டையிலும் நெருங்க தன்னை முற்றிலும் தகுதிப்படுத்திக்கொள்ளும்படி தன் கைகளை குற்றமில்லாமையினாலே கழுவி, இருதயத்தில் தேவ பிரசன்னத்தை அதிகமாக வாஞ்சிக்கிறான் (வச.7,8).
"எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன்' என்று 1 கொரிந்தியர் 11:28இல், கர்த்தருடைய பந்தியையும் அவருடைய வாசஸ்தலத்தையும் மிகுந்த பரிசுத்தத்துடனே அணுகவேண்டும் என்று புதிய ஏற்பாட்டு விசுவாசிகளுக்குக் கொடுக்கப்பட்ட ஆலோசனையை தாவீது பழைய ஏற்பாட்டு காலத்திலேயே பின்பற்றி வந்திருக்கிறான்.
4. ஆகவே, இவ்விதமான தான் தேவனுக்கு முன்பாக உத்தமனாய் நடந்து, தேவனுடைய ஆலயத்தை மிகவும் வாஞ்சிப்பதால் கர்த்தர் தன் ஆத்துமாவைப் பாவிகளோடேயும் தீவினை செய்கிறவர்களுடனும் ஒருக்காலும் சேர்த்துவிடக்கூடாது என்ற அருமையான ஜெபத்தை ஏறெடுக்கிறான் (வச.9,10).
ஒவ்வொரு விசுவாசியின் ஜெபமும் இப்படி இருக்குமா?
"முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்',
என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மத்தேயு 6:33 ஆம் வசனத்தில் கூறியிருப்பதற்கு ஏற்ற ஜெபமாக தாவீதின் ஜெபம் இருக்கிறதல்லவா?
Author: Rev. Dr. R. Samuel