மேய்ப்பர்கள்

வறுமை போர்வை போர்த்தி
குளிரினில் வாடி 
இருளான வாழ்வில்
பனிமழையில் நனைந்த
மேய்ப்பர்களாகிய நாங்கள்
காத்திருந்தோம்...
விடியலின் வெளிச்சத்திற்காக

பள்ளங்கள் மேடாக
ஏழை உள்ளங்கள் மகிழ்ந்திட
வண்ண எண்ணங்கள்
வாழ்வில் மலர்ந்திட
காத்திருந்தோம் ன
கர்த்தரின் வருகைக்காக

பாவ பாதை மாறிட
தூய பாதை பூத்திட
மனித நேயம் மலர்ந்திட
காத்திருந்தோம் நாங்கள்
இயேசுவின் பிறப்பிற்காக

நம்பிக்கையில்லா வாழ்வில்
விவலியத்தின் வாக்குப்படி
நம்பிக்கைப் பூக்களின்
மணம் வீசிட
காத்திருந்தோம்,
காத்திருந்தோம்
காலமெல்லாம்
காத்திருந்தோம்

துதிதனைச் சுமந்தவாறு
தூதன் வந்து நிற்கையில் 
அஞ்சினோம், அலறினோம்
அங்குமிங்கும் ஒடினோம்

“பயப்படாதே” என்று சொல்லி
பாங்குடன் உரைத்தவன்
இயேசுயென்னும் இரட்சகர்
பிறந்திருக்கும் செய்தியைத்
தூதர் சொன்ன வேளையில்,
விண்ணில் தேவனுக்கு மகிமையும்
மண்ணில் சமாதானமும்
மனிதரில் பிரியமும்
மலர்வதாக” எனக்கூறி
தூதர் குழாம் கூடி
தூயவரைப் போற்றி
துதிப்பாடல் பாடினர்

நற்செய்தி கேட்டவுடன்
நாணி யங்கு நிற்காமல்
நடுநிசியில் புறப்பட்டு
நாயகனைப் பணிந்து கொண்டோம்.
இன்று,
மேய்ப்பர்களின் பிரதிநிதியாக
உங்களைச் சந்திப்பதில்
மட்டில்லாத மகிழ்ச்சியடைகிறேன்.

இன்றோ,
இயேசுவைச் சந்திக்க
யாருக்கும் விருப்பமில்லை

குழந்தை இயேசுவை
தாலாட்டுப் பாடி
கண்மூடித்
தூங்கச் சொல்வதிலேயே
குறியாய் இருக்கின்றனர்

இன்று.
சபையாரிடம்
எங்கும் நிர்விசாரம்
ஆலயங்கள்
வெறிச்சோடிக் கிடக்கின்றன!
அழுது, தொழுது
அழைத்தாலும்

ஆலயம் வர
அடம் பிடிக்கின்றனர்
மீறினால் ...
மேய்ப்பனையே
மிரட்டுகின்றனர்

பரிசுத்த கிறிஸ்தவர்களாய்
பகல் வேஷம் போடுகின்ற
பண்டிகை கிறிஸ்தவர்களுக்காய்
பரிதாபப்படுகிறேன்

பண்டிகைக் காலங்களில்
வழக்கமாய். வரும்
சுவாசிகளைப்
புறந்தள்ளி _
ஆலய இருக்கைகளை
ஆக்கிரமிக்கிறவர்கள்
இவர்கள்

உலகத்தில்தான்
திருச்சபைகள் உள்ளன
என்றாலும்.
திருச்சபைகளுக்குள்தான்
உலகம் இருக்கிறது என்பது
வெட்கக் கேடான விஷயம்

ஆவிக்குரிய பாடல்களுக்கு
அலங்கோல
அங்க அசைவுகள்

கண்களைச் கூசும்
தெருக்கூத்து உடைகளெல்லாம்
திருச்சபைகளில்
உலா வருகின்றன்

முகத்தை மறைக்கும்
முடியலங்காரம்
முக்காட்டுக் கலாச்சாரம்
முற்றிலுமாய் முடிந்து போனது

