அன்னை
வடிவில் அவதரித்து
என்னைப் பெற்று வளர்த்தாய்
தன்னை
முழுவதும் அர்ப்பணித்து
என்னைத் தினம் காத்தாய்
கருவில்
என்னைச் சுமந்து
பெற்றதும் நீயே
உருவில்
என்னை உருவாக்கி
ஏற்றதும் நீயே
தெருவில்
என்னை விடாமல்
காத்ததும் நீயே
இரத்தத்தை
பாலாக்கி என்னைக்
குடிக்க வைத்ததும் நீயே
இரத்தத்தை
வியர்வையாக்கி என்னைப்
படிக்க வைத்ததும் நீயே
உன் குரல் கேட்டு
பேசக் கற்றுக்கொண்டேன்
உன் விரல் பிடித்து
நடக்கக் கற்றுக்கொண்டேன்
அழுகை நிறுத்த
என்னைத் தாலாட்டினாய்
அழுக்கை அகற்ற
என்னை நீராட்டினாய்
பாசத்தைக் காட்ட
என்னைச் சீராட்டினாய்
நேசத்தைக் கூட்ட
என்னைப் பாராட்டினாய்
பசியைப் போக்க
எனக்குப் பாலூட்டினாய்
பிணியைப் போக்க
எனக்கு மருந்தூட்டினாய்
என் நெஞ்சமே
எப்படி உம்மை மறப்பேன்?
என் தஞ்சமே
எப்படி உம்மை மறுப்பேன்?
என் செல்லமே
எப்படி உம்மை வெறுப்பேன்?
என் செல்வமே
எப்படி உம்மை மறைப்பேன்?
உம் பாதத்தில் கிடப்பேன்
உம் பாதையில் நடப்பேன்
உம் பாசத்தில் மிதப்பேன்
உம் நேசத்தில் பறப்பேன்...
Author . Rev. M. Arul Doss