காலணிகள் செய்த ஒரு மருத்துவர்


கிறிஸ்துவின் அன்பு நம்மை ஊக்குவித்து, ஊழியத்தில் ஈடுபடச் செய்கிறது என்று பவுல் எழுதுகிறார் (2 கொரிந்தியர் 5:14). திருச்சபை வரலாற்றில், கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்தி, தன்னலமின்றி மக்களுக்குச் சேவை செய்த பல நாயகர்கள் இருந்துள்ளனர்.

கிரஹாம் ஸ்டெயின்ஸ்:
ஸ்டெயின்ஸ் குடும்பம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாரிப்படா கிராமத்தில் வாழ்ந்து வந்தது.
கிரஹாம் ஸ்டெயின்ஸ், குஷ்டரோகிகளுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.
ஒருநாள் சந்தையில் சென்ற மாவட்ட ஆட்சியர் பாலகிருஷ்ணன் (IAS), ஒரு பழைய டயர் கடை முன் ஸ்டெயின்ஸ் அவர்களின் வாகனம் நிறுத்தப்பட்டிருந்ததைப் பார்த்தார்.
“இவ்வளவு நல்ல மனிதர் தன் வாகனத்திற்காக பழைய டயர்கள் வாங்க வந்தாரா?” என்று அவர் ஆச்சரியப்பட்டார். ஆனால் விசாரித்தபோது அவர் அறிந்த உண்மை இதுதான்; குஷ்டரோகிகளின் கால்விரல்கள் வடிவம் மாறியிருப்பதால், அவர்கள் சாதாரண செருப்புகளை அணிய முடியாது. அதனால், ஸ்டெயின்ஸ் பழைய டயர்களை வாங்கி, அவற்றை அளந்து, வெட்டி, தைத்துத் தன் கைகளால் குஷ்டரோகிகளுக்கான செருப்புகளை தயாரித்தார்.
குஷ்டரோகிகளுக்காக செருப்பு செய்த ஒரு மருத்துவர் – கிரஹாம் ஸ்டெயின்ஸ்.

உதவிக்கு விரைந்தவர்:
ஒரு பெரிய விபத்து நடந்தபோது, ஆம்புலன்ஸ் தாமதமானது.
அந்த நேரத்தில், பின்னாளில் அவர் உயிருடன் எரிக்கப்படவிருந்த அதே வாகனத்தை எடுத்துக்கொண்டு, தனது செவிலியர்களுடன் சேர்ந்து விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கச் சென்றார். காயமடைந்தவர்களை நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள கட்டாக் மருத்துவமனைக்கு, தன் சொந்த வாகனத்தில் அழைத்துச் சென்றார்.

நல்ல பணிக்காக இரத்த சாட்சியானவர்:
1999 ஜனவரி 23 அன்று, கிரஹாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது இரண்டு மகன்கள், தங்கள் வானில் தூங்கிக் கொண்டிருந்தபோது, வெறுப்பு சிந்தனையால் ஊக்குவிக்கப்பட்ட குழுவினரால் சுற்றிவளைக்கப்பட்டு, உயிருடன் எரிக்கப்பட்டனர்.‌ காயீன், ஆபேலைப் போல நீதிமானாக இருக்க முடியாததால் கோபம் கொண்டு அவனை கொன்றான் (ஆதியாகமம் 4:8). அதேபோல, தன்னலமற்ற அன்புச் சேவையைச் செய்ய முடியாதவர்கள், அதைச் செய்பவர்களைப் பார்த்து பொறாமை கொண்டு, திருச்சபையின் மீது வன்முறையையும் மரணத்தையும் தூண்டுகின்றனர்.

மன்னித்தவர்:
இந்த கொடூரச் செயலுக்குப் பின், கிரஹாம் ஸ்டெயின்ஸ் அவர்களின் மனைவி கிளாடிஸ் ஸ்டெயின்ஸ், அந்த குற்றவாளிகளை மன்னித்தார். தந்தையும் இரண்டு சகோதரர்களையும் இழந்த அவர்களின் மகளும் அதையே செய்தார். இந்த இரு பெண்களும், சிலுவையில் அறையப்பட்டபோது தம்மை துன்புறுத்தியவர்களுக்காக மன்னிப்புக் கேட்ட கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மாதிரியைப் பின்பற்றினார்கள் (லூக்கா 23:34).

என் வாழ்க்கையில் நான் தாழ்மை, அன்பு, இரக்கம் என தெய்வீக சுபாவங்களை வெளிப்படுத்துகிறேனா?

Rev. Dr. J.N. Manokaran