ஒரு பணியாளர் தனது ராஜினாமா கடிதத்தை டாய்லட் பேப்பரில் எழுதியுள்ளார். அவர் எழுதியது; “நான் டாய்லட் பேப்பரைப் போல் உணர்ந்தேன்; தேவைப்படும் போது பயன்படுத்தப்பட்டு, பிறகு கவனிக்கப்படாமல் தூக்கி எறியப்படுவதால், நான் ராஜினாமா செய்கிறேன்” (தி இக்கனாமிக் டைம்ஸ், 16 ஏப்ரல் 2025). யாராவது உங்களை பயன்படுத்தி, அதற்கான பாராட்டோ இழப்பீடோ வழங்காமல் விட்டுவிட்டால், அது சஞ்சலத்தையும் கோபத்தையும் விரக்தியையும் ஏற்படுத்தும்.
தேவனால் அளிக்கப்பட்ட மரியாதை:
ஒருவரின் சேவையோ அல்லது பங்களிப்போ அங்கீகரிக்கப்படாமல், பாராட்டப்படாமல் இருக்கும்போது, அவர் தன்னை மதிக்கப்படாதவராகவே நினைக்கிறார். பலருக்கும், ஒரு நபரின் மரியாதை மற்றவர்களின் பாராட்டில், உதாரணமாக மேலாளரின் அங்கீகாரம் அல்லது விருதுகளில் தான் இருக்கிறது. ஆனால், வேதாகம உண்மை வேறாகும். முதலில், மனித மரியாதை உள்ளார்ந்ததாகும்; ஏனெனில் தேவன் மனிதனை தன் சாயலில் படைத்துள்ளார் (ஆதியாகமம் 1:27). இந்த மரியாதையை எந்த மனிதரும் அளிக்க முடியாது. இரண்டாவதாக, தேவன் மனிதனை நேசித்ததால், தனது குமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை, மனிதகுலத்திற்காக மரிக்க உலகிற்கு அனுப்பினார் (யோவான் 3:16). தேவன் மனிதனை நேசித்தார், மரியாதையும் அளித்தார். மூன்றாவதாக, தேவன் எல்லா மனிதருக்கும் ஆவிக்குரிய உரிமையையும் வழங்கியுள்ளார். தங்களுடைய பாவங்களை விட்டு மனந்திரும்பி, உண்மையான தெய்வம் கர்த்தர் என விசுவாசித்து, அவரை ஏற்றுக்கொள்பவர்கள், ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகளாக மாறுகிறார்கள் (யோவான் 1:12).
அநீதியின் கருவிகள்:
சுவாரஸ்யமாக, எல்லா மனிதர்களும் தேவனாலோ அல்லது சாத்தானாலோ பயன்படுத்தப்படுகிறார்கள். நடுநிலையான நிலை எதுவுமில்லை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறியாதவர்கள், அறியாமலேயே அநியாயத்திற்கான கருவிகளாக மாறுகிறார்கள் (ரோமர் 6:13). எல்லாரும் பாவம் செய்துள்ளதால், அவர்கள் பாவத்துக்கும் சாத்தானுக்கும் அடிமைகளாக இருக்கிறார்கள் (ரோமர் 3:23). ஆகவே, சாத்தான் மனிதர்களை அநியாயமான அல்லது பாவமுள்ள செயல்களைச் செய்ய பயன்படுத்துகிறான். அவர்கள் நல்லதைச் செய்ய முயன்றாலும் கூட, அது தேவனுடைய பார்வையில் மாதவிடாய் துணிபோல் (அழுக்கான கந்தை) தான் இருக்கும் (ஏசாயா 64:6). இதனால், இந்த உலகத்தில் பெரும்பாலானவர்கள், மற்றவர்களின் சுயநலத்திற்கு உபயோகப்படுத்தப்படுகிறார்கள், பிறருக்கு லாபமாக செயல்படுகிறார்கள் அல்லது அடக்குமுறைக்கும் உரிமை இழப்பிற்கும் உள்ளாகிறார்கள்.
நீதியின் கருவிகள்:
இதற்கு மாறாக, தேவன் தம்முடைய சீஷர்களை நற்காரியங்களுக்கு பயன்படுத்துகிறார். மக்கள் சத்தியத்தை அறியவும், பாவ மன்னிப்பை பெறவும், நீதிமான்களாக மாறவும், நித்திய ஜீவனை அடையவும், பரலோக நம்பிக்கையுடன் வாழவும் தேவன் உதவுகிறார். அவரது சீஷர்கள் வாழ்க்கையின் எல்லா துறைகளிலும் தேவனுடைய நீதி மற்றும் நற்குணங்களை வெளிப்படுத்துகிறார்கள்.
நான் சாத்தானால் பயன்படுத்தப்படும் கழிப்பறை காகிதத்தைப் போல இருக்கிறேனா அல்லது தேவனுடைய கைகளில் பரிசுத்த கருவியாக இருக்கிறேனா?
Rev. Dr. J.N. Manokaran