நான் தான் ராகேல் பேசரேன்

நான் 
ரூபவதியும் 
பார்வைக்கு 
அழகுமானவள் 

நான் 
யாக்கோபின் 
இதய நாயகி
அவருக்கு
பிரியமானவள்

நான் 
அவரின் 
வசந்தம்
அவர் வாழ்வில் 
வீசிய தென்றல்
அவர் மனதைக் 
குளிரச் செய்த
தேனருவி

யாக்கோபு
என் அத்தை 
ரெபேக்காளின் 
செல்ல மகன்

தகப்பனின்
ஆசீர்வாத பங்கீட்டில்
ஏற்பட்ட  
அண்ணன் தம்பி 
சண்டையால்
மாமன் லாபானான 
என் தகப்பனை 
நாடிவந்த 
என் நாயகன்

அனுதினம்
அவர் 
தன் மனதால்
என் அழகையே
ஆராதித்தவர்

தாயை பிரிந்து வந்த 
அவருக்கு 
நான் 
இன்னொரு 
தாயாகவும் 
அவருக்க்கேற்ற 
தாரமாகவும் 
இருக்கவேண்டுமென 
மனதளவில் 
துடித்தேன்
தினமும் 
அவரை 
படித்தேன் 

நாட்களின் 
நகர்வில்
இறைவனின் 
நினைவில்
நாங்கள் 
இருவரும் 
ஈருடல் ஓருயிராய் 
சிந்தை கொண்டோம்

பாதிப் பாதியாய் 
பிரிந்து 
இன்னும் 
மீதி  வாழ்க்கையை
எத்தனை நாட்கள் தான்
வீணாக்குவது 
யோசித்த யாக்கோபு
சுவாசம் 
சகவாசம்
என் வாசம் நீ என்றார்

என் தகப்பனிடம் 
எனக்காக 
என்னை அடைய
என்னோடு வாழ  
ஏழுவருடம் அல்ல 
மொத்தம் 
பதினான்கு வருடம்
சலிக்காமல் வேலை செய்தார்

என்னில் 
அவர் வைத்த அன்பில் 
வருடங்கள் எல்லாம் 
நிமிடங்கள் ஆயிற்று

எனைக் கரம்பிடித்த
என் நாயகன் யாக்கோபு
காலம் முழுவதும் 
ஓயாமல் 
என்னை காதலித்தார்
என்னை கடவுள் தந்த 
பரிசு என்றார்
 
மனதுக்குள் 
என்றும் நீ 
திகட்டாத தித்திப்பு 
மன மகிழ்ச்சியின் 
ஔஷதம் என்றார்

கால ஊர்தியில் 
பயணித்த 
என் வாழ்வில்
நந்தவனங்கள் மட்டுமல்ல  
சோகங்களும் 
சொந்தமாயிற்று

ஆம் 
காலத்தின் கட்டாயம்
எங்கள் நேசத்தின் 
திரு உருவமாய் 
ஒரு குழந்தையை 
எதிர்பார்த்தேன்
நினைத்தவுடனே
நடக்கவில்லை
வாழ்வு 
நடைப்பிணம் ஆயிற்று  

நானும் 
பிற பெண்களைப் போல 
மசக்கை கொண்டு 
மாங்காய் கடித்து 
சாம்பல் தின்ன 
ஆசைக் கொண்டேன்
அது நடக்கவில்லை  
மனம் கசந்தது 

மலடியெனும் பட்டம்
எனது வாழ்வின் 
வட்டமாயிற்று    
சுற்றங்களும் 
சூறாவளியாய் 
என்னை சூழ்ந்து 
எப்பொழுது என்றது

இரக்கமுள்ள 
இறைவனிடம்
பொறுமையோடு காத்திருந்தேன்  
இதயத்தைக் கொடுத்தேன்
இரங்காமல் இருப்பாரா
அவர் கருணைக் கண்ணன்
தந்தார் 
எங்களுக்கு 
ஒர் நல்லக் கண்ணனை
அவன்தான் 
அழகோவிய கவிதையாம் 
யோசேப்பு

அவன் எங்களுக்கு 
இறைவன் 
கொடுத்த
இதயப் பரிசு 

என் கணவர்
என் மகனை 
நாளொரு மேனி 
பொழுதொரு வண்ணமாய் 
ரசித்தார் 

யோசேப்புவை
இறைவன் கொடுத்த 
நம் காதலின் 
அடையாள பரிசு என்றார்
 
வண்ணமயமாய் 
சிந்திக்கும் 
என் கணவர் 
பலவர்ண அங்கியை 
அவனுக்கு 
ஆசையாய் 
உடுத்தினார்

அவனைக் குறித்து 
அவன் எதிர்காலத்தைக் குறித்து 
அவருக்கு 
பலவண்ணக்  கனவுகள்

அழகு மகன் யோசேப்பு
அருவி நீராய் 
ஒவ்வொரு நாளும் 
எங்கள் மனதை 
குளிரச் செய்தவன்

யோசேப்பு
எனக்கு 
தாயெனும் 
பெயர் சூட்டிய  
தெய்வ குழந்தை 
  
யோசேப்பு 
தன் அன்பால் 
எங்கள் உள்ளத்தை 
ஆண்டவன்

என் கணவர்
என் வாழ்வின் 
கடைசி வரை 
எனக்கு திகட்டாத தித்திப்பு 
என் மனதிற்கு
மத்தாப்பு
பல இன்னல் வந்தும்
இறைவன் 
இயக்கிய குடும்பமாய்
இருந்ததால் 
இதயம் மகிழ்ந்தது
வாழ்வு சுவைத்தது

உங்கள் 
குடும்பத்தையும் 
இறைவன் இயக்கட்டும் 
காதல் பிறக்கட்டும்
கவிதைகள் பொழியட்டும் 
என வாழ்த்துகிறேன்

இப்படிக்கு

யாக்கோபின் இதய நாயகி ராகேல்

கவிமுகில் சுரேஷ் தர்மபுரி



Topics: Bible Kavithaigal

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download