கருவில் என்னை
வனைந்த கர்த்தரே
உருவில் என்னை
வரைந்த சுத்தரே
அருவியாய் என்னில்
ஞானம் ஊற்றி பண்படுத்துகிறீர்
கருவியாய் என்னை
உருவாக்கி பயன்படுத்துகிறீர்,
என் பிறந்த நாளில்
உம்மைப்
பாடாமல் இருப்பேனா?
உம்மைத்
தேடாமல் இருப்பேனா?
மண்ணாய் இருந்தேன்
என்னைப்
பொன்னாய் மாற்றிவிட்டீர்
வெட்டியாய் இருந்தேன்
என்னைக்
கெட்டியாய் பிடித்துகொண்டீர்
இந்த நன்நாளில்
உம்மில்
மகிழாமல் இருப்பேனா?
உம்மைப்
புகழாமல் இருப்பேனா?
பேதையாய் இருந்தேன்
என்னை
மேதையாய் வளரச்செய்தீர்
பாதகனாய் இருந்தேன்
என்னைப்
போதகனாய் வாழச்செய்தீர்
இந்த பொன்னாளில்
உம்மைத்
துதியாமல் இருப்பேனா?
உம்மை
மதியாமல் இருப்பேனா?
பாவியாய் இருந்தேன்
என்னை - தூய
ஆவியால் நிரம்பச்செய்தீர்
வெறுப்பாய் இருந்தேன்
என்னைப்
பொறுப்பாய் நடக்கச்செய்தீர்
இந்த திருநாளில்
உம்மை
நினைக்காமல் இருப்பேனா?
உம்மை
அணைக்காமல் இருப்பேனா?
என்றும் உம் நினைவில்
என்றும் உம் நிழளில்
Author . Rev. M. Arul Doss