அனுஷ்கா தே சமீபத்தில் ஏற்பட்டுள்ள புதிய போக்கைப் பற்றி வருந்துகிறார்; “பெண்கள் பாரம்பரியமாகப் பராமரிப்பவர்களாகக் கருதப்பட்டவர்கள் தங்கள் கணவர்களை கொலை செய்வதில் முதன்மை குற்றவாளிகளாக அதிகரித்து வருவது, சமூகத்தின் நிலையான கருதுகோளை தலைகீழாக மாற்றுகிறது. ஒவ்வொரு சம்பவமும் சிக்கலான தனிப்பட்ட பின்னணியிலிருந்து தோன்றியிருக்கலாம், ஆனால் அனைத்தும் சேர்ந்து ஒரு நடுங்க வைக்கும் சாத்தியத்தைக் கிளப்புகின்றன: அன்பு அன்பில்லாததாக மாறி, மனசாட்சி சுயநலத்துக்காக விலகும் போது, திருமணமே முன்கூட்டியே திட்டமிட்ட துரோகத்திற்கான மேடையாக மாறக்கூடும். இரக்கம் இழக்கப்பட்டால், உறவு எதன் மீது நிலைத்து நிற்கும்?” (இந்தியா டுடே, ஜூன் 11, 2025). “இறுதிநாட்களில் மக்கள் சுயநலக்காரராகவும், இயல்பான அன்பில்லாதவர்களாகவும், கொடூரமானவர்களாகவும், இரக்கமற்றவர்களாகவும், ஏற்றுக் கொள்ள முடியாதவர்களாகவும், துன்மார்க்கர்களாகவும், கொடூரமானவர்களாகவும் இருப்பார்கள்” (2 தீமோத்தேயு 3:1-5) என பவுல் எழுதுகிறார்.
சிலிர்க்க வைக்கும் சாத்தியம்:
குற்றம் செய்வது ஆண்களுக்கே சாத்தியம், பெண்கள் அன்பும் சாந்தமுமான குணமுள்ளவர்கள் என்றே மக்கள் கருதினர். ஆனால் வேதாகமம் சொல்லுகிறது: “அனைவரும் பாவஞ்செய்தார்கள்; தேவனுடைய மகிமையிலிருந்து குறைவாய்த் தாழ்ந்தார்கள்” (ரோமர் 3:23). இதில் பெண்களுக்கு விதிவிலக்கு எதுவும் தரப்படவில்லை. குழந்தைகளாக இருந்தாலும், இளைஞர்களாக இருந்தாலும், ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் அனைவரும் பாவிகள்; அதனால் அவர்கள் பாவஞ்செய்கிறார்கள். மனிதர்களின் தரத்திற்கு ஏற்ப பாவங்களின் அளவு மாறுபடலாம். ஆனால் வேதாகமம் சொல்கிறது: “எப்படியெனில், ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான்”
(யாக்கோபு 2 : 10).). தேவனுடைய பார்வையில் பொய் சொல்லுதல் கூட கொலைசெய்வதற்குச் சமம்.
அன்பு அன்பற்றதாக மாறுகிறது:
திருமண உறவுகளில், அன்பு அன்பில்லாததாகவும், வெறுப்பு மற்றும் கடுமையான கசப்பாகவும் மாறி, அது வன்முறைக்கும் கொலைக்கும் வழிவகுக்கிறது. மனிதர்கள் தேவனை அன்பு செய்வதற்குப் பதிலாக தங்களை மாத்திரமே நேசிப்பவர்களாக இருந்தால், அவர்கள் பிறரை அதாவது தங்கள் வாழ்க்கை துணையையும் பிள்ளைகளையும் அன்பு செய்ய முடியாது. மனம், சித்தம், உணர்வுகள் அனைத்தையும் சார்ந்த உண்மையான அன்பே நிலைத்து நிற்கும்; வெறும் உணர்வுகளிலிருந்து எழும் அன்போ சிதைந்து மறைந்து போகும்.
சுட்டெரிக்கப்பட்ட மனசாட்சி:
செய்தியாளர், மனசாட்சி சுகவசதியால் மாற்றப்படுகிறது என எழுதுகிறார். அதாவது, மதிப்புகளே இல்லாத நிலை. வேதாகமம் இப்படிப்பட்டவர்களைப் பற்றி சொல்லுகிறது: அவர்களின் மனசாட்சி கருகிப்போயிருக்கிறது; அவர்கள் நெறி உணர்வு இழந்தவர்கள், மனக்கசப்பு, குற்ற உணர்வு அல்லது வெட்கம் இன்றி வாழ்கிறார்கள் (1 தீமோத்தேயு 4:2).
முன்கூட்டியே திட்டமிட்ட துரோகம்:
வருத்தமளிக்கும் விதமாக, இளைஞர்களின் வாழ்க்கையில் பொய், வஞ்சகம், ஏமாற்றம், துரோகம் ஆகியவை புதிய இயல்பாக மற்றும் சாதாரணமாக மாறி விட்டன.
இரக்கம் இழந்த நிலை:
ஒரு கொடூர மனோபாவம் பரவலாகக் காணப்படுகிறது. மக்கள் துன்புறும்போது இரக்கம் கொள்ளுவதற்குப் பதிலாக, பலர் பிறரின் துயரத்தில் சந்தோஷப்படுகிறார்கள்; அதனையே நிலை நிறுத்துகிறார்கள்.
நான் வேதாகம சட்டங்கள், மதிப்புகள் மற்றும் கொள்கைகளின்படி வாழ்கிறேனா?
Rev. Dr. J.N. Manokaran