கல்விமான்கள் நடுவே
கவிமான்கள் நடுவே
நீதிமான் யோசேப்பு வந்திருக்கிறேன்
வாழ்த்துச் சொல்ல வந்தேன்- -கிறிஸ்மஸ்
வாழ்த்துச் சொல்ல வந்தேன் - புவிவாழ
கவி வாழ்த்துச் சொல்ல வந்தேன்
வந்த கதை சொல்லுகிறேன் ... . வாழ்த்த
வந்ததைச் சொல்லுகிறேன்
வாழ்ந்ததைச் சொல்லுகிறேன்
வாழ்ந்த கதை சொல்லுகிறேன்.
பச்சை மண்-
பட்ட கதை விளம்புகிறேன் - பாடு
பட்ட கதை விளம்புகிறேன்
பச்சை மரம் -
பட்ட கதை விளம்புகிறேன் - பாடு
பட்ட கதை விளம்புகிறேன்
பெத்லகேம் நகரத்தில்
எனது வாழ்க்கைப் பயணத்தில்
நடந்து வந்த பாதையில் .
கடந்து வந்த சோதனைகள்
ஏராளம் ... ஏராளம்
முன்னணைத் தொழுவில்
இயேசு பிறந்த பொழுதில்
மரியாளின் மடி திறந்த பொழுதில்
கிறிஸ்மஸ் நிகழ்ந்த பொழுதில்
யாம் பட்ட வேதனை... .
நடுநெஞ்சில்
சுடுநீர் கொட்டியது போல்
கடும் வேதனை அது
கொடும் வேதனை
காரணம்
கல்யாண கனவுகளில் - நான்
களித்திருந்த நேரத்தில்
செய்தியொன்று வந்தது - என்
செவிகளில் செந்தீயாய் இறங்கியது.
எனக்கு நியமிக்கப்பட்ட
கன்னிகை மரியாள்
கருவுற்றிருக்கிறாளாம்
நெஞ்சுக்குள் பட்டயம் ஒன்று
நேராய் உருவிச்சென்ற உணர்வு
மனம் தீக்குளித்தது
சந்தேக கரையான் மூளையை அரிக்க
சந்தர்ப்ப விரல்கள் சங்கைப் பிடிக்க
சங்கடத்தில் தவித்தேன்
செய்வதறியாது திகைத்தேன்.
தலைகவிழ்ந்தது தன்மானம்
இது
யூதகுலத்திற்கு அவமானம்
சகோதரனே
நீதிமான் செய்யும்
விண்ணப்பத்திற்கு
விண்ணகத்திலிருந்து பதில் உண்டு
எனக்கும்
பரத்திலிருந்து பதில் வந்தது ...
"பரிசுத்தவாட்டி மரியாளிடம்
பரிசுத்தம் கருவெடுத்திருக்கிறது
பரிசுத்தாவியின் பதில் கேட்டு
பரவசப்பட்டேன் ... ஓ...
பரமன் இயேசு பாலனுக்கு
பணிவிடை தகப்பனாகும்
பாக்யம் பெற்றேன்
சகோதரனே ... சகோதரனே ...
இன்று கிறிஸ்தவக் குடும்பங்களில் கூட
விவாகம் செய்த மனைவியை
விவாகரத்து செய்யும்
அலங்கோலம் அல்லவா
அரங்கேறுகிறது...?
கிறிஸ்தவனே...
நீ
நிம்மதி இழந்த நேரங்களில்
நீதிபரனைத் தேடுகிறாயா ...
நீதிமன்றத்தை நாடுகிறாயா ...
என்னைப்போல
தூதன் தரும் தீர்ப்பை
மனமுவந்து ஏற்றுக்கொள்ளும்
மனப் பக்குவம் உண்டா உனக்கு ...?
இறைமகனை ஈன்றெடுத்து ...
தலைமகனைப் பெற்றெடுத்து ...
தவ மகனைக் கண்டெடுத்து ...
தலை நிமிர்ந்த பொழுது ...
கண்விழி திறந்தபொழுது ...
