உம்மைப்
பார்க்காமல் இருந்தால்
என் பாதங்கள் தடுமாறும்
உம்மோடு
பேசாமல் இருந்தால்
என் பாதைகள் தடம்மாறும்
நாளெல்லாம் வேண்டாம்
வேளைக்கு ஒருமுறை
பார்த்தால் போதும்...
மணிக்கணக்காய் வேண்டாம்
மணிக்கு ஒருமுறை
பேசினால் போதும்...
ஒளி புவியில்
படாமல் போனாலும் சரி
ஒலி செவியில்
நுழையாமல் போனாலும் சரி
என் கண்கள்
உம் மேலே தான் இருக்கும்
என் செவிகள்
உம் வார்த்தை தான் கேட்கும்
உணர்விருக்கும் வரை அல்ல
உயிரிருக்கும் வரை...
அலை கரையை
தொடாமல் போனாலும் சரி
மழை தரையில்
விழாமல் போனாலும் சரி
என் விரல்கள்
உம்மைத் தான் தொடும்
என் கால்கள்
உம்மைத் தான் தொடரும்
மனமிருக்கும் வரை அல்ல
மார்க்கமிருக்கும் வரை...
கண்ணாடி முகத்தைக்
காட்டாமல் போனாலும் சரி
கடிகாரம் நேரத்தைக்
கூட்டாமல் போனாலும் சரி
என் உதடுகள்
உம்மைத் தான் அழைக்கும்
என் கரங்கள்
உம்மைத் தான் அணைக்கும்
பேச்சிருக்கும் வரை அல்ல மூச்சிருக்கும் வரை...
Author . Rev. M. Arul Doss