கர்த்தரின் தூதுவனாய்க் களப்பணியாற்றும்
காபிரியேல் தூதர்நான்
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் அன்னை
மரியாளையும், அன்பன் யோசேப்பையும்
ஆசாரியர் செக்கரியாவையும், ஆயர்களையும் சந்தித்து
ஆண்டவரின் அறைகூவலையும் அறிவித்து
அஞ்சாதீர்கள் என்ற ஆனந்த செய்தியையும் வெளியிட்டு
அச்சம் போக்கி, அற்புத சாட்சியாய் மாற்றியவன்.
அன்று நான் அடைந்த அனுபவங்களை எல்லாம்
இன்று நான் உங்களுக்கு உரைத்திடும் முன்னர்
அன்றைய சமுதாயச் சூழலைச் சற்று
விளக்கினால் உங்களுக்கு விவரம் புரியும்.
கடவுளின் மக்கள் அடிமைகளாக
கைவிலங்கு இல்லாத இரண்டாம் தர குடிமக்களாக
ரோமஆட்சியின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தனர்.
மேசியா வருவார் - விடுதலை தருவார் என
ஆசையாய் அவர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
எதிர்பார் த்து எதிர்பார்த்து ஏமாற்றத்தின் எல்லையில்
இதயம் சோர்ந்து,
தளர்ந்துபோன கைகளுடனும், தள்ளாடும் முழங்கால்களுடனும்
உள்ளத்தில் உறுதியின்றி நாட்களைக் கடத்தி
ஏசாயா தீர்க்கன் தனது நூலில் 35:3, 4
திருவார்த்தையில் கூறியதுபோல்,
“அஞ்சாதீர்கள் இதோ உங்கள் கடவுள் வருகிறார்.
அவர் உங்களை விடுவிப்பார்” என
ஆண்டவரின் ஆணைக்கிணங்கி அறிவித்தேன்.
சமுதாயத்தில் போற்றப்படாது புறக்கணிக்கப்பட்ட
ஓர் ஏழைப்பெண் - அதுவும் கிராமத்துப்பெண்
கன்னிப்பெண்- ஆண்டவரின் வருகைக்கான
முதல் பாத்திரமாய் முகிழ்த்தெழுகிறாள்.
எப்படியாகும் இது என்ற ஏக்கக் கேள்வி
அனைத்தும் கூடும் ஆண்டவரால் என்ற பதில்
சவாலை ஏற்ற இளமங்கை -
ஆண்டவரின் அடிமையாக - ஆனமீகத் தாயாக
உன்னத மீட்பரை உள்ள உறுதியுடன்
உலகுக்காய்க் கருத்தரித்து உவந்தளித்தார்.
ஏழைசொல் அம்பலம் ஏறாது என்பர்
இடையரா? இல்லை அவர்களுக்கு இடம் நீதிமன்றத்தில்
ஆயரின் சாட்சி ஏற்க இயலாது என்பது ஏகாதிபத்தியத்தின் சட்டம்.
ஆனால், அவர்களையே
இயேசு பிறப்பின் முதல் சாட்சியாக்கியது எனது செய்தி
அஞ்சாதீர்கள் தரித்திரருக்கே நற்செய்தி
தரித்திரர் வாயிலாகவே நற்செய்தி
தரித்திரத்தின் பிரதிநிதியாய் - புல்மீது படுத்து
அமிழ்துக்கழுத அமலனுக்குச் சாட்சி ஆயர் என மாற்றியது எனது செய்தி
அஞ்சாதீர் உங்களுக்காகத்தான் மெசியா பிறந்துள்ளார்.
தள்ளாடிய கைகளைத் திடப்படுத்தியது எனது செய்தி
வயது சென்றவர்கள் - வாரிசை உருவாக்க இயலாத நிலையில்
சகரியா - எலிசபெத் - ஆண்டவரின் ஆசாரியர்
ஆகாதது உண்டோ ஆண்டவரால்?
அவர்களதுவாரிசை - வனாந்தரத்துக்குரலாக
வானவர் வரும் பாதையைச் செவ்வையாக்கும்
திருத்தூதராக திருமுழுக்கு முனிவர் யோவானைப்
பெற்றெடுக்க வலிமை தந்தது எனது செய்தி
அன்று காரிருளில் இருந்த மக்கள் பெரும்
கதிரொளியைக் கண்டனர்.
அடிமை நிலையில் இருந்தோரை
அருணோதயம் சந்தித்தது.
ஆம் புதிய விடியல் புலர்ந்தது அன்று.
விண்ணைத் தாண்டி வருவாயா? வருவாயா? என
மண்ணின் மக்கள் கேட்கிறார் இன்று
விண்ணைத் தாண்டி மண்ணுக்கு வந்த
விடியல்தான் மகிபர் இயேசு.
