தேவனுடைய செயல்கள் எப்போதும் முழுமையானவை, நிறைவானவை, பரிபூரணமானவை, குறையற்றவை ஆகும்.
முழுமையான சமாதானம்:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சமாதானத்தின் பிரபு ஆவார் (ஏசாயா 9:6). அவருடைய மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றின் மூலம் மனந்திரும்புகிற பாவிகள் விசுவாசத்தினால் தேவனோடு ஒப்புரவாக்கப்படுகிறார்கள். ஆகையால் மனிதன் தேவனோடு சமாதானத்தை அனுபவிக்க முடிகிறது கர்த்தர் அளிக்கும் சமாதானம் உலகம் தருகிற சமாதானத்தைப் போலல்ல. உலகம் அதை கொடுக்கவும் முடியாது; பறித்துக்கொள்ளவும் முடியாது
முழுமையான இரட்சிப்பு:
சிலுவையில் இயேசு கிறிஸ்து, “முடிந்தது” என்று கூறியபோது, மனிதகுலத்திற்கான இரட்சிப்பின் கிரியை முழுமையாக நிறைவேற்றப்பட்டது (யோவான் 19:30). இனி மனிதன் இரட்சிக்கப்படுவதற்காக சடங்குகள், பலிகள், சம்பிரதாயங்கள், கிரியைகள் அல்லது காணிக்கைகள் தேவையில்லை.
முழுமையான தேவாயுதம்:
ஒவ்வொரு கிறிஸ்தவரும் ஆவிக்குரிய போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். சாத்தான், பிசாசுகள், பாவம், சோதனைகள் மற்றும் சாத்தானால் தூண்டப்படுகிற மனிதர்கள் கிறிஸ்தவர்களின் விசுவாசத்தை குலைக்க போராடுகின்றனர். ஆகையால் “தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தைத் தரித்துக்கொள்ளுங்கள்” என்று வேதாகமம் அறிவுறுத்துகிறது (எபேசியர் 6:11). இந்தப் போருக்குத் தேவையான அனைத்து உபகரணங்களையும் அணிந்துகொண்டு, போருக்கு ஆயத்தமாக இருக்குமாறு பவுல் சீஷர்கள் அனைவருக்கும் அறிவுறுத்துகிறார். அவற்றில் சிலவற்றை மட்டும் அணிந்துகொள்வது ஆபத்தானதாக அமையலாம்; அது, சீஷரை வெற்றிபெறப் போராடுவதற்குப் பதிலாக பலவீனப்படுத்தி விடும்.
முழுமையான வேதாகமம்:
அறுபத்தாறு புத்தகங்களைக் கொண்ட பரிசுத்த வேதாகமம் தேவனுடைய வார்த்தையாகும். அது விசுவாசிகளை எல்லா நற்கிரியைகளுக்கும் ஆயத்தப்படுத்துகிறது (2 தீமோத்தேயு 3:15-17). தேவனுடைய வார்த்தை பரிபூரணமானது (சங்கீதம் 19:7).
முழுமையான ஆலோசனை:
போதகர்களும் தலைவர்களும், கடவுளின் மக்களைப் போதிப்பதற்கும், அவர்களை ஆவிக்குரிய ரீதியில் கட்டியெழுப்புவதற்கும், அவர்களைப் பணிக்கு ஆயத்தப்படுத்துவதற்கும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். பவுல் இதற்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறார். தேவனின் முழுமையான ஆலோசனையை அறிவிப்பதிலிருந்து தான் பின்வாங்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார் (அப்போஸ்தலர் 20:27). எபேசுவில், அவர் கூடாரங்கள் தைப்பவராகப் பணியாற்றினார்; மதிய உணவு இடைவேளையின்போது 'திறன்னுவின் மண்டபத்தில்' நற்செய்தியைப் பிரசங்கித்தார்; வேலை முடிந்த பிறகு வீடுகள்தோறும் சென்று பிரசங்கித்தார்.
முழுமையான மனிதகுலம்:
நற்செய்தியானது முழு மனிதகுலத்திற்கும் உரியதாகும். மனிதர்களுக்காக மரித்து, மீண்டும் உயிர்த்தெழுந்து, பரலோகத்திற்கு ஏறிச்செல்லும் நோக்கத்தோடு அவதாரமாக வந்த இரட்சகர் பெத்லகேமில் பிறந்திருக்கிறார் என்று தேவதூதர்கள் மேய்ப்பர்களுக்கு அறிவித்தனர்.
முழுமையான உலகம்:
உலகத்திலுள்ள அனைத்து நாடுகளையும், இனங்களையும், வர்க்கங்களையும், குலங்களையும், சாதிப்பிரிவுகளையும், மொழிகளையும், தலைமுறைகளையும் சார்ந்த அனைத்து மக்களுக்கும் நற்செய்தியைப் பிரசங்கிக்க தேவன் தமது சபைக்குப் பணித்திருக்கிறார் (மத்தேயு 28:18-20).
பூரணராகிய தேவன், எல்லாவற்றையும் முழுமையான (நிறைவான) விதத்திலேயே செய்கிறார் என்பதை நான் உணர்ந்திருக்கிறேனா?
Rev. Dr. J.N. Manokaran