கேவென்டிஷ் ஆய்வகம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஒரு பிரிவு ஆகும். இது சர் ஹென்றி கேவென்டிஷின் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த ஆய்வகத்தில் பணியாற்றிய 30க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் நோபல் பரிசு பெற்றுள்ளனர். கட்டிடத்தின் நுழைவாயிலில் ஒரு கல்வெட்டு உள்ளது; அது அந்த நிறுவனத்தின் தத்துவக் குறியீடும் ஆகும்; “கர்த்தரின் செய்கைகள் பெரியவைகளும், அவைகளில் பிரியப்படுகிற எல்லாராலும் ஆராயப்படுகிறவைகளுமாயிருக்கிறது” (சங்கீதம் 111:2). மனிதர்கள் தேவனுடைய படைப்புகளை ஆராய்ந்து மகிழ வேண்டும்; அவற்றில் அவரின் வல்லமையும் தெய்வீக குணங்களும் வெளிப்படுகின்றன (ரோமர் 1:20). அவரது படைப்பையும், திட்டத்தையும், நோக்கத்தையும், தேவைகளையும் அறிந்து படிப்பது மிகுந்த பலனளிக்கும் ஒரு வேலையாகும்.
இயற்கை:
ஆயிரக்கணக்கான பல்கலைக்கழகங்கள், கோடிக்கணக்கான மாணவர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், கோடிக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகள், இதழ்கள், புத்தகங்கள் இவை அனைத்தும் தேவனுடைய படைப்பின் அறிவுக் கடலில் மேற்பரப்பை மட்டும் தொட முடிகிறது. பூமியில் பிறந்து வாழ்ந்த எல்லா மனிதர்களின் எல்லைக்குட்பட்ட சிந்தனைகளாலும், தேவனுடைய அளவற்ற அறிவையும், அவர் குணங்களையும், கிரியைகளையும் முழுமையாகப் புரிந்துகொள்ள இயலாது. மனிதர்கள் அறிவைப் புவியியல், வேதியியல், உயிரியல், விண்கலை, தொழில்நுட்பம் போன்ற பல பிரிவுகளாக வகைப்படுத்தினாலும், அவர்கள் தேர்ந்தெடுத்த எந்த ஒரு துறையிலும் கூட முழுமையாகப் படித்து முடிக்கவோ அல்லது ஆராய்ந்து தீர்க்கவோ முடியாது.
வேதம்:
தேவன் தம்முடைய கிருபையால் தம்மை வெளிப்படுத்திக் காட்டினார்; அதில் நியாயப்பிரமாணம், தீர்க்கதரிசிகள், சங்கீதங்கள், சுவிசேஷங்கள், நிருபங்கள் ஆகியவை அடங்குகின்றன. அறிஞர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இயற்கையை ஆராய்வது போலவே, கோடிக்கணக்கானோர் வேதத்தைப் படித்து, தேவன் வெளிப்படுத்திய உண்மையின் புதிய சிந்தனைகள் மற்றும் பயன்பாடுகளை தொடர்ந்து கண்டறிகிறார்கள். ஒவ்வொரு தலைமுறையிலும் வேதாகம அறிஞர்களும், இறையியலாளர்களையும் உருவாக்குகிறது. இருந்தாலும், தேவனுடைய ஒரே ஒரு குணமாகிய அவரது 'அன்பின்' அகலமும் நீளமும் உயரமும் ஆழமும் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாதது (எபேசியர் 3:18-19).
வரலாறு:
தேவனுடைய படைப்பிலிருந்து தொடங்கி, அவர் காட்டும் பராமரிப்பும் தாங்கும் வல்லமையும் மனித அறிவால் அளவிட முடியாதவை. ஒவ்வொரு தலைமுறையும், ஒவ்வொரு கலாச்சாரமும், ஒவ்வொரு தேசமும் தேவனுடைய விசுவாசத்தைக் கண்டறிந்துள்ளன. தேவன் சாட்சியில்லாமல் இருப்பதில்லை; பரலோகத் தேவன் மழையையும், கனிகளையும், உணவையும், மகிழ்ச்சியையும் வழங்குகிறார் (அப்போஸ்தலர் 14:17). தேவன் தமது நோக்கங்களையும் திட்டங்களையும் நிறைவேற்ற வரலாற்றின் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துகிறார். வேதாகமம் எவ்வாறு தேசங்களை மகத்தானதாக ஆக்கியது என்பதை அறிதல் ஆச்சரியமளிக்கிறது. ஜோர்டன் பீட்டர்சன் மற்றும் விஷால் மங்கள்வாடி ஆகியோர் வேதாகமம் உலகின் வரலாற்றை எவ்வாறு வடிவமைத்தது என்பதை எழுதியுள்ளனர். உலகத்தை வாழ்வதற்குத் தகுந்த சிறந்த இடமாக மாற்றுவதில் சபையின் பங்கு ஒரு பரவசமூட்டும் வரலாறாகும்.
நான் தேவனுடைய அதிசயமான வார்த்தையையும் உலகத்தையும் ஆராய்ந்து மகிழ்கிறேனா?
Rev. Dr. J.N. Manokaran