இரும்பு சாம்ராஜ்யத்தை,
இறுமாப்பாய் சமைத்து (உருவாக்கி) - அதை
கரும்பெனக் கருதாதவர் அனைவரையும்
அரும்பு விடும்போதே,
கிள்ளி எறிந்திட,
ரோம அரசு கடைபிடித்த
தண்டனைக் கருவிதான்
சிலுவை!
குருதி கொட்ட வைக்கும்
கொடூரக் கருவி,
இறுதி மூச்சு விடும்வரை
அணு அணுவாய் மூச்சொடுங்கும்
அவல நிலை ஐயகோ!
ஊருக்கு வெளியே,
உயர்ந்த பகுதியில்,
ஊன்றியிருக்கும் சிலுவை,
ஊராரின் ஏளனப் பார்வையும்,
பரிகாசப் பேச்சும்,
பாதி உயிராய் சிலுவையில்
பரிதபிப்பவர் மனதை,
வேதைப்படுத்தும்.
உயிர் துடிக்கும் போதே,
உயரப் பறக்கும் கழுகும்,
தசைப் பகுதியைப் பிய்த்து உண்ண,
சரீரம் துடிக்கும்,
சொல்லொண்ணா வேதனையில்,
கோரச் சிலுவையிலே,
கோமகன் இயேசு,
கொலைகாரப் பாவிகளால்,
குற்றுயிராய் அறையப்பட்டு,
மரணத்தை ருசித்தார்
மாசற்ற குருதி சிலுவையை,
நனைத்ததால்,
மாசுடை மனிதனை,
மீட்கும் கருவியாய்,
மாறிப்போனது,
மாபெரும் விந்தையன்றோ!
பாரச் சிலுவையில் ,
பரமன் தொங்கி,
புனிதச் சின்னமாய்,
மாற்றியதும் அற்புதமே!
என் சிந்தை கவர்ந்த சிலுவையே!
இகத்தில் இன்பமும் பரத்தில் பரமானந்தமும்
நீயே! நீயே! நீயே!
Author: Sis. Vanaja Paulraj