நான்
என் பெயரில்
இனிமை கொண்டவள்
பஞ்சம் பிழைக்க
பெத்லகேமை விட்டு
மோவாப்பிற்கு
குடிபெயர்ந்தவள்
சென்ற இடத்தில்
என் இரு மகன்களுக்கும்
திருமணம்
ஒருவள் ஓர்பாள்
இன்னொருவள் ரூத்
இருந்தும் என்ன பயன்
வந்த இடத்தில்
கணவனும்
மகன்களும் மரிப்பு
வாழ்வில் பரிதவிப்பு
வாழ்வு கசப்பானது
எதிர்காலம்
கேள்விக்குறியானது
இருண்ட வாழ்வில்
இறைவன் மீது
வைத்த நம்பிக்கை
நைந்துப் போனது
என்
இழப்பீடுகளை
இனி யாரால்
சரி செய்ய முடியும்
இனி யாரை
நான் நம்புவது
ஓர்பாள்
பிறந்த வீட்டிற்கே
பயணமானாள்
ரூத் மட்டுமே
என்னை விட்டு
பிரிய மனமின்றி
என் பிரியமானாள்
கசந்த மனதோடு
பெத்லகேமுக்குள்
மீண்டும் காலடி
எடுத்து வைத்தேன்
என்னுடன் ரூத்தும்
கால் பதித்தாள்
என் மனதிற்கு
நம்பிக்கையூட்டினாள்
ஆம்
உன் தேசமே என் தேசம்
உன் மக்களே என் மக்கள்
உன் தெய்வமே என் தெய்வம்
என்றாள்
சொன்னவள்
வார்த்தையோடு
நிற்கவில்லை
செயலில்
என்னோடு நின்றாள்
காலம் கனிந்தது
ரூத்துக்கு
மறுமணம் நடந்தது
மறுமலர்ச்சி பிறந்தது
உறவினன் போவாஸ்
கணவன் ஆனான்
ஆதரவற்ற எனக்கு
ரூத்தோ ஓபேத்தெனும்
பேரக்குழந்தையை
பெற்றுத்தந்தாள்
அவனை என் மடியில் கிடத்தி
தாலாட்டு பாடி
புது சுகம் கண்டேன்
ஓபேத்தின் மகன் ஈசாய்
ஈசாயின் மகன் தாவிது
தாவீதின் வம்சத்தில்
இயேசு கிறிஸ்து
ஆம் மாராவின் கசந்த நீரை
மதுரமாய்
மாற்றிய தேவன்
என் மனதை
ஆற்றினார் தேற்றினார்
என் இழப்பீடுகளை
சரி செய்த அவர்
உங்களின் இழப்பீடுகளை
இன்றே சரி செய்வார்
நம்பிக்கையற்ற சூழலிலும்
அவரையே நம்புங்கள்
இருண்ட வாழ்வு ஒளிரும்
இப்படிக்கு
உங்கள் பாட்டி நகோமி
கவிமுகில் சுரேஷ்
தர்மபுரி