ஒரு விவசாயி மரித்தபோது, தனது சோம்பேறியான மகனை விட்டுச் சென்றான். இனி தான் விரும்பியபடி வாழ்க்கையை அனுபவிக்கலாம் என்று அந்த மகன் நினைத்தான். வயலுக்குச் செல்லவே இல்லை. நண்பர்களுடனும் வேலைக்காரர்களுடனும் சேர்ந்து வீட்டிலிருந்த தானியங்களைச் சாப்பிட்டுத் தீர்த்தான்; விதைப்பதற்காகச் சேமித்து வைக்கப்பட்டிருந்த விதைகளையும் பயன்படுத்திவிட்டான். ஒரு கட்டத்தில், உணவு தொடர்ந்து கிடைக்க வேண்டுமென்றால் விதைக்க வேண்டும், தண்ணீர் பாய்ச்ச வேண்டும், அறுவடை செய்ய வேண்டும் என்பதை அவன் உணர்ந்தான் (நீதிமொழிகள் 24:30–34). தேவனுடைய வார்த்தையை விதைக்கவும், அவருடைய ராஜ்யத்திற்காக நமது நேரத்தையும் செல்வத்தையும் முதலீடு செய்யவும் வேண்டும் என்று வேதாகமம் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது.
விதைகளைச் சேமித்தல்:
யோசேப்பு, எகிப்தில் வந்த ஏழு செழிப்பான ஆண்டுகளில் உபரியாகக் கிடைத்த தானியங்களைச் சேமித்து வைத்தான். அதன் மூலம் பின்னர் வந்த பஞ்சத்தின் காலத்தில் மக்கள் பசியால் வாடாமல் காப்பாற்றப்பட்டார்கள் (ஆதியாகமம் 41:48).
விதைகள் நிறைந்த பை:
தேவனுடைய மக்கள் விதைப்பவர்கள். ஆகையால், அவர்களுடைய விதைப்பை எப்போதும் விதைகளால் நிறைந்ததாக இருக்க வேண்டும். ஒரு சில விதைகள் மட்டும் பையில் இருப்பது போதாது. தேவனுடைய வார்த்தை விதைக்கு ஒப்பிடப்படுகிறது. ஆகவே, ஒரு சீடன் தேவவசனத்தைக் கற்றுக்கொண்டு, புரிந்துகொண்டு, மனப்பாடம் செய்து, தியானித்து, எப்போதும் தயாராக இருக்க வேண்டும். ஆண்களின் மற்றும் பெண்களின் இருதயங்களிலும் மனங்களிலும் தேவவார்த்தையின் விதையை விதைப்பது தொடர்ந்து நடைபெற வேண்டும். விதைக்கப்படும் விதைகள் அனைத்தும் ஒரே விதமான நிலத்தில் விழுவதில்லை. ஆனால் நல்ல நிலத்தில் விழும் விதை வேரூன்றி, வளர்ந்து, பலன் கொடுக்கும் (மத்தேயு 13:1–23). எனவே, நாம் விதைப்பதை ஒருபோதும் நிறுத்தக்கூடாது.
தாராளமாக விதைத்தல்:
விசுவாசிகள் தாராளமாகவும் மிகுதியாகவும் விதைக்க வேண்டும் என்று வேதாகமம் போதிக்கிறது. “குறைவாக விதைக்கிறவன் குறைவாக அறுப்பான்; ஆசீர்வாதமாக விதைக்கிறவன் ஆசீர்வாதமாக அறுப்பான்”
(2 கொரிந்தியர் 9:6). அதிகமாக விதைக்க அதிகமான விதைகள் தேவை. சோம்பேறித்தனமும் அலட்சியமும் உள்ளவர்கள் குறைவாகவே விதைப்பார்கள்; அதன் விளைவாக அறுவடையும் குறைவாக இருக்கும். தேவனுடைய வார்த்தையிலும், ஜெபத்திலும், ஊழியத்திலும், பிறருடைய வாழ்க்கையில் முதலீடு செய்வதிலும் நாம் தாராளமாக இருக்க வேண்டும்.
முறையாக விதைத்தல்:
ஒரு நல்ல விதைப்பவன் முறையாகவும் ஞானமாகவும் விதைப்பான். விதைப்பதற்கான காலத்தையும், மழைக்கான பருவத்தையும் அவன் அறிந்திருப்பான். பாறைகள் நிறைந்த இடத்திலோ, களைகள் நிறைந்த நிலத்திலோ விதைக்காமல், உழுது ஆயத்தப்படுத்தப்பட்ட நல்ல நிலத்தில் விதைப்பான். விதைகளை எல்லாம் ஒரே இடத்தில் புதைத்து வைப்பதில்லை; அவற்றை சரியான முறையில் நிலம் முழுவதும் பகிர்ந்து விதைப்பான்.
அதேபோல், தேவனுடைய பிள்ளைகளும் எப்போது, எங்கே, யாரிடம், எவ்வாறு தேவவார்த்தையைப் பகிர வேண்டும் என்பதை ஆவியானவரின் வழிநடத்துதலோடு அறிந்து செயல்பட வேண்டும்.
நம்பிக்கையுடன் விதைத்தல்:
விவசாயி நம்பிக்கையோடு விதைக்கிறான். விதைத்த விதை வளர்ந்து அறுவடையாகும் என்ற நம்பிக்கை அவனுக்கு இருக்கிறது.
அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார்; “நான் நட்டேன், அப்பொல்லோ தண்ணீர் பாய்ச்சினான்; தேவனோ விளையச்செய்தார்” (1 கொரிந்தியர் 3:6). விதையை விதைத்த பிறகு, அதன் வளர்ச்சியை முழுமையாகக் கட்டுப்படுத்தும் அதிகாரம் விதைப்பவனிடம் இல்லை. அவன் தன் கடமையைச் செய்கிறான்; வளர்ச்சியையும் பெருக்கத்தையும் தேவனே அளிக்கிறார்.
சிந்திப்போமே:
என் விதைப்பை தேவனுடைய வார்த்தையால் நிரப்பி வைத்திருக்கிறேனா? ஞானத்துடனும் தாராளத்துடனும் விதைப்பதற்குத் தேவையான விதைகள் என் வாழ்க்கையில் நிறைந்திருக்கிறதா?
Rev. Dr. J.N. Manokaran