இஸ்ரவேல் மக்கள் வாக்குத்தத்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும் பொறுப்பு யோசுவாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்தப் பணியில், அந்தத் தேசத்தில் ஏற்கனவே குடியிருந்த மக்களை வெளியேற்றவும், தோற்கடிக்கவும், சிதறடிக்கவும் வேண்டியிருந்தது.
இந்நிலையில், வாக்குத்தத்த தேசத்தில் இஸ்ரவேலின் முன்னேற்றத்தைப் பார்த்த ஐந்து ராஜாக்கள் ஒன்றிணைந்து, இஸ்ரவேலுக்கு எதிராகப் போரிடத் தீர்மானித்தனர். அப்போது ஆண்டவர் யோசுவாவை உற்சாகப்படுத்தி இவ்வாறு கூறினார்; “அவர்களுக்குப் பயப்படாதே; அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; அவர்களில் ஒருவனும் உனக்கு முன்பாக நிற்கமாட்டான்” (யோசுவா 10:8). தேவனுடைய இந்த வாக்குறுதியில் மூன்று முக்கியமான நடைமுறை உண்மைகள் வெளிப்படுகின்றன.
அவர்களுக்குப் பயப்படாதே:
இது வெறும் உறுதியளிக்கும் வார்த்தையோ அல்லது ஊக்கப்படுத்தும் வார்த்தையோ அல்ல; தேவன் கொடுத்த கட்டளை.
ஐந்து ராஜாக்களின் படைகள் ஒன்றிணைந்து வலிமையான கூட்டணியாக வந்ததால், யோசுவாவுக்குப் பயப்படுவதற்கு காரணம் இருந்தது. ஆனால் ஆண்டவர், எதிரிகளைப் பார்த்துப் பயப்பட வேண்டாம் என்று கட்டளையிட்டார். பயம் விசுவாசத்தின் எதிரி. ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் பயம், விசுவாசத்தை மறைத்துவிடக்கூடும். பயம் ஒருவரை முடக்கிவிடுகிறது; போராட்டத்தில் ஈடுபடத் தகுதியற்றவராகவும் மாற்றுகிறது.
எனவே, சூழ்நிலைகள் எவ்வளவு பயமுறுத்துவதாக இருந்தாலும், தேவனுடைய வாக்குறுதியை நம்பி நாம் முன்னேற வேண்டும்.
அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்:
வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராகிய இறையாண்மையுள்ள தேவனால் எந்த தேசத்தையும் எந்த ராஜாவையும் மற்றொருவரின் கையில் ஒப்புக்கொடுக்க முடியும்.
ஆனால் தேவன் அதை எப்போதும் நீதியுடனும் பரிசுத்தத்துடனும், தம்முடைய மகிமையான நித்திய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவும் செய்கிறார். ஆண்டவர் வரலாற்றின் தேவனும், புவியியலின் ஆண்டவருமாவார். ஆகவே, யோசுவா தனது எதிரிகளைப் பார்த்துப் பயப்பட வேண்டியதில்லை. ஏனெனில், தேவனே அவர்களை அவன் கையில் ஒப்புக்கொடுத்திருந்தார்.
நம்முடைய வாழ்க்கையிலும் போராட்டங்கள் எழும்போது, நம்முடைய பலத்தை அல்ல, நம்மோடு இருக்கும் தேவனுடைய வல்லமையையும் அவருடைய வாக்குறுதியையும் சார்ந்திருக்க வேண்டும்.
அவர்களில் ஒருவனும் உனக்கு முன்பாக நிற்கமாட்டான்:
தேவன் யோசுவாவோடு இருந்ததால், அவனுக்கு எதிராக நிற்கும் எந்த மனிதனாலும் அவனை வெல்ல முடியவில்லை. தேவனுடைய ஜனத்திற்கு எதிராக நிற்பவன், உண்மையில் தேவனுக்கு எதிராகவே போராடுகிறான். தேவனுக்கு எதிராகப் போராடி எந்த மனிதனாலும் வெற்றிபெற முடியாது. அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார்; “நம்மில் அன்புகூர்ந்தவராலே நாம் எல்லாவற்றிலும் மிகவும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே” (ரோமர் 8:37).
மேலும் இயேசு கூறினார்: “பாதாளத்தின் வாசல்கள் அதற்கு எதிராக மேற்கொள்ளுவதில்லை”
(மத்தேயு 16:18). கிறிஸ்துவில் இருப்பவர்களுக்கு இறுதி வெற்றி உறுதியானது. ஆகவே, எதிர்ப்புகளைக் கண்டு நாம் பின்வாங்காமல், தேவனுடைய வாக்குறுதியைச் சார்ந்து தைரியமாக முன்னேற வேண்டும்.
பேராணை (The Great Commission)
தேவன் யோசுவாவுக்கு வாக்குத்தத்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும் பொறுப்பைக் கொடுத்ததுபோல, திருச்சபைக்கு உலகமெங்கும் சுவிசேஷத்தை அறிவிக்கும் மாபெரும் ஊழியத்தை ஒப்படைத்துள்ளார். “நீங்கள் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி...” (மத்தேயு 28:18–20).
முதலாவதாக, உலகத்தின் பரந்த தன்மை, சிக்கலான நிலைமை, தீமை ஆகியவற்றைக் கண்டு திருச்சபை பயப்படக்கூடாது.
இரண்டாவதாக, கிறிஸ்துவில் நமக்குக் கிடைத்துள்ள வெற்றியின் நிலையில் இருந்து நாம் முன்னேறி, உலகமெங்கும் சுவிசேஷத்தை எடுத்துச் செல்ல வேண்டும்.
மூன்றாவதாக, தேவனுக்கு எதிராகப் போராடுகிறவர்கள் இறுதியில் அழிவைச் சந்திப்பார்கள். “அந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; அது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்” (மத்தேயு 21:44).
நான் இந்தப் பேராணையை நிறைவேற்றுவதில் தைரியமாக ஈடுபட்டுள்ளேனா?
Rev. Dr. J.N. Manokaran