முதுகை வெளிச்சம்
போட்டுக் காட்டும்
சியோன் குமாரத்திகள்

அலங்காரம் என்ற பெயரில்
அரைகுறை ஆடைகள்

வாலிபர்கள்,
மயிர் வளர்த்து...
குடுமி கட்டி...
காது குத்தி... 
கம்மலிட்டு ...
கைகளிலே
காப்பும் போட்டு
ஆண்மையின் கம்பீரத்தை
அடகு வைத்து '
பெண்மையைப்
பறைசாற்றுகின்றனர்

எங்கும் ஆடம்பரங்கள்
அணிவகுக்கின்றன

திருச்சபைக்கு வெளியே
இயேசு
அன்னியப்பட்டு நிற்கிறார் ...
பலிபிடங்கள்
பாழ்பட்டுக் கிடக்கின்றன

இன்றைய
திருச்சபைகள்
பண்டிகைப் பரபரப்பில்
இயேசுவைத்
தொலைத்துவிட்டன்

தற்கால மேய்ப்பர்கள்
இன்று 
ஏரோதின் அரண்மனைகளில்
மந்தைகளோ
இன்னும் வயல்வெளிகளில்
கள்ளர்களால் ஆடுகள்.
களவாடப்படுகின்றன
துஷ்ட மிருகங்கள்
துரத்தியடிக்கின்றன!
நல்ல மேய்ப்பர் இயேசுவுடன்

நலமுடன் இருந்தவர்கள்
கள்ள மேய்ப்பர்கள்
கைகளில் சிக்கி
காணாமற் போகிறார்கள்

இலவசமான
ஜீவத்தண்ணீர்
இன்று
விலை பேசப்படுகின்றது
நீதியுள்ள  நியாயாதிபதியை
வணங்கு ன்றவர்கள்
இன்று
நீதிமன்ற வாசல்களில் ...

ஆதி திருச்சபை
அன்று சீட்டுப்போட்டு
ஆட்களைத் தேர்வு செய்தது
இன்றோ,
வாக்கு போட்டு
வழக்கிற்குப் போகிறது

மந்தைகளின் 
நிர்விசாரத்தைக் கண்டும்
மவுனம் காக்கும்
மேய்ப்பர்கள்

இன்றைய கிறிஸ்தவ
ஊழியர் உலகம்
பரமன் இயேசுவின்
பணியாளன் என்று
தன்னை
அடையாளப்படுத்திக்
கொள்வதைக் காட்டிலும்
பட்டப் பெயர்களோடு.
தன்னை
அறிமுகப்படுத்திக் கொள்வதையே
விரும்புகின்றது

பாரம்பரிய திருச்சபை 
ஊழியர்கள் பயன்படுத்திய
நீண்ட அங்கியும்,
தொங்கும் சிலுவையும்
தோரணமாய் இன்று
அனைத்து ஊழியரிடமும்
காட்சிப் பொருளாய்க்
காணக் கிடைக்கின்றன

பட்டங்கள்
பணத்திற்காக
விற்கப்படுகின்றன

இங்கே
ஆன்மீகத்திலிருப்பதிலும்
அரசியலில் இருப்பதை
கெளரவமாகக் கருதும்
ஊழியர்கள்

இயேசுவின்
இரண்டாம் வருகையை
தாமதப்படுத்தும்படி
ஜெபிக்கின்ற .
விசுவாசிகளுக்கும்
இங்கு பஞ்சமில்லை

முடிவாக
ஒரு வார்த்தை

கிறிஸ்தவமே ...
விழித்தெழு

எலியா, எலிசா
தானியேல், தாவீது
தோமா, பேதுரு
பவுலடியார் என

வீரமிக்க 
பாரம்பரியமாய்ப் பரம்பரையில்
வந்தவர்கள் நீங்கள்!

இந்த உலகம்
உங்களிடம் நிரம்ப
எதிர்பார்க்கிறது...
வீறு நடை போடுங்கள்
வெற்றி உங்களுக்கே!

Author: Bro. G. Kirubakaran

இந்தக் கவிதை கி.பி.2015 கிறிஸ்துமஸில் இவர்களைச் சந்தித்தால் என்ற புத்தகத்தில் இருந்து Dr. M.  மைக்கேல் பாரடே அவர்களின் அனுமதியுடன் பெறப்பட்டது.Topics: Bible Kavithaigal

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download