ஆதி முதற்கொண்டு ஆதரையில் வாழும்
ஆதாரம் நீயே-வேதாகமே
ஆதரவும் நீயே
ஆகாயம் போல் உயர்ந்து ஆதவனாய் திகழும்
ஆதாயம் நீயே-வேதாகமே
ஆகாரமும் நீயே
சாதிக்க உதித்திட்ட காவியமும் நீயே
போதிக்க பதித்திட்ட ஓவியமும் நீயே
பேதையை மேதையாக்கி சாதனையாய் நிறுத்தும்
போதகமும் நீயே-வேதாகமே
சாதகமும் நீயே
உணர்விலே ஊடுருவும் மூச்சும் நீயே
உயிரிலே உறவாடும் பேச்சும் நீயே
உள்ளத்தைத் திறந்து உள்ளதைக் காட்டும்
உண்மையும் நீயே-வேதாகமே
நன்மையும் நீயே
வருந்துபவருக்கு வழிகாட்டும் விழியும் நீயே
திருந்துபவருக்கு விழிப்பூட்டும் மொழியும் நீயே
பாமரனை பாவலனாக்கி பாரினில் உயர்த்தும்
சத்தியமும் நீயே-வேதாகமே
நித்தியமும் நீயே
Author . Rev. M. Arul Doss