மக்கள் திருமணம் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு அழைக்கப்படுவதை விரும்புகிறார்கள். ஆனால் அழைப்பு கிடைத்த பிறகும் சிலர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்காமல் இருக்கலாம். மற்ற சிலர் பங்கேற்க விரும்பினாலும், அழைப்பு கிடைக்காததால் மனவேதனை அடைகிறார்கள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மக்களின் அழைப்பை மதித்து, அவர்களுடைய இல்லங்களுக்குச் சென்று, அவர்களோடு தங்கி, போதித்து, ஆசீர்வதித்தார்.
மார்த்தாள்:
கர்த்தராகிய இயேசுவும் அவருடைய சீஷர்களும் ஒரு கிராமத்திற்குச் சென்றபோது, மார்த்தாள் அவரைத் தனது வீட்டிற்கு அழைத்தாள் (லூக்கா 10:38). அந்தக் கிராமத்தில் பல வீடுகள் இருந்தன. ஆனால் மார்த்தாள் மட்டுமே ஆண்டவரைத் தன் வீட்டிற்கு அழைக்க முன்வந்தாள். இயேசு அந்தக் கிராமத்திற்கு வருவதை பலர் அறிந்திருந்தாலும், அவர்கள் அக்கறையற்றவர்களாகவும் அலட்சியமானவர்களாகவும் இருந்தனர். ஆனால் மார்த்தாள் தன்னுடைய முனைப்பினால் ஆண்டவரை வரவேற்றாள்.
கானா ஊர்த் திருமணம்:
கானா ஊரில் நடந்த திருமணத்திற்கு இயேசுவும் அவருடைய சீஷர்களும், அவருடைய தாயார் மரியாளும் அழைக்கப்பட்டிருந்தனர் (யோவான் 2:1-11). ஆண்டவரின் பிரசன்னம் அந்தத் தம்பதியரை அவமானத்திலிருந்தும் நிந்தனையிலிருந்தும் காப்பாற்றியது. விருந்தினர்களுக்குப் பரிமாற வேண்டிய திராட்சரசம் தீர்ந்துவிட்டது. அப்போது ஆண்டவர் தண்ணீரைத் திராட்சரசமாக மாற்றும் அற்புதத்தைச் செய்து, அந்தக் குடும்பத்தை கௌரவித்தார்.
சமாரிய கிராமம்:
இயேசு சமாரியப் பெண்ணைச் சந்தித்தார். அவருடனான உரையாடலின் மூலம், அவர் மேசியா என்பதை அந்தப் பெண் உணர்ந்தாள். உடனே தன் கிராம மக்களிடம் சென்று இதை அறிவித்தாள். கிராம மக்கள் இயேசுவை வந்து சந்தித்து, தங்களுடன் தங்கி போதிக்குமாறு வேண்டினர். ஆண்டவரும் அவர்களுடைய அழைப்பை ஏற்று இரண்டு நாட்கள் அங்கே தங்கினார் (யோவான் 4:40,42).
குஷ்டரோகி சீமோன்:
ஒருகாலத்தில் குஷ்டரோகியாக இருந்து சுகமடைந்திருக்கக்கூடிய சீமோன் என்ற பரிசேயன், இயேசுவையும் அவருடைய சீஷர்களையும் விருந்திற்கு அழைத்தான் (மத்தேயு 26:6-13; மாற்கு 14:3-9). ஆண்டவரும் அவனுடைய அழைப்பை ஏற்றுக்கொண்டார். அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்படாவிட்டாலும், அந்த விருந்தில் கலந்து கொண்டார். அங்கு ஒரு பெண் விலையுயர்ந்த நறுமணத் தைலத்தால் ஆண்டவரை அபிஷேகம் செய்தார். அதன் மூலம், வெறும் சடங்குகளையும் சட்டங்களையும் கடைப்பிடிப்பதைவிட, ஆண்டவரை அன்போடு நேசிப்பதன் முக்கியத்துவத்தை இயேசு அங்கிருந்தவர்களுக்கு போதித்தார்.
கதவைத் தட்டுதல்:
இன்றும் ஆண்டவராகிய இயேசு ஒவ்வொரு மனிதனின் இருதயக் கதவையும் தட்டிக்கொண்டிருக்கிறார். அவருடைய சத்தத்தைக் கேட்டு விசுவாசத்தோடு கதவைத் திறப்பவர்கள் உள்ளத்தில், பிதாவும் குமாரனும் வந்து வாசம்பண்ணுவார்கள் (வெளிப்படுத்தின விசேஷம் 3:20).
நான் என் இருதயத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அழைத்து வரவேற்றிருக்கிறேனா?
Rev. Dr. J.N. Manokaran