ஒலிவ மலையில் ஒய்யாரமாய்,
அமைந்திருந்தது கெத்செமனே!
ஒலிவ மரங்கள் ஒய்யாரமாய்
ஓங்கி வளர்ந்திருக்க,
செழித்திருந்தது தோட்டம்,
சீடரும் இயேசுவும் அங்கு
ஜெபிக்கச் செல்வது வழக்கம்,
வழக்கத்தின்படியே பஸ்காவிற்கு
முந்தின இரவு திருவிருந்து
முடித்தபின் சீடரோடு சென்றார்,
கெசெமனேக்கு,
எட்டு சீடரை எட்டத்தில் நிறுத்தி,
யாக்கோபு யோவான் பேதுரு
மூவரை மட்டும் தன்னோடு இருத்தி,
என் ஆத்துமா மரணத்திற்கேதுவான
துக்கம் கொண்டிருக்கிறது
நீங்கள் இங்கே தங்கி
தரித்திருங்கள் ஜெபத்தில் என்றுரைத்து,
சற்று தூரம் கடந்து சென்று,
பாறையருகே மண்டியிட்டு
"இந்தப் பாத்திரம் என்னை விட்டு
நீங்கக் கூடுமானால் நீங்கட்டும்
என் சித்தம் அல்ல அப்பா
உம் சித்தம் ஆகட்டும்"
நெஞ்சுருக இறைஞ்சினார் இயேசு
கெத்செமனே என்றால் திராட்சைத்
தோட்ட செக்கு எனப் பொருள்
செக்கிலிட்ட திராட்சையென
நெஞ்சமெலாம் நைந்துருக
வேண்டினார்.
உறக்க மயக்கத்திலிருந்த
அடியவரைக் கண்டார்
'ஒரு மணி நேரம்
விழித்திருக்கக் கூடாதா?
என் ஆவி உற்சாகமாயிருந்தாலும்
மானிட மாம்சம் பெலவீனமுள்ளதே!"
அங்கலாய்த்தார் மனுஷ குமாரன்,
அகன்றார் அங்கிருந்தும்
மீண்டும்
முன் போல் வேண்டினார்.
எழுந்து சீடரிடம் வந்தார்.
உறங்கி வழிந்தனர் சீடர்,
பின்னும் ஒருமுறை மேற்கூறியபடி
விண்ணப்பித்தார் விண்ணக வேந்தன்,
வியர்வையெல்லாம் குருதியாய்,
கொட்டியது நிலத்தில்.
பரமபிதா உள்ளம் கலங்கினாலும்,
பரிசுத்த தூதரை மட்டுமே அனுப்பினார்.
தேவதூதன் திடப்படுத்த,
தெளிந்த மனதோடு,
நெஞ்சுறுதியோடு எழுந்தார் இயேசு.
ஓ! கெத்செமனேயே!
நீ எவ்வாறு கண்டாய்?
இக்காட்சியை!
Author: Sis. Vanaja Paulraj