ஆதியாகமத்தில் ஸ்திரியின் வித்து
அவரே இயேசென்னும் சொத்து
அவரை நீ தவிர்த்து
ஆகிடுவாய் வெறும் வெத்து
யாத்திராகமத்தில் பஸ்கா ஆடு
யாவருக்கும் இயேசுவே பலியாடு
யாத்திரை வாழ்வில் இயேசுவோடு
இருப்பது உறுதி நித்தியரோடு
லேவியராகமத்தில் பிரதான ஆசாரி
லோகத்தினருக்கு பரிந்துபேசும் ஆசாரி
லட்சியமே அவர் பாவ பரிகாரி
லோகமனைத்துக்கும் ஒரே உபகாரி
எண்ணாகமத்தில் வெண்கல சர்ப்பம்
ஏற்றிய சிலுவையில் இயேசுவின் வடிவம்
விசுவாசத்துடன் நோக்கி பார்த்தால்
விடுதலை தந்த இயேசுவின் அருவம்
உபாகமத்தில் முன்னறிவித்த
தீர்க்கதரிசி
உத்தமர் இயேசுவே அத்தீர்க்கதரசி
உன்னத கடவுளின் வார்த்தைகளை
உடைக்காமல் அருளிய தீர்க்கதரிசி
யோசுவா புத்தகத்தில் படைத்தளபதி
இயேசுவே அந்த இரட்சிப்பின் அதிபதி
பாவம் பிசாசு எதிரிகளை
பந்தாடும் பரிசுத்த அதிபதி
நியாயாதி பதியில் அவர் நீதிபதி
நீதியில் இயேசுவே அதிபதி- அவருடைய
நீதியே மனிதனுக்கு மீட்பு
நிரந்தர மானதோர் தீர்ப்பு
ரூத்தில் இரத்த சொந்தமே இரட்சிப்பு
இயேசுவின் ரத்தமூலமே நமக்கு இரட்சிப்பு
பிள்ளைகள் மாம்சமும் ரத்தமு மானதால்
பரிசுத்தர் மாம்ச இரத்தமானார்
சாமுவேலில் நம்பிக்கையின் தீர்க்கதரிசி - இயேசுவே
சத்தியம் தவறா தீர்க்கதரிசி
பரிசுத்த பிதாவின் பிரதிநிதி
பாருக்கெல்லாம் அவரே ஒரேவழி
இராஜாக்கள் புத்தகத்தில் அவர் அரசர்
இராஜ்ஜியங்களை ஆட்டிவைக்கும் அரசர்
இராஜாக்களை அவர் நியமிக்கிறார்
இராஜ்ஜியங்களையோ -கவிழ்த்து போடுகிறார்
நாளாகமம் அவரின் வரலாறு
நாள்தோறும் அவரின் செயல்பாடு
நாதன் இயேசுவே வரலாறு
நடுவாக பிரித்தார் அதை இருவேறு
எஸ்றாவில் அவர் வேதபாரகர்
ஏசுவே அந்த வேதநாயகர்
ஏவுதல் மூலம் தம் வார்த்தைகளை
ஏட்டில் வடித்த ஆசிரியர்
நெகேமியாவில் விழுந்ததை கட்டினார்
நாதன் இயேசுவே திரும்ப கட்டுறார்
நாண்டு கீழே விழுந்ததை -இயேசு
மீண்டும் மேலே எழுப்பினார்
எஸ்தரில் தடுக்கப்பட்ட பேரழிவு
எல்லாருக்கும் கொடுத்து வாழ்வு
ஏசுவால் தடுக்கப்பட்ட பேரிழிவு
எல்லாருக்கும் கொடுத்தது மீட்பு
யோபுவில் மீட்பர் உயிரோடிருக்கிறார்
யேசுவில் மீட்பு உயிரோடிருக்கிறது
மரணத்திற்கு மரணம் கொடுத்தார்
மனிதர்க்கு மகிமை கொடுத்தார்
சங்கீதங்களில் கர்த்தர் என்மேய்ப்பர்
சந்தேகமில்லை இயேசுவே அம்மேய்ப்பர்
சாவு பள்ளத்தில் நடந்தாலும்
சறுக்காமல் காத்த நல்மேய்ப்பர்
நீதிமொழிகள் சொல்லும் அறம்
நீதியில் இயேசுவே தனிமரம்
நிதானமாய் கற்க வாரும்
நீங்கும் உங்கள் மனபாரம்
பிரசங்கியில் எல்லாம் மாயை
பகலவன் பார்வையில் பட்டது மாயை
பயனற்ற தெல்லாம் மாயை
பரிசுத்தர் யேசுவே நிச்சயம் உண்மை
உன்னதப் பாட்டின் மணவாளன்
உண்மையில் இயேசுவே அம்மணவாளன்
உத்தம சபை மணவாட்டியை
