உலக வரலாற்றில்
முத்திரைப் பதித்த
வரலாற்று நாயகனின்
வரலாற்றில்
நானும் ஓர் அங்கம்
அன்று முதல்இன்று வரை-
இரக்கமற்றவனாகவே - என்னைப்
பார்க்கிறது உலகம்
என்னிடம் -
குழந்தையோடு வந்த
அன்னை மரியிடம்
இடமில்லை என்றேன்
ஏன்?
சத்திரத்தில் இடமில்லை
இடமில்லை - ஆனால்
மனம் இருந்தது
பிறந்திருப்பது
மீட்பர் என்று தெரியாத போதே-
சத்திரத்தில் .
இடமில்லாத போதும்
தொழுவத்தில்
இடம் கொடுத்தேன்
இன்று
ரங்கநாதன் தெருவினிலே
மக்கள் கூட்டம் மோதுது
புரசைவாக்கம் சாலைகளில்
வாகனங்கள் திணருது
வண்ணாரப் பேட்டையிலும்
பெண்கள் கூட்டம் நெருங்குது
ஆயத்த ஆடைகளின்
விற்பனையும் பெருகுது
ஆட்டிறைச்சி கடைகளிலே
நிற்பதற்கு இடமில்லை
கோழிவாங்கப் போனாலோ
கைநீட்ட முடியவில்லை
ஏ ஒன் கடைகளையும்
எட்டிப்பார்க்க இயலவில்லை
டாஸ்மாக் கடைகளிலும்
கூட்டமது குறையவில்லை
ஏனென்று கேட்டால் -
எல்லோரும் சொல்கிறார்
தொழுவத்தில் பிறந்தவர்க்கு
தங்கமணிந்து கொண்டாட்டம்
ஏழ்மையிலே தவழ்ந்தவர் முன்
பட்டுடுத்தி ஆர்ப்பாட்டம்
விண்ணைப் பிளந்து
கொட்டித் தீர்த்து
நாடு நகரைப்
புரட்டிப் போட்டு-
சீரழித்த மழையால்-
வீடிழந்து உடைமை இழந்து
உறவு இழந்து நிற்கின்ற
உங்கள் மக்களுக்கு-
இருக்கின்ற உணவதனை
பகிர்ந்தளித்து
மகிழ்வதன்றோ கிறிஸ்மஸ்?
பாதி உடை அணிந்துகொண்டு
மீதி உடல் மறைப்பதற்கு
வழியில்லா வறியவர்க்கு
உடையளித்து
மகிழ்வதன்றோ கிறிஸ்மஸ்?
இந்நாளில்-
நானங்கே இருந்தால் ...
வெள்ளத்தால் அல்லலுறும்
மக்களுக்கு -
என் சத்திரம் திறந்திருக்கும்
சத்திரத்தின்
சமையலறையில்
ஓய்வின்றி உலை கொதிக்கும்
புகலிடம் இல்லா
எளியவர்க்கு-
என் அறையையும்
அளித்திடுவேன்
ஆனால் -
வசதி படைத்தோரோ-
துன்புற்றோர் துயரங்களை-
செய்தியாகப் பார்ப்போரே
துயறுரும் மக்களுக்கு
நீங்கள் செய்யும் பங்கு என்ன?
துயர் துடைக்கும் பணியினிலே
உங்களது சேவை என்ன?
எட்ட நின்று
எட்டிப் பார்த்தது போதும்
தொலைவிலிருந்து
தொலைக்காட்சியில்
செய்தி கேட்பது போதும்
உங்கள் - இரட்சகர் -
நீங்கள் கொண்டாடும்
இயேசுவைப் போல்-
சமுதாயத்தில்
இறங்கி வாருங்கள்
உங்கள் மக்களோடு
இணைந்து வாழுங்கள்
அன்புக்கு இலக்கணமாய்
வாழ்ந்து காட்டிய-
அவரைப் போல்
வாழ முயலுங்கள்
ஏனென்று சொல்கின்றேன்
செவிமடுத்துக் கேளுங்கள்
உலகை மீட்கும் பரம்பொருளே
"உலகில் மனுவாய் உதித்ததனால்-
இருளில் இருந்த மனுக்குலத்தை
ஒளியின் வழியில் நடத்தினதால்
விண்ணை ஆளும் பேரிறைவன்
மண்ணில் வாழ வந்ததினால்-
உங்கள் சிந்தை மாற்றிடுவீர்
மாற்றம் வாழ்வில் கண்டிடுவீர்
மனிதம் என்னும் சோலையிலே-
நேசம் தழைத்திட வேண்டுமென-
ஒருவரை ஒருவர் நேசித்திட
இன்றொரு முடிவை எடுத்திடுவீர்
குறைந்து போன உறவுகளால்-
குலைந்து போன குடும்பங்களில்
தொலைந்து போன இன்பங்களை
தேடி எடுத்துத் தந்திடுவீர்
விடியா உலகின் விடியலுக்காய்
மனுக்குலம் நோக்கி ஒளிர்ந்திடவே-
மறைந்து போன சமாதானம்
மீண்டும் உலகம் உயிர்த்திடவே
நிம்மதி தேடும் மானிடரின்
நெஞ்சில் நிறைவாய்த் தங்கிடவே
பாரினில் மனுவாய் அவதரித்த
பாலகன் பெயரால் முடிவெடுப்பீர்
கால காலமாய் கொண்டாடும்
பாரம்பரிய பண்டிகையாய்க்
கிறிஸ்மஸ் மாறிப் போகாமல்
மாற்றம் காணச் செய்திடுவீர்
உறவில்லாத அந்நியரை
வீட்டுக் கழைத்து உணவளிப்போம்
மழையில் அனைத்தும் இழந்தோரை
அழைத்து மகிழ முடிவெடுப்பீர்
Author: Bro. D. S. Magimaidoss
இந்தக் கவிதை கி.பி.2015 கிறிஸ்துமஸில் இவர்களைச் சந்தித்தால் என்ற புத்தகத்தில் இருந்து Dr. M. மைக்கேல் பாரடே அவர்களின் அனுமதியுடன் பெறப்பட்டது.