மரியாள் நான் சொன்னால்
சரியாய்த்தான் சொல்லிடுவேன்
பெத்தலையில் பிறந்தவரை
இத்தினத்தில் நினைத்து
மரியாள் நான் சொல்லுவதை
சரியாய்த்தான் சொல்லிடுவேன்
உள்ளத்தில் மட்டுமன்றி
உடலிலும் இயேசுவைச்
சுமந்தவள் நான்.
இவ்வுலகில் இதுவரை
பிறந்த கோடி உயிர்களிலும்
பிறக்கும் கோடி உயிர்களிலும்
நான் ஒரேயொருத்தி மட்டுமே
உடலுக்குள் அவரைச் சுமந்தவள்.
அதனால்தான் நான் பாக்கியவதி.
வார்த்தை கருவாகி
வரலாறு படைத்தது எனக்குள்ளே.
எனக்குள்ளே மட்டும்தான்
வார்த்தை கருவாகி
வரலாறு படைத்தது.
அதனால்தான் சொல்கிறேன்.
என் வார்த்தையைக் கேளுங்கள்
மரியாள் நான் சொன்னால்
சரியாய்த்தான் சொல்லிடுவேன்.
பெற்றெடுத்தேன் அவரை
கற்றோரே அறிவீர்.
கன்னித்தாயாக
கர்ப்பவதியானேன்
கர்த்தரின் ஆவியால்.
யாருக்குத் தெரியும் அது
ஊருக்குள் அவமானம்?
என்றாலும் -
நிந்தையைச் சுமக்கவில்லை.
சுமந்தேன் உலக மீட்பரை
ஆண்டவன் கட்டளைக்கு
அடிபணிந்து.
கன்னி மரியாளென்றீர்
எண்ணிப் பாருங்கள் தோழியரே
நாகரிக உலகில்
விலைபோன பொருளாக நிலை
குலைந்த கன்னித்தாய்கள்
எத்தனை எத்தனை பேர்கள்?
வாலிபக் கூட்டமே
காமமும் களியாட்டும்
சோதனைக்கும் வேண்டாம்.
உடலிடம் காற்றடைத்த பையென்று
தோற்றுப் போகாதீர்.
நம் உடலோ
இறைவன் விரும்பி
உறையும் ஆலயம்.
பரிசுத்த வாழ்க்கையால்
உரித்தாகும் பரலோகம்.
மரியாள் நான் சொன்னால்
சரியாய்த்தான் சொல்லிடுவேன்.
பச்சிளங் குழந்தை - பாலகனாகி
இச்சகம் பேசியோர் வாயை அடக்க
பரம ஞானம் ... கிருபையோடு
பாரில் வளர்ந்தார் தயவோடு.
பன்னிரண்டு வயதில்
ஆலயத்தில்
அசத்தினார் வேத அறிவாலே
திணறினர் ஏசுவின் கேள்விதனில்.
பெற்றோரே... பிள்ளைகளே
சற்றே கேளுங்களேன்.
வாட்ஸ் அப்பும் முகநூலும்
தொலைக்காட்சிப் பெட்டியிலே
குத்தாட்டம் பார்ப்பதுமே
நித்தமும் வாழ்க்கையா?
வேதத்தைத் தியானிக்க
நேரமும் இல்லையா?
உதறித் தள்ளிவிட்டு
உடனே திரும்புங்கள்.
சத்தியத்தில் வளருங்கள்.
இயேசுவைப் போல் வளருங்கள்.
பொல்லாங்கன் தொடுவானோ
எல்லா நேரமும்
அவரோடு இருக்கையிலே?
மரியாள் நான் சொன்னால்
சரியாய்த்தான் சொல்லிடுவேன்.
எங்கேதான் இருந்தார்
முப்பது ஆண்டுகள்?
எப்படித் தோன்றும்
இப்படிக் கேட்பதற்கு?
எப்படித் தோன்றும்
தப்பாய்க் கேட்பதற்கு?
கரத்தைப் பார்த்தாலே
காய்த்துப் போய் இருக்கலையா?
மரப்பாச்சி பொம்மை முதல்
மாமேசைக் கதவெல்லாம்
கரத்தாலே செய்து... உரமாகி நின்றார்
அவர் சொன்னாலே போதும்
சொர்க்கங்கள் தோன்றுமே.
ஆனால்-
மானிடத் தந்தை யோசேப்பும்
மெச்சும்படி
தச்சன் மகனாய்
தவறாமல் உழைத்துக்
குடும்பத்தைச் சுமந்தார்.
அத்தனை ஆண்டுகளும்.