உண்மையில் மணமுடிக்கும் மணவாளன்
ஏசாயாவில் சமாதான பிரபு
ஏசுவே அக்காரண பிரபு
பகையாக நின்ற பிரிவினையை
பதம் பார்த்த பரமபிரபு
எரேமியாவில் நீதியின் கிளை
ஏசுவே தாவீதின் வழிக்கிளை
எல்லோருக்கும் பகிரப்பட்ட
ஏசுவின் இரத்தமே கிரையவிலை
புலம்பல் பாவத்தின் புலம்பல்
பாவத்தை வெறுக்கும் பரிசுத்த புலம்பல்
பரிசுத்தம் விரும்பிய இயேசுவின்
பரிசுத்த வாழ்வின் அரும்பல்
எசேக்கியேலில் நான்கு முகம்
எஜமான் இயேசுவின் திருமுகம்
எளிமை, வலிமை பரிசுத்தம்
எல்லாம் நிறைந்த ஒருமுகம்
தானியேலில் நாலாவது நபர்
தள்ளப்பட்ட எவருக்கும்
தகிக்கும் தீயின் சூளையிலும்
தானே துணையென வருபவர்
ஓசியாவில் நம்பிக்கையின் புருஷன்
ஒப்பிட முடியா பேரரசன்
ஒற்றை உடன்படிகை காவலன்
ஒழுக்கத்தில் அவரே நாயகன்
யோவேலில் ஆவியின் அபிஷேகம்
யாவரும் காத்திருந்த அபிஷேகம்
கிறிஸ்துவே அந்த அபிஷேகம்
கிடைத்தது அனைவருக்கும் அபிஷேகம்
ஆமோசில் பாரம் சுமப்பவர்
ஆட்டுகுட்டியாக பாவம் சுமந்தவர்
அகிலத்தையும் மீட்டு கொண்டவர்
அனைவரையும் நியாயந் தீர்ப்பவர்
ஒபதியாவில் இரட்சிக்க வல்லவர்-அவர்
ஒருவரே போதுமானவர்-சுயநீதி
ஒன்றை சேர்க்கவோ இணைக்கவோ
ஒன்றும் தேவையில்லாதவர்
யோனா மூன்றுநாள் மீன்வயிற்றில்
யேசு மூன்றுநாள் கல்லறையில்
யோனா மனித நிலை பாவத்தில்
யேசு மீட்பு நிலை உயிர்ப்பில்
மீகாவில் மன்னிக்கும் தேவன்
மன்னிப்பை தேடும் மனிதர்க்கு- சிலுவையில்
மன்னிப்பை சம்பாதித்த தேவன்
மனிதனுக்காக மனதுருகும் தேவன்
நாகூமில் போராடும் தேவன்
நாதியற்ற நல்ல மனிதர்க்கு
நன்மை செய்ய நானுண்டு-என்று
நன்மை செய்த தேவன்
ஆபக்கூக்கில் நற்செய்தி யாளன்
அழிவுப்பாதையின் ஆபத்தை
ஆவசரத்துடன் உணர்த்தும்
அன்பின் நற்செய்தி யாளன்
செப்பனியாவில் இரட்சகராகிய தேவன்
செம்மையான எகிப்து உண்டு
செழிப்பான அசிரியா உண்டு-என்று
செப்பிடும் தேவனல்ல
ஆகாயில் ஆசீர்வதிக்கும் தேவன்
அழிந்து போகும் உலக
ஆசீரை அல்ல
அழியா ஆசீரை அளிக்கும் அன்பின் தேவன்
சகரியாவில் திறக்கப்பட்ட நீரூற்று
சகல பாவத்தையும் போக்கும்
சகலருக்குமான ஒரே நீரூற்று
சிலுவையில் பெருக்கெடுத்த நீரூற்று
மல்கியாவில் நீதியின் சூரியன்
மன இருளை அகற்றிட
நற்செய்தியின் வெளிச்சம் வீசிட
நிலையான
நீதியின் சூரியன்
மத்தேயுவில் மாபெரும் அரசர்
மாட்டுகுடியில் பிறந்த அரசர்
மரண சிலுவையிலும் அரசர்
மனிதர் உள்ளங்களிலும் அரசர்
மாற்கு புத்தகத்தில் வேலைக்காரன்
மனித மனங்கவர்ந்த சேவைக்காரன்
மகிமைக்கு ஒரே உரிமையாளன்-ஆனால்
மகிமையை ஒருபோதும் தேடாதவன்
லூக்காவில் இயேசு மனுஷக் குமாரன்
லோக மனிதருக்கு மாதிரி குமாரன்
லோக பாவத்துக்கு பரம பரிகாரி
லோகமனைத்துக்கும் ஒரே ஆசாரி
யோவானில் இயேசு தேவக்குமாரன்
