ஆரம்பக் கால கிறிஸ்தவ எழுத்தாளர் டெர்டுலியன் (Tertullian), கிறிஸ்தவர்கள் ஒருவரை ஒருவர் எவ்வாறு தியாகபூர்வமாக நேசித்தார்கள், கவனித்தார்கள், பகிர்ந்துக் கொண்டார்கள் என்பதைக் குறித்து இப்படிச் சொன்னார்; “அவர்கள் ஒருவரை ஒருவர் எவ்வாறு நேசிக்கிறார்கள் என்பதைப் பாருங்கள்!” அடக்குமுறைகள், வெறுப்பு, பகைமை நிறைந்த உலகில், சபைகள் சமாதானத்தின் அடைக்கலமாக விளங்கின.
அன்பின்மை:
உலகில் அன்பின் குறைவு பல பாவங்களுக்கு காரணமாகிறது.
காயீன் தன் சகோதரனை நேசிக்கவில்லை; பொறாமையால் அவனை கொன்றான் (ஆதியாகமம் 4:8). அன்பு இல்லாத இடத்தில் சண்டைகளும் வாக்குவாதங்களும் உருவாகும் (யாக்கோபு 4:1). குழுக்கள், பிரிவுகள், எதிர்மறை மனப்பான்மைகள் தோன்றும் (1 கொரிந்தியர் 1:10–13).
அன்பின் தெய்வீகப் பண்பு:
கிறிஸ்துவில் உள்ளவர்கள் இனி ஆவிக்குரிய குருடர்களல்லர் (2 கொரிந்தியர் 4:4). அவர்கள் இருளில் நடப்பதில்லை; வெளிச்சத்தில் நடக்கிறார்கள். அதனால் ஒருவரோடு ஒருவர் உறவாடி, தேவனுடைய அன்பினால் இணைக்கப்படுகிறார்கள் (1 யோவான் 3:14). தேவன் அன்பாக இருக்கிறார்; அவருடைய பிள்ளைகளாக இருப்பவர்கள் அந்த தேவீக அன்பின் குணத்தையும் பெறுகிறார்கள் (1 யோவான் 4:8; யோவான் 1:12).
பரிசுத்தம்:
பவுல் எழுதுகிறார்; விசுவாசிகள் ஒருவரை ஒருவர் மிகுதியாக நேசிக்கும்படி, தேவன் அவர்களை அன்பில் நிலைநிறுத்துவாராக.
அதன் விளைவாக, அவர்கள் திரியேக தேவனின் சமூகத்தில் குற்றமில்லாதவர்களாகவும் பரிசுத்தமானவர்களாகவும் இருப்பார்கள் (1 தெசலோனிக்கேயர் 3:12–13). அன்பும் பரிசுத்தமும் தேவனை மகிமைப்படுத்தும் ஆரோக்கியமான உறவுகளை உருவாக்குகின்றன, சபைக்கும், மற்றவர்களுக்கும் ஆசீர்வாதமாக அமைகின்றது.
ஒற்றுமை:
கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில், விசுவாசிகள் புதுப்பிப்பு, ஆறுதல், சமாதானம், உடன்பாடு ஆகியவற்றை நாடுகிறார்கள்.
“இறுதியாக, சகோதரர்களே, சந்தோஷப்படுங்கள்;
சீர்படுத்தப்படுங்கள்; ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லுங்கள்; ஒரே மனதாயிருங்கள்; சமாதானமாக இருங்கள்; அப்பொழுது அன்பும் சமாதானமும் உள்ள தேவன் உங்களோடு இருப்பார்” (2 கொரிந்தியர் 13:11).
ஐக்கியம்:
சகோதர அன்பு, பரிசுத்தம் மற்றும் ஒற்றுமை ஆகியவை ஐக்கியத்திற்கு வழிவகுக்க வேண்டும் என்று பேதுரு எழுதுகிறார். அவர்கள் தாழ்மையுள்ளவர்களாக இருப்பதால், மனங்கள் ஐக்கியப்படுகின்றன. மேலும், அவர்களுடைய இருதயங்கள் மென்மையானவை அல்லது சாந்தமானவை (1 பேதுரு 3:8).
ஆவியின் கனி:
பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு விசுவாசியிலும் கிரியை செய்யும்போது, அவர்கள் ஆவியின் கனியைத் தருகிறார்கள். இந்தக் கனி ஐக்கியத்தை வளர்த்து செழிக்கச் செய்கின்றன. சபையாகிய தோட்டம் அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம் மற்றும் இச்சையடக்கம் ஆகிய நற்கனியால் நிரம்பியிருக்கிறது (கலாத்தியர் 5:22-23).
தேவனுடைய குடும்பத்தில் உள்ள என் சகோதர, சகோதரிகளை நான் உண்மையிலே நேசிக்கிறேனா?
Rev. Dr. J.N. Manokaran