சமீபத்தில், ஒரு உலகளாவிய நிறுவனத்தில் நீண்ட காலமாகப் பணியாற்றிய ஊழியரின் மனைவி, தனது வேதனையையும் மனவருத்தத்தையும் சமூக வலைதளத்தில் வெளிப்படுத்தினார். அந்த நிறுவனத்தில் 25 ஆண்டுகள் நம்பிக்கையுடன் பணியாற்றிய அவரது கணவர், கணினி குறியீட்டு முறையில் சீரற்ற (random) தேர்வின் அடிப்படையில் பணிநீக்கம் செய்யப்பட்டார். தற்செயலாக, அது அவரது 48வது பிறந்த நாளாக இருந்தது (மே 18, 2025, livemint.com). வேதாகமம், ஏழைகளை, பலவீனர்களை, அதிகாரமற்றவர்களை, பாதுகாப்பற்றவர்களை அடக்க வேண்டாம் என்று எச்சரிக்கிறது (நீதிமொழிகள் 22:22-23).
லாப நோக்கம்:
பல தொழில் நிறுவனங்கள் லாபத்தைத் தேடி, இரக்கமற்ற முறைகளைப் பயன்படுத்தி, தங்களது ஊழியர்களின் நலனில் சமரசம் செய்கின்றன. அதே சமயம், நுகர்வோர் குறைந்த விலையில் அதிக சேவைகளை கோருகின்றனர். இதனால், நிறுவனங்கள் செலவுகளை குறைப்பதிலும் நுகர்வோரைக் கவர்வதிலும் சுழல்வோட்டத்தில் (vicious cycle) செயல்படுகின்றன. வாடிக்கையாளர் ராஜாவாக இருக்க, நிறுவன பங்குதாரர்கள் தங்களது ஊழியர்களை, கணினி குறியீட்டு முறைகள் போன்ற அமைப்புகளின் அடிமைகளாக விற்றுவிடுகின்றனர். முடிவெடுக்கும் செயல்முறையில் உதவியற்ற நிலையைச் சுட்டிக்காட்டி, தொழில்நுட்பத்தை கொடுமைகளை மறைக்கும் முகமூடியாகப் பயன்படுத்துகின்றனர். வேதாகமம், அயலாரைக் (தொழிலாளர்கள் / ஊழியர்கள்) அடக்குவதையும், லாபத்திற்காக சுரண்டுவதையும் எச்சரிக்கிறது (லேவியராகமம் 19:13). தொழிலாளர்களின் கூலியை குறைத்தோ அல்லது பறித்தோ செய்யும் அநீதி மற்றும் அக்கிரமம் குறித்து எரேமியா எச்சரிக்கிறார் (எரேமியா 22:13). தொழிலாளர்கள் தங்களது உரிமைகளும் கண்ணியமும் பறிக்கப்பட்டு, பணக்காரர்கள் அவர்களை சுரண்டி சாப்பிடுகின்றனர். கிறிஸ்தவ அணுகுமுறை என்பது, தொழிலாளர்களின் கண்ணியத்தை பறிக்காமல், நியாயமான லாபத்தைப் பெற்று, நுகர்வோருக்குச் சிறந்த பொருட்களையும் சேவைகளையும் வழங்குவதாகும். “தாலந்து உவமை” (Parable of Talents) லாபம் என்பது நிறுவன நிலைத்தன்மைக்கு அவசியமானது என்பதை கற்பிக்கிறது (மத்தேயு 25:14-30).
மக்கள் நோக்கம்:
தொழில் முனைவோருக்கு மூன்று பங்குகள் உள்ளன. முதலாவது, உக்கிராணக்காரரைப் போல, திறமையான உற்பத்தி மற்றும் மேலாண்மைக்கான அமைப்புகள், கட்டமைப்புகள், மற்றும் அடிக்கோள்களை உருவாக்க வேண்டும். முதலீடுகள் லாபம் தர வேண்டும்; இழப்புகளால் மட்டுமே நிறுவனம் இயங்க முடியாது. இரண்டாவது, சிரத்தையுடன் உழைக்கும் ஊழியர்களைப் போல, வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளையும் பொருட்களையும் வழங்க வேண்டும்; குறைவான சேவைகள் மற்றும் குறைபாடுள்ள பொருட்கள் அவர்களை வியாபாரத்திலிருந்து வெளியேற்றும்.
மூன்றாவதாக, மேய்ப்பர்களைப் போல, ஊழியர்களை பராமரித்து, வளர்த்து, தேவைகளை பூர்த்தி செய்து, வழிநடத்த வேண்டும். ஊழியர்கள் தங்கள் திறமைகள், தாலந்துகள், மற்றும் திறன்களைப் பயன்படுத்தி திருப்தியும் குறிக்கோளும் அடைய முடியும். தலைமைத்துவத்தின் உண்மையான சவால் உக்கிராணக்காரன், சேவைக்குணம் (பணிவிடைக்காரன்), மற்றும் மேய்ப்பர் பணி ஆகிய மூன்றையும் சமநிலைப்படுத்துவதில் உள்ளது.
தலைமை என்பது ஒரு மேய்ப்பன், உக்கிராணக்காரன் மற்றும் பணிவிடைக்காரன் இருப்பதன் ஒருங்கிணைப்பு என்பதை நான் புரிந்துகொள்கிறேனா?
Rev. Dr. J.N. Manokaran