அந்த
மாடுகள் கூடுமிடத்தில்
கொசுக்களின் கூடாரத்தில்
இந்த உலகவரலாறு
கி.மு - கி.பி என்று பிரிக்கப்பட்டது
ஏரோது ராஜாவின்
கொலைவெறிப் பட்டயம்
தேவ மைந்தனை
துண்டாடத் துடித்ததால் - நாங்கள்
கொண்டாட முடியாமல்
திண்டாடித் தவித்தோம்
இன்று -
கிறிஸ்மஸ் நேரத்தில்
தெருமுனை ஓரத்தில்
கேளிக்கை விடுதிகளில்
வாடிக்கையாளர் கூட்டம்
மகிழ்ச்சி வெள்ளத்தில் .... (மிதந்து)
மது வெள்ளத்தில் .... (கவிழ்ந்து)
மத்தளமடிக்குது வாலிபர் கூட்டம்
சகோதரனே.... சகோதரனே....
இதற்காகவா
பூமகன் இயேசு பூலோகில் பிறந்தார்
கிறிஸ்மஸ் குடிலில்
குழந்தை இயேசுவாய்
குடியிருக்கவா ... இயேசு பிறந்தார்
கிறிஸ்தவனே ...
இந்தநாள் யாருக்கு பிறந்தநாள்...?
கிறிஸ்துவுக்கா..கிறிஸ்மஸ் தாத்தாவுக்கா -
கிறிஸ்து இல்லாமல்
கிறிஸ்மஸ் கொண்டாடி விடுவார்கள்
ஆனால்
கிறிஸ்மஸ் தாத்தா இல்லாமல்
கிறிஸ்மஸ் கொண்டாட மாட்டார்கள்
அச்சாணி இல்லாத தேர்வலம் போல
கிறிஸ்து இல்லாத கிறிஸ்மஸ் ஊர்வலம்
மானுடமே ... மானுடமே...
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்
நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்
அவர்
சத்தியத்துக்காக வந்தவர்
நித்தியத்துக்காக வாழ்ந்தவர்
இரட்சகராய்ப் பிறந்தவர் ப:
இரட்சிப்பின் வாசல் திறந்தவர்
அந்த
சத்தியபரனுக்கு
சத்திரத்தில் இடம் இல்லை உலக
சரித்திரத்தில் இடம் பிடித்தார் - தாவீதின்
சந்ததியில் முத்திரை பதித்தார்
சாத்தானின் முகத்திரை கிழித்தார்
யூதர்களின் நித்திரை கலைத்தார்
இங்கே இன்று
திரும்பிய திசையெங்கும்
மாய வெள்ளத்தில்
சாயம்போன சத்தியங்கள்
மனம்போன போக்கில்
பாவம் புகுந்த வாழ்க்கைகள்
சகோதானே ... சகோதரனே ...
ஆதி மனிதன் ...
பாவம் செய்து
பாதியில் விழுந்து போனதால்
பாவ விதை பூமியில் விளைத்தது
பாவத்தின் ஆணிவேர் அறுத்திட
சாபத்தின் விழுதுகள் அகற்றிட
ஆண்டவர் இயேசு அவதரித்தார்
இழந்து போனதைத் தேடவும்
இரட்சிக்கவுமே இரட்சகர் வந்தார்
நண்பனே ... நண்பனே ...
பெத்தலகேம் வீதியில்
குல ஜாதியில்
பிறப்பெடுத்த ஜீவநதி ... இதோ
உன் வீட்டு வாசலில் வழிந்தோடுகிறது ...
உன் வாழ்க்கையில் ...
புனிதநதி ....
புண்ணிய நதிகளுக்கல்ல
ஜீவநதிக்கு இடம் கொடு
உன் வாழ்க்கை
சிரமங்களையல்ல ...
சிகரங்களைத் தொடும்
இரட்சகர் பிறப்பை
கையிலேந்தி பார்த்தவன் நான்
அதனால் விளம்புகிறேன் ...
மனிதா ...
தொழுவத்தில் அல்ல ... உன்
இதயத்தில் பிறக்கவே
இரட்சகருக்கு விருப்பம் ... உன்
இதயத்தை திறக்க
இன்னுமேன் தயக்கம் ?
மானுடனே ...
உடனே மனம் திருந்து
உன் இல்லத்தில் அல்ல
இதயத்தில் நிகழுட்டும் கிறிஸ்மஸ்
விருந்து.
Author: Bro. Aasaitthambi
இந்தக் கவிதை கி.பி.2015 கிறிஸ்துமஸில் இவர்களைச் சந்தித்தால் என்ற புத்தகத்தில் இருந்து Dr. M. மைக்கேல் பாரடே அவர்களின் அனுமதியுடன் பெறப்பட்டது.