உணர்வுகளை
அடக்கிக்கொண்டு
கோழையாய்
வாழவேண்டுமா?
உரிமைகளை
முடக்கிக்கொண்டு
ஏழையாய்
சாகவேண்டுமா?
மங்கியது
போதும் தோழா/தோழி!
பொங்கி எழுந்திடு
ஏங்கியது
போதும் தோழா/தோழி!
ஓங்கி உயர்ந்திடு
வளமை
அழிந்துவிட்டால்
மீண்டும் செழித்திடுமா?
இளமை
துவண்டுவிட்டால்
மீண்டும் விழித்திடுமா?
காத்தது
போதும் தோழா/தோழி!
உன் உரிமைக்காக போராடு
பார்த்தது
போதும் தோழா/தோழி!
உன் வளமைக்காக வாதாடு
எத்தனை
பாடுகள் அனுபவித்தாய்
உன் வளர்ச்சிக்காக!
எத்தனை
கேடுகள் அனுசரித்தாய்
உன் மலர்ச்சிக்காக!
தாங்கியது
போதும் தோழா/தோழி!
உன் உறவுக்காக போராடு
தூங்கியது
போதும் தோழா/தோழி!
உன் வரவுக்காக வாதாடு
எவ்வளவு
பசிதாகமும் பரிகாசமும்
அடைந்தாய் உன் முடிவுக்காக!
எவ்வளவு
நிந்தையும் கந்தையும்
அணிந்தாய் உன் விடிவுக்காக!
பொறுத்தது
போதும் தோழா/தோழி!
உன் உயர்வுக்காக போராடு
மறுத்தது
போதும் தோழா/தோழி!
உன் உயிருக்காக வாதாடு
வாழ்ந்து காட்டு தோழா/தோழி!
வளர்ந்து காட்டு தோழா/தோழி!!
Author . Rev. M. Arul Doss