கர்த்தா
உம் காலடியில்
காலமெல்லாம்
கிடப்பதே என் ஆவல்
அதுவே எனக்குக் காவல்
நாதா
உம் சந்நிதியில்
நாளெல்லாம்
காத்திருப்பதே என் விருப்பம்
அதுவே எனக்குத் திருப்பம்
உம்மைக்
காணாமல் இருந்தால்
என் கண்கள்
எப்படி உறங்கும்?
உம்மைப்
பாடாமல் இருந்தால்
என் உதடுகள்
எப்படி அடங்கும்?
உம்மை
வணங்காமல் இருந்தால்
என் கரங்கள்
எப்படி மடங்கும்?
உம்மைத்
தேடாமல் இருந்தால்
என் கால்கள்
எப்படி முடங்கும்?
எந்தன்
ஒவ்வொரு அணுவும்
உந்தன்
சித்தமின்றி அசையாது
உந்தன்
சத்தமின்றி இசையாது
எந்தன்
ஒவ்வொரு அடியும்
உந்தன்
நினைவின்றி நடக்காது
உந்தன்
துணையின்றி கடக்காது
எந்தன்
ஒவ்வொரு வரியும்
உம்மைப்
போற்றாமல் இருக்காது
உம்மைச்
சாற்றாமல் முடிக்காது
நீர் இல்லாமல்
நான் எழுவதும் இல்லை
நீர் சொல்லாமல்
நான் எழுதுவதும் இல்லை
என் பேச்சும்
என் முச்சும் நீர் தான்
நீர் மட்டும் தான்
நீர் இல்லாமல் நான் இல்லை...
Author . Rev. M. Arul Doss