வெளிப்படுத்தின விசேஷம் 1-  விளக்கவுரை


அதிகாரம்- 1

 “மகிமைபடுத்தப்பட்ட கிறிஸ்துவின் தரிசனம்”
“Vision of the Glorified Christ” 

1. வச 1- 8 - இனி சம்பவிக்கப்போகிறவைகளை கர்த்தர் யோவானுக்கு வெளிப்படுத்துகிறார். நடந்து முடிந்த சரித்திரத்தை அல்ல. 
யோவானுக்கு சர்வ மகிமையோடு தரிசனமளித்தவர் சர்வ பூமிக்கும் அவ்விதமாகவே சீக்கரத்தில் ஒருநாள் வெளிப்படுவார். அவரை சிலுவையில் அறைந்தவர்களும் கூட அவர் வருவதை கண்டு புலம்புவார்கள்.சங்கீதம் 96: 13 

2. வச 9, 10: கி.பி 65 ஆம் ஆண்டு, பவுல் மரித்து 30 ஆண்டுகள் கழித்து யோவான் சுவிசேஷகனுக்கு பத்மு தீவிலே கிறிஸ்து தமது சர்வ மகிமையோடு காட்சியளித்தார். சுவிசேஷகனானிய யோவான் தான் செய்த சுவிசேஷ திருப்பணிகளுக்காக தண்டனையாக இங்கு நாடு கடத்தப்பட்டிருந்தான். யோவான் தான் தன்னந்தனியே தள்ளப்பட்டிருந்த ஆபத்தான சூழ்நிலையை குறித்து முறுமுறுக்காமல், தனது நேரத்தை ஊக்கமான ஜெபத்தில் செலவிட்டு ஆவிக்குள்ளான அனுபவத்திற்கு கடந்து சென்றான். சர்வ வல்ல தேவன் தன்னோடு இடைபடுவதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கிக்கொண்டதால் மகிமைபடுத்தப்பட்ட கிறிஸ்து யோவானுக்கு தரிசனையானார். 

நம்முடைய திட்டங்களும் வழிகளும் முடக்கப்பட்டுவிட்டன என்று நாம் நினைக்கிற சூழ்நிலையில், கர்த்தர் நம்மை சந்திக்க வேண்டுமாயின், முறுமுறுக்காமல், சோர்ந்து போகாமல் தொடர்ந்து அவரை நம்பி ஊக்கமாக ஜெபிக்கும்போது கர்த்தர் தமது சித்தத்தின்படி பெரிய திட்டத்தை நிறைவேற்றுவார். சங்கீதம் 93: 1, எரேமியா 29: 11

3. வச 4, 11, 19: கர்த்தர் சின்ன ஆசியாவிலுள்ள(Asia Minor-Turkey) 7 சபைகளுக்கு மிக முக்கியமான செய்தியை யோவான் மூலம் அனுப்புகிறார். இந்த 7 சபைகளும் உள்ள துருக்கியின் கிழக்குக் கடற்கரைக்கு மிக அருகாமையில் பத்மு தீவு அமைந்துள்ளது. எனவே யோவான் மிக எளிதில் ஆவியானவரின் செய்தியை 7 சபைகளுக்கும் அனுப்ப முடிந்தது. 7 என்பது பூரணத்தைக் காட்டுகிறது. ஆகவே இந்த 7 சபைகளும் உலகிலுள்ள அனைத்து சபைகளுக்கும் அடையாளமாக இருக்கிறது.

4. வச 12,13, 20: கர்த்தர் தமது சபை உலகத்திற்கு ஒளியாயிருக்க வேண்டுமென்பதற்காக, அதன் மத்தியில் உலாவி தொடர்ந்து பராமரித்து போஷித்து உயிர்ப்பித்துக்கொண்டேயிருக்கிறார். மத்தேயு 5: 14- 16.ஏசாயா 42: 3

5. வச 14,15:  கிறிஸ்து யோவானுக்கு தம்மை சர்வ வல்ல தேவனாக காண்பித்தார். பூரண மகிமையோடு தம்மை வெளிப்படுத்தினார். யோவான் கண்ட இந்த தரிசனம் தானியேல் பக்தன் கண்ட தரிசனத்திற்கு ஒப்பாக இருந்தது. தானியேல் 7: 9

6. வச 16,20,6: கர்த்தர் தமது வலது கரத்தில் 7 சபைகளுக்குறிய 7 தூதர்களை ஏந்தி நட்சத்திரங்களாக பிரகாசிக்கச்செய்கிறார். இந்த 7 தூதர்களும் யார் என்ற விளக்கம் வேதத்தில் பார்க்கும்போது, 1) சபைகளின் ஊழியர்கள் (2 கொரி 8: 23)  2) சபைகளின் பணிவிடை தேவ தூதர்கள்  எபி 1: 14. சங் 104: 4, யோவான் 5: 33, 35.

7. வச 17, 18: மரித்தும் உயிரோடு எழுந்தவர் கிறிஸ்து ஒருவரே. நம்மையும் உயிரோடு எழுப்புவார். லூக்கா 24: 5, யோவான் 5: 33,35.

Author: Rev. Dr. R. Samuel 


Author: Rev. Dr. R. Samuel