ஒரு பிரசங்கியார், ஒவ்வொரு மனிதனும் கடவுளின் அவதாரம் என்று காரணமற்ற உற்சாகத்தில் தெரிவித்தார். வருத்தத்துடன் கூறவேண்டியதாக உள்ளது, அவர் வேத சத்தியத்தைச் சொல்லவில்லை; உண்மையில் அதற்கு எதிர் மாறாகவே பேசுகிறார்.
கடவுள் மனிதனாக மாறுகிறார்:
மாம்சமாகுதலின் சத்தியம் வரலாற்றில் ஒருமுறை மட்டுமே நிகழ்ந்தது; அது மீண்டும் நிகழப்போவதில்லை. கடவுள், இயேசுவில் மனிதராக இருந்தார். அப்போஸ்தலனாகிய யோவான் இதைச் சிறப்பாக விளக்குகிறார்; “அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது” (யோவான் 1:14). இங்கே "மாம்சம்" என்பதின் அர்த்தம், மனிதராக ஆகுதல் ஆகும்.
சிலுவையில் அறையப்படுதல் மற்றும் இரட்சிப்பு:
தேவன் தமது குமாரனாகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை இந்த உலகத்திற்கு அனுப்பினார்; அவர் இயேசுவில் மனிதராக ஆனார் (யோவான் 3:16). இந்த அனுப்பப்பட்டதின் நோக்கம், பாவிகளை அழிப்பது அல்ல, அவர்களை ரட்சிக்க வேண்டும் என்பதே. பாவத்தின் விளைவாக மரணம் ஏற்படுகிறது; விழுந்த மனிதர்கள் தேவனுடைய இராஜ்ஜியத்திலே நிலைத்த வாழ்வு பெற, குமாரன் பிரதிநிதியாக மரிக்க வேண்டியது அவசியம். பாவத்திற்கு தண்டனை அளிக்கும் தேவனுடைய பரிசுத்தமும், தமது மகனைக் பலியாகக் கொடுத்த தேவனுடைய அன்பும், பாவமன்னிப்பை இலவசமாக வழங்கும் தேவனுடைய கிருபையும் என இம்மூன்றும் கல்வாரி சிலுவையில் சிறப்பாக வெளிப்பட்டன. அவர் மரித்தார், அடக்கம் செய்யப்பட்டார், மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார், பின்னர் பரலோகத்திற்கு பரமேறினார்.
தேவனின் சாயல்:
தேவன் தமது சாயலும் படிமமும் போல ஆதாமை (ஆண்) மற்றும் ஏவாளை (பெண்) படைத்தார் (ஆதியாகமம் 1:27). இதன் அர்த்தம், மனிதர்கள் தேவனின் நற்செயல், அறிவு, சிருஷ்டி ஆற்றல், மற்றும் தொடர்புத்திறன் போன்ற இயல்புகளை பிரதிபலிக்கின்றனர் என்பதாகும். அதே நேரத்தில், ஆதாமும் ஏவாளும் மற்றும் அவர்களது சந்ததியாரும் தேவனின் பிரதிநிதிகளாக இருப்பதுடன், பூமியை ஆளும் அதிகாரமும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
தவறான யோசனை:
ஆனால், உலகில் சில மத தத்துவங்கள், தேவனும் மனிதனும் ஒரே சாரம் கொண்டவர்கள் என்றும், மனிதன் தன்னுள்ளேயே தேவனைக் காண வேண்டுமெனவும் போதிக்கின்றன. எனவே, அவர்களது ஆன்மீகவாதம் தன்னுள் உள்ள தேவனைத் தேடுவதும் உணர்வதும் ஆகிறது. இத்தகைய தேடல் வீணானது; ஏனெனில் மனிதன் தேவனல்ல, அவன் படைப்பாளி அல்ல, படைக்கப்பட்டவனே. பாவத்தால் மனிதன் வீழ்ந்து, தேவனுடைய மகிமையை இழந்துவிட்டான். இந்த வீழ்ந்த நிலையிலிருந்து மீட்பை தரக்கூடியது, மனதின் ஆழத்தில் ஒளியாய் பிரகாசிக்கும் சுவிசேஷத்தின் வெளிச்சம் மட்டுமே (2 கொரிந்தியர் 4:6).
நான் மனந்திரும்பி கிறிஸ்துவைப் பெற்றிருக்கிறேனா அல்லது வீணான தேடலில் ஈடுபட்டிருக்கிறேனா?
Rev. Dr. J.N. Manokaran