பரம ஊழியத்தை நிறைவேற்றி
சிலுவையிலே மரிக்கையிலும்
வழுவவில்லை உலகக் கடமையிலும்
தொங்குகின்ற போதிலும்
பொங்கிவரும் சேயன்பில்
தாயான என்னை
யோவானிடம் ஒப்படைத்தார்.
இன்றென்ன செய்கிறீர்?
பெற்றோரைக் கைகழுவி
கண்ணீர் சிந்த வைக்கும்
புண்ணியவான் எத்தனை பேர்?
கதியற்றுக் கிடக்கிறார் முதியோர் இல்லத்தில்
மரியாள் நான் கேட்கிறேன்.
சரியாய்த்தான் கேட்கிறேன்.
அவரேதான் வழி. சத்தியம்.
அவரேதான் ஜீவன்
அவர் மூலம் மட்டுமே
இறைவனைக் காணலாம்.
அவர் ஒருவரே
போற்றுதலுக்கும்
வணக்கத்திற்கும் உரியவர்
அன்று-
மகன்தான் என்றாலும்
அவர் சொற்படி நான்
செய்தேன்.
செய்யுங்கள் என்றேன் பிறரையும்.
இயேசு மரியாளின் மகனா
தெரியாதா உங்களுக்கு?
அண்டத்தைப் படைத்த
ஆண்டவனின் திருக்குமரன்.
அவரைச் சுமந்த வெறும்
வாகனம் நானன்றோ?
அன்னை என்றாலும்
மேன்மை அவருக்கே.
மகிமையும் கனமும்
மாட்சியும் அவருக்கே.
மரியாள் நான் சொல்கிறேன்
அறியாமல் பிழை வேண்டாம்.
அன்று -
பாலகன் இயேசுவை
கல்லாத மேய்ப்பனும் தேட
பொல்லாத ராஜாவும் தேட
உண்மையாய்த் தேடியோர்
நன்மையைக் கண்டனர்.
இன்றே நீ வருவாய்
இனிக் காலம் செல்லாது.
சிந்திப்பீர் மானிடரே
கணந்தோறும் வானிலை
அறிவிப்புச் செய்தாலும்
ஒரு மாத மழைதன்னில்
உருவான சேதங்கள்
தலைநகரைப் புரட்டியது
தலைகீழாய்
ஆனால் -
முன்னறிவிப்பின்றி
கண்ணிமைக்கும் நேரத்தில்
மீண்டும் வரப்போகும்
கிறிஸ்தேசுவைச்
சந்திக்க நீ ஆயத்தமா?
மீண்டும் பாலகனா அல்ல - அல்ல
நியாயாதிபதியாய்
நினையாத நேரத்தில்
திடீரெனத்தான் வருவார்.
நீ ஆயத்தம் என்றால்
பேரின்பம்... உனக்கு
ஆயத்தம் இல்லையே
பேரிடர் அல்ல - அல்ல
பெரும் பேரிடர் உனக்கு.
மாட்டுக் கொட்டிலின்
மைந்தனைப் பாருங்கள்.
சீட்டுக் கட்டல்ல வாழ்க்கை
மறுபடி கலைத்து
மறுஜென்மம் எடுக்க.
கிடைத்த ஒரு வாழ்க்கையில்
தேடி வந்த தெய்வத்தைக்
கோடி முறை துதிக்கணும்.
வேகமான வாழ்க்கையா...
வேண்டாமே இனியும்...
போதும் ... நில் -
கவனி... நமக்காய்ப் பிறந்தவரை
புறப்படு. அவரைக் காண
சுகமான உன் வாழ்வு
சீக்கிரமே துளிர்க்கும்
பெத்தலையில் பிறந்தவரை
இத்தினத்தில் நினைக்கையிலே -
சேதியொன்று கேட்டதால்
என்
செய்தியைத் தந்திட்டேன்.
பதித்திடுவீர் உள்ளத்தில்.
நீதியைச் செய்வதற்கு
பெத்தலையில் பெற்றவரை
இத்தினத்தில் நினைத்து
மரியாள் நான் சொல்கிறேன்
சரியாய்த்தான் சொல்லிடுவேன்.
மரியாள் நான் சொல்கிறேன்
சரியென்று கேளுங்கள்.
Author: Sis. Vaigai selvi
இந்தக் கவிதை கி.பி.2015 கிறிஸ்துமஸில் இவர்களைச் சந்தித்தால் என்ற புத்தகத்தில் இருந்து Dr. M. மைக்கேல் பாரடே அவர்களின் அனுமதியுடன் பெறப்பட்டது.