வையகவேந்தே வளமார் எம்மிறைவா!
விந்தையான உம்படைப்பு தான்கண்டு,
வியப்பால் விழிகள் விரிந்தே மலர,
உவப்பால் யானும் ஊமையாகி நின்றே!
பொற்சரிகை பூப்போட்ட கருநீலப் பட்டோ?
பூப்பூவாய் பூத்திருக்கும் முல்லை மலர்ப்பந்தலோ?
நின்றிருக்கும் இரவினிலே நிறைந்திருக்கும் விண்மீனுடன்
நன்றிருக்கும் வான்கண்டு நங்கையான் நினைக்கின்றேன்
வெண்முகில் கூட்டமது விதவிதமாய் உருவமைத்து,
கண் இமைக்கும் நேரத்தில் கலைந்தோடும்
புதுமை கண்டு புவிவாழ்வே கனவுதானென
புரவலனே புகழ்வதற்கோ இக்கலை நீ தந்தாய்!
ஒண்ணொளி சிந்திடும் உதயணன் உதித்திட
உலகமெல்லாம் விழித்திட உழைப்பு பெருகுதப்பா!
உழைத்தே ஓய்ந்தவர் உற்சாகம் பெற்றிட
தழைத்தே வானில் வெண்ணிலவு தவழுதப்பா!
முள்ளில் ரோஜா, கள்ளியில் அகில்,
சிற்பியில் முத்து, சேற்றில் தாமரை,
குப்பையில் குருக்கத்தி நீ கொடுத்த காரணம்
பிறப்பிலே உயர்வில்லையென உரைப்பதற்கோ?
நன்றியுள்ள நாயுடன், தந்திரத்தின் நரியுடன்
நானிலத்தில் நீ நடமாட விட்டதும்
நாலாவகை மாந்தருமே நாட்டிலுள்ளாரென
நவில்வதற்கோ? நாதனே நீ படைத்தாய்!
செய்நன்றி மறவாத பண்புதனை போதிக்கவோ
செகமாளும் எந்தம் சிலுவை நாதா
தானுண்ட நீரதனை தலையாலே தந்துதவும்
தென்னையினை நீ தந்தாய் தெரிவிப்பாய் எந்தனுக்கே!
வியக்கின்றேன், வியக்கின்றேன் விந்தைப் படைப்பை,
சுவைக்கின்றேன், சுவைக்கின்றேன் சுந்தரமதை,
உரைக்கின்றேன், உரைக்கின்றேன் உளமார நன்றிதனை,
உவக்கின்றேன், உவக்கின்றேன் என் தந்தை நீயென்று!
Author: Sis. Vanaja Paulraj