திருமண உடன்படிக்கை

திருமணம் என்பது சுலபமான உடன்படிக்கை அல்லது வணிக ஒப்பந்தம் அல்ல; அது ஒரு புனித உடன்படிக்கை. ஒரு தம்பதியினர் திருமணம் செய்கிறார்கள் என்பது, திருமண விழாவை மட்டும் கொண்டாடுவதற்காக அல்ல; மாறாக, முழு திருமண வாழ்க்கையையும் ஒன்றிணைந்து கொண்டாடுவதற்காகும்.

ஒரு தேவையும் அதற்கான ஏற்பாடும்:
மனிதன் பரதீஸ் எனப்படும் ஏதேன் தோட்டத்திலேயே இருந்தபோதும், அவன் தனிமையிலேயே இருந்தான்.  அவனுக்கு செல்லப்பிராணியாக தேவன் எதையும் கொடுக்கவில்லை.  இன்னொரு ஆணையும் தேவன் படைத்து அவனுக்கு தரவில்லை.  தேவன் ஆதாமின் ஓர் எலும்பைக் கொண்டு ஏவாளை உருவாக்கினார்.  அந்த எலும்பு தலையிலிருந்தோ அல்லது பாதத்திலிருந்தோ எடுக்கப்படவில்லை; ஒருவன் மற்றொருவரை ஆட்சி செய்யவோ, அடிமைப்படுத்தவோ வேண்டாமெனத்தான்.  அவள் அவனுக்கு உதவியாளராகவும், துணையாகவும் இருக்கப் படைக்கப்பட்டாள்.  முதல் மனித உறவு ஆதாமும் ஏவாளும் கணவன்-மனைவியாக இருந்ததுதான்.

உடன்படிக்கையின் முக்கியத்துவம்:
இருவரும் “ஒரே மாம்சமாக” ஆனார்கள் (ஆதியாகமம் 2:24). இது மனித அறிவால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத, அதிசயமான, மர்மமான இணைப்பு.  இருவரும் மனதளவில் தங்கள் பெற்றோரிலிருந்து பிரிந்து, ஒருவருக்கொருவர் பிணைய வேண்டும்.  அந்த உடன்படிக்கை, வாழ்க்கைத்துணைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறது. “உடன்படிக்கை” என்பது வாழ்நாள் முழுவதும் விசுவாசம், பகிர்ந்து வாழ்தல், அன்புடன் பராமரித்தல், வளர்த்தல், சேவை செய்தல் ஆகியவற்றைக் குறிக்கிறது.  திருமண வாக்குறுதி அல்லது உறுதி வாழ்க்கைத்துணைக்கே வழங்கப்படுகிறது; ஆகையால் அது தனித்துவமானது, சிறப்புடையது, குறிப்பிட்டதாகும்.  அது தேவனின் சந்நிதியிலும், சபையிலும், உறவினர்களும், சமூகமும் முன்னிலையிலும் செய்யப்படுகிறது.  இந்த வாக்குறுதி வேறு எவரிடமும் செய்யப்படுவதில்லை. “ஒரே மாம்சம்” என்பது: ஆவிக்குரிய, உடல், உணர்ச்சி, அறிவு, உளவியல் ஆகிய துறைகளில் உள்ள ஒன்றிப்பாகும்.

ஆவிக்குரிய முக்கியத்துவம்:
திருமணத்தின் அடித்தளம் தேவனுடன் கொண்டுள்ள சரியான உறவாகும். முப்பரி நூல்கள் தேவன், கணவன், மனைவி என இணையும் போது வலிமையான பந்தம் உண்டாகிறது (பிரசங்கி 4:12.) அதில் வலிமையும், நிலைத்தன்மையும், அசைக்க முடியாத தன்மையும் இருக்கிறது. திருமணம் என்பது தம்பதியரை கிறிஸ்துவைப் போன்று ஆக்குவதற்கான புனித உறவாகும். ஆகையால், திருமணத்தின் நோக்கம் மாற்றமும் பரிசுத்தமாக்கலும் நிறைவேறும் ஒரு பயணமாகும். அது கணவனையும் மனைவியையும் தனித்தன்மை, அகங்காரம், பெருமை, சுயநலத்திலிருந்து விடுவிக்கிறது.  அன்பும் அர்ப்பணிப்பும் கொண்ட ஒருவருக்கொருவர் அன்போடு வாழ உறுதி செய்ய உதவுகிறது. மேலும் யாரும் பூரணமானவர்கள் அல்ல. அதனால் அன்பு பாவங்களின் பெரும்தொகையை மூடுகிறது. ஒப்புக்கொள்வது, மனந்திரும்புதல், மன்னிப்பு கேட்பது, ஒப்புரவாகுதல், சமாதானப்படுத்துதல் ஆகியவை அன்றாடம் சிரத்தையுடன் கடைப்பிடிக்க வேண்டியவையாகும்.

உடன்படிக்கைக்கு அச்சுறுத்தல்கள்:
சாத்தான் குடும்பங்களை வெறுக்கிறான்; அவற்றை குலைக்கவும் அழிக்கவும் இரவுநாளும் பாடுபடுகிறான். சாத்தானின் ஆயுதங்கள் சந்தேகம், குழப்பம்,  உண்மையை திரித்தல், உண்மையை தவறாகப் புரிந்துகொள்ளச் செய்தல், காரணமில்லாத எதிர்பார்ப்புகளை உருவாக்குதல் ஆகியவையாகும்.

தேவன் நியமித்த திருமணத் திட்டத்தை நான் புரிந்துகொள்கிறேனா?

Rev. Dr. J.N. Manokaran