யாவே தேவனின் செல்லக் குமாரன்
யேசுவே தேவ பிரதிநிதி
பிதாவிடம் செல்ல அவரே கதி
அப்போஸ்தலரில் ஆவியின் வழி
ஆண்டு நடத்துபவரின் ஒரே வழி
அச்சமில்லாமல் அவரை தொடர
அவசியம் உண்டு என்பதை அறி
ரோமரில் விசுவாசத்தினாலே நீதிமான்
ரட்சிப்பில் சுயநீதி ஆகாதடா புத்திமான்
முன் குறித்தார் முன்னறிந்தார்
முற்றிலும் ஜெயங்கொள்வார்
கொரிந்தியரில் செய்தார் பரிசுத்தம்
கேட்டின் மகனால் ஆனது அசுத்தம்
கிரையமாக தந்தார் தம்ரத்தம்
கரைநீக்கியே செய்தார் சுத்தம்
கலாத்தியரில் சாபத்தினின்று மீட்பு
காலம் நிறைவேறிய பிறப்பு
குற்றப்படுத்தும் பிரமாணம் விடிவிப்பு
கிருபையினால் ஏற்பட்ட தீர்ப்பு
எபேசியரில் பாவத்தில் மரித்தவர் உயிர்ப்பு
ஏதேனுக்கு முன்பே தெரிந்தெடுப்பு
ஏகப்பிதாவுடன் ஒன்றிணைப்பு
ஏவுதலின் ஆவியானவர் முனைப்பு
பிலிப்பியர் கர்த்தருக்குள் சந்தோஷம்
பாடுகளின் வழியே சந்தோஷம்
பரமனின் சிந்தையே சந்தோஷம்
பாரம்பரியத்தில் இல்லை சந்தோஷம்
கொலோசேயர் இயேசுவே பரிபூரணம்
குறையில்லா சகல ஞானமும்
குற்றமில்லா சகல நீதியும்
கூடவே அன்பும் பூரணமானது இயேசுவிலே
தெசலோனிக்கேயர் இயேசுவின் வருகை
திட்டமிட்ட அதிரடி வருகை
தீயோருக்கு கலக்கம் வரும்-இரத்தம்
தெளிக்கப் பட்டோருக்கு மகிழ்ச்சி வரும்
தீமோத்தேயுவில் சபை சீர்த்திருத்தம்
தீயவைகளை அகற்றும் திருத்தம்
தூயவைகளை கொண்டுவரும் திருத்தம்
திருச்சபையை பலப்படுத்தும் திருத்தம்
தீத்துவில் சபை மூப்பர் தகுதி
தேர்தல் அல்ல மூப்பர் தகுதி
திருவசன உண்மையைக் கொண்டு
தேவன் கொடுக்கும் தகுதியே தகுதி
பிலோமோனில் அடிமையல்ல சகோதரன்
பாவத்தில் மனிதநிலை அடிமையானவன்
பரிசுத்தர் இயேசுவினால்
மீட்கப்பட்டவன்
பரமன் இயேசுவுக்கு சகோதரனானவன்
எபிரேயரில் இயேசு பிரதான ஆசாரியன்
என்றும் நிலையான ஆசாரியன்
மோசே நியமனத்தின்படி அல்ல
மெல்கியின் முறைப்படி ஆசாரியன்
யாக்கோபு கிரியையில் வெளிப்படும் விசுவாசம்
யாவருக்கும் ஞானத்தை அருளும் விசுவாசம்
கிரியை இல்லா விசுவாசம் செத்தது
கிருபையாலே விசுவாசம் வந்தது
பேதுரு அழியா வித்தினாலே மீட்பு
பரிசுத்த வாழ்வில் வசனமே தற்காப்பு
மாசற்ற ஆட்டு குட்டியின் இரத்தம்
மாந்தர்க்கு மீட்பு இதுவே சித்தம்
யோவான் மடல் முழுதும் அன்பு
யாவருக்கும் அதில் இருக்கு தெம்பு
கண்ட சகோதரனிடம் காண்பிக்காத அன்பு
காணாத கடவுளிடம் எப்படி வரும் அன்பு
யூதா என்றாலே நியாயத் தீர்ப்பு
யாவருக்கும் காத்திருக்கும் தீர்ப்பு
எவரும் விரும்பாத கடைசி தீர்ப்பு
எவரையும் விடாமல் துரத்தும் தீர்ப்பு
வெளிப்படுத்தலில் இயேசுவே அரசர்
வானுயர்ந்த அரசை கவிழ்க்கும் அரசர்
வானத்தையும் பூமியையும் ஆளும் அரசர்
வாழ்விலும் தாழ்விலும் அவரே அரசர்
-டேவிட் தன்ராஜ்