வெட்கமற்ற சோம்பேறிகள்

அநேகர் சோம்பேறிகளாகவும், பின்தங்கியவர்களாகவும், சோம்பல் குணம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். சோம்பேறிகளின் நான்கு குணங்களை வேதாகமம் விவரிக்கிறது (நீதிமொழிகள் 26:13-16). இந்த நான்கும், தன் பரிதாப நிலைக்குச் சாக்குப்போக்குகளைச் சொல்லி, மற்றவர்களைக் குறை கூறும் ஒரு சோம்பேறியின் மனதைப் பற்றிய சிறந்த பகுப்பாய்வு அல்லது நோயறிதல் ஆகும்.

1. வழியில் சிங்கம்:
இது கற்பனை செய்யப்பட்ட அல்லது உணரப்பட்ட ஆபத்துக்களுக்கான ஒரு சாக்குப்போக்கு. சிங்கங்கள் தெருக்களில் அலைவதில்லை; அவை காடுகளில் இருக்கின்றன. இது அதிகப்படியான எச்சரிக்கையாகவும் இருக்கிறது. சிலர் அசௌகரியத்தையும் வலியையும் வெறுக்கிறார்கள்; எனவே, தங்கள் கடமையையும் அழைப்பையும் நிறைவேற்றாததற்கு காரணங்களைக் கண்டுபிடிக்கிறார்கள். சிரத்தை எடுப்பதை வெறுத்தல், தேக்கநிலை மற்றும் முன்னேற்றமின்மை ஆகியவை இதில் அடங்கும். தலைமைத்துவம் என்பது விசுவாசத்தின் ஒரு சாகசப் பயணம். சாகசங்களில் எப்போதும் ஆபத்துகள் உண்டு.

2. கதவு அதன் கீல்களில் சுழல்வது போல:
சிலர் பழைய, தேய்ந்த பாதைகளில் பயணிக்க விரும்புகிறார்கள். அவர்கள் தினசரி வழக்கங்களில் சிக்கிக் கொள்கிறார்கள். அவர்கள் மிகவும் வேலை அலுவலாக இருப்பதுபோல தெரிந்தாலும், ஆக்கத்திறன் இல்லாதவர்கள். செயல்பாடு என்பது முன்னேற்றத்திற்கு ஒத்த சொல் அல்ல. துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் வேலைப் பளுவுக்கும் (busyness) ஆக்கத்திறனுக்கும் (productivity) உள்ள வித்தியாசத்தை அறிந்திருப்பதில்லை. வேலைப் பளு பலனளிக்கவில்லை என்றால், அது அதன் கீல்களில் சுழலும் கதவைப் போல, முன்னோக்கி நகரவில்லை. ஆக்கத்திறன், பலன், மற்றும் முன்னேற்றம் ஆகியவை பயனுள்ள தலைமைத்துவத்தின் ஆதாரங்கள்.

3. தன் கையை வாய்க்குக் கொண்டுவரக்கூட மாட்டான்:
நல்ல நோக்கங்கள் நல்ல முடிவுகள் அல்ல. நல்ல யோசனைகள் செயல்படுத்தப்படாவிட்டால் பயனற்றவை. பலர் நல்ல திட்டங்களைத் தொடங்குகிறார்கள், ஆனால் புத்தாண்டு உறுதிமொழிகளைப் போல அவற்றை ஒருபோதும் முடிப்பதில்லை. ஆம், அவை பாதி எழுதிய கட்டுரைகள், அல்லது பொருளடக்கத் தலைப்புகள் மட்டும் எழுதப்பட்ட ஒரு புத்தகமாக  அல்லது முடிக்கப்படாத திட்டங்களாக இருக்கலாம். தொடங்கிதை இறுதிவரை முடிப்பது ஒரு ஒழுக்கம். விடாமுயற்சியற்றவர்கள் சோம்பேறிகளாக மாறக்கூடும்.

4. தன் பார்வைக்கு ஞானமுள்ளவன்:
சோம்பேறி எப்போதும் தன்னை மற்றவர்களுடன் ஒப்பிடுகிறான். "அவனை அல்லது அவளை விட நான் சிறப்பாகச் செய்ய முடியும்" என்று முணுமுணுக்கிறான். ஆணவமான மனப்பான்மையுடன், ஒரு சோம்பேறி மற்றவர்களின் நல்ல சாதனைகளை அலட்சியப்படுத்துகிறான். சில சமயங்களில், சோம்பேறிகள் சூழ்நிலை மற்றும் வழிமுறைகளைக் குறை கூறுகிறார்கள், ஆனால் ஒருபோதும் செயல்படுவதில்லை. சில சோம்பேறிகள் தங்களுக்குள்ளேயே ஏமாற்றப்பட்டு வாழ்கிறார்கள், இது சரியான நேரம் இல்லை என்று கூறி, பொருத்தமான நேரத்திற்காக முடிவில்லாமல் காத்திருக்கிறார்கள். ஒரு சோம்பேறி தனது திறமையின்மையையும் இயலாமையையும் மற்றவர்களை விமர்சிப்பதன் மூலமோ அல்லது சில விஷயங்களைக் குறை கூறுவதன் மூலமோ மறைக்கிறான்.

நான் என் வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும் சோம்பேறியா அல்லது விழிப்புள்ள நபரா? 

Rev. Dr. J.N. Manokaran