நம்பிக்கையிழந்த சூழலில் நம்பிக்கை நாயகனாய்,
விடுதலை வீரனாய் மெசியா இயேசு உதித்தார்.
ஆனால் விண்ணுக்கும் மண்ணுக்கும்
உரிமையாளருக்குச் சத்திரத்தில் இடமில்லை.
இன்றும் - உலக அளவில் அகதிகள்
சிரியாவின் மக்கள் அகதிகளாக
அச்சத்துடன் வெளியேறுகின்றனர்.
உலக நாடுகள் (ஜெர்மனி தவிர) இடமில்லை என ஒதுக்கும் சூழல்
இலங்கை வாழ் தமிழர் - வாழ்விடமில்லை,
தொப்புள் கொடி உறவு என பெருமை உரிமை பேசும்
தமிழ்நாட்டில், அடிமைகளாக அகதிகள் முகாமில் அடைப்பு
வாக்குரிமை இல்லை. சுதந்திரமாக வாழ வழியில்லை
மெசியா ஏசு பிறந்த பாலத்தீனத்தில் அமைதியின்மை
பாலஸ்தீனம் - இஸ்ரவேல் போராட்டம்
இயேசு யூதருக்கு ராஜா மட்டுமல்ல
அவர் உலகை மீட்க வந்த உலக இரட்சகர்
அறிக்கை மீகா 4:4 நவிலுகிறபடி,
அவர்கள் ஒவ்வொருவரும் தம்தம் திராட்சைத்
தோட்டத்தின் நடுவிலும்,
அத்திமரத்தின் அடியிலும் அமர்ந்திருப்பர்.
அவர்களை அச்சுறுத்துவோர் எவரும் இல்லை.
ஓரினத்திற்கு எதிராய் மற்றோரினம் வாள் எடுக்காது.
இது நிறைவேறும் நாள் சமீபம்.
ஏனெனில் மீகா 5:2 இல் கூறப்பட்டபடி,
இஸ்ரவேலை ஏன் உலகாளப் போகிறவர் சீக்கிரம் வருகிறார்.
இதுவே எனது செய்தியாக இறைவன் இன்று
உங்களுக்கு உரைக்கிறார் உள்ளத்தில் நிறுத்துங்கள்
மனம் திரும்புங்கள் இருப்போர் இல்லாருடன்
பகிர்ந்து கொள்ளுங்கள்.
மழை வெள்ளம் போர் எதுவும்
உங்கள் பரலோக சொத்தைப் பறிக்க இயலாது.
பரலோகத்தில் பொக்கிஷம் சேர்த்து வையுங்கள்.
அப்போது திருவெளிப்பாடு 18:17 இல் கூறப்பட்டுள்ளபடி
இத்துணை செல்வமும் ஒரே மணி நேரத்தில்
பாழாய்ப் போய்விட்டதே” என்று புலம்பமாட்டீர்கள்.
திருவெளிப்பாடு 22:20 இல் கூறப்பட்டுள்ளபடி,
“மாரநாதா இயேசுவே வாரும்” என மகிழ்ந்து வரவேற்பீர்.
அஞ்சாதீர்கள் இதோ மீட்பர் விரைந்து வருகிறார்.
தீங்கு செய்வோர் தீங்கு செய்துகொண்டே இருக்கட்டும்.
இழுக்கானவை புரிவோர் இழுக்கானதைச்
செய்து கொண்டே இருக்கட்டும்.
நாமோ மனந்திரும்பி - பகிர்ந்தளித்து
தூயோராய்த் தூய்மை செய்து கொண்டே இருப்போம்.
அஞ்சாதீர் இயற்கைப் பேரழிவோ, செயற்கைச் சீரழிவோ,
போரோ - பேராசையோ, வன்முறையோ, மரணமோ,
அஞ்சாதீர் வருகிறேன் விரைவில்
தருகிறேன் நிலை வாழ்வை
இவ்வுலகில் நீதியும் சமாதானமும் நிலைநாட்டப்படும்
சமாதான பிரபு, நீதியின் அரசர் வருகிறேன் என்கிறார்.
கலங்காதீர் என்ற இக்கடவுளின் செய்தியை
கர்த்தரின் தூதனாய் உங்கள் பணியாளனாய்
உரைத்திடுகின்றேன் - மறை மொழி சார்ந்து
இம்மானுவேலராய் உங்களோடிருப்பவர் -
என்றும் இருந்தவர்-இருப்பவர்-
அந்த இறைத் திருமகன் வருகிறார் விரைந்து நம்பிக்கை கொள்வீர்
மாரநாதா வாரும் இயேசுவே ஆமென்.
Author: Bro. R. Johnkiritharan
இந்தக் கவிதை கி.பி.2015 கிறிஸ்துமஸில் இவர்களைச் சந்தித்தால் என்ற புத்தகத்தில் இருந்து Dr. M. மைக்கேல் பாரடே அவர்களின் அனுமதியுடன் பெறப்பட்டது.