பெரிதாக்கப்பட்ட இருதயம்

நவீன மருத்துவத்தின் படி, இருதயம் பெரிதாகும் நிலை (கார்டியோமேகலி) உயிருக்கு ஆபத்தானது. ஆனால், சங்கீதகாரனோ, ”நீர் என் இருதயத்தை விசாலமாக்கும்போது, நான் உமது கற்பனைகளின் வழியாக ஓடுவேன்” (சங்கீதம் 119:32) எனத் தொழுகின்றான். வேதாகமத்தில் ‘இருதயம்’ என்பது சில சமயங்களில் மனதைக் குறிக்கிறது; சில இடங்களில் உணர்வுகள், விருப்பங்கள், முடிவெடுத்தல் போன்ற செயல்களையும் குறிக்கக்கூடும்.

விசாலமான மற்றும் பரந்த மனது:
பொதுவாக பெரும்பாலானவர்கள் குறுகிய மனப்பான்மை கொண்டவர்களாகவும், இழிவான எண்ணங்கள் கொண்டவர்களாகவும், இரக்கமற்றவர்களாகவும் இருக்கிறார்கள், ஏனெனில் அவர்கள் அனைவரும் பாவிகள். இருந்தாலும், தேவனுடைய வார்த்தை ஒரு மனிதனை மாற்றுகிறது. அது தேவனைப்பற்றியும், உலகத்தைப்பற்றியும், வாழ்க்கையின் நோக்கத்தையும், நித்தியத்தையும், வாழ்க்கையின் அர்த்தத்தையும் பற்றிய புரிதலை விரிவுபடுத்துகிறது.

வலிமையான மனது:
ஒரு ஆரோக்கியமான இருதயம் என்பது ஒரு வலிமையான இருதயமாகும். கண்களின் ஒளி இருதயத்தை பூரிப்பாக்கும் (நீதிமொழிகள் 15:30). தேவனுடைய வார்த்தை ஒரு மனிதனுக்கு ஒளிவூட்டுகிறது; அதனால் அவன் எப்போதும் கர்த்தரில் மகிழ்ந்திருக்க முடியும்; இது ஒரு வலிமையான இருதயத்திற்கான சிறந்த வழியாகும் (பிலிப்பியர் 4:4). இது உடல் வலிமையைப் பற்றியது அல்ல, ஆனால் உணர்ச்சி, மனப்பாங்கு மற்றும் ஆவிக்குரிய வலிமையும் ஆகும்.

சிறந்த மனது: 
ஆவிக்குரிய ரீதியாக விசாலமான இருதயம் சாதாரண இருதயத்தைவிட சிறந்தது. அந்த இருதயம், கர்த்தரின் பிரமாணம் எழுதப்பட்ட புதிய இருதயமாகும்; எனவே அது சிறந்த உடன்படிக்கையுடன் கூடிய சிறந்த இருதயமாகும் (எரேமியா 31:33).

உறுதியான மனது: 
“என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது, தேவனே, என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது; நான் பாடிக் கீர்த்தனம் பண்ணுவேன்” (சங்கீதம் 57:7) என தாவீது பாடுகிறான். கர்த்தரை நேசிக்கும் நபருக்கு நிலைவரமான இருதயம் உண்டாகும், ஏனெனில் தேவனுடைய அன்பு உறுதியான அன்பாகும். பரிசுத்த ஆவியானவர், தேவனுடைய அன்பை விசுவாச மக்களின் இருதயங்களில் ஊற்றுகிறார் (சங்கீதம் 57:10; ரோமர் 5:5).

நம்பிக்கையான மனது: 
“எனக்கு விரோதமாக ஒரு பாளயமிறங்கினாலும், என் இருதயம் பயப்படாது; என்மேல் யுத்தம் எழும்பினாலும், இதிலே நான் நம்பிக்கையாயிருப்பேன்” என்று தாவீது எழுதுகிறார் (சங்கீதம் 27:3). தேவனுக்கு பயந்து, அவருக்குக் கீழ்ப்படிபவன், படைகள் உட்பட எதற்கும் பயப்படத் தேவையில்லை. 

ஞானமுள்ள மனது: 
விரிவடைந்த இருதயம் என்பது ஞானமுள்ள இருதயத்தை குறிக்கும். எது சரி, எது தவறு, எது நீதி, எது அநீதி, எது உண்மை, எது பொய், எது நன்மை, எது தீமை ஆகியவற்றைப் பகுத்தறியக்கூடிய நபர் தான் ஞானமுள்ளவர். “இருதயத்தில் ஞானமுள்ளவன் விவேகியென்னப்படுவான்; உதடுகளின் மதுரம் கல்வியைப் பெருகப்பண்ணும்” (நீதிமொழிகள் 16:21). இவ்விதமான அறிவு இல்லாத முட்டாள்கள் வீழ்ந்து தோல்வியடைவார்கள். ஞானமுள்ளவர்கள் மகிழ்ச்சியடைவார்கள் (நீதிமொழிகள் 23:15).

சுத்தமுள்ள மனது: 
விசாலமான இருதயம் என்பது தூய இருதயத்தையும் குறிக்கும். அத்தகையவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், ஏனெனில் அவர்கள் தேவனைக் காண்கிறார்கள் (மத்தேயு 5:8).

எனக்கு நல்ல விசாலமான மற்றும் பரந்த மனம் இருக்கிறதா? 

Rev. Dr. J.N. Manokaran