சுவிசேஷ வானில்
சுற்றிவரும்
புறா நான்.
சபையே என் மாடம்,
வசனம் உணவாகும்.
உலகின் வழிகளினால்
கல்லான இதயங்களை
அலகின் வலிமையினால்
கல்வாரிக்கு இழுத்திடுவேன்.
என்போல் புறவுகளை
என்பால் நான் சேர்த்து,
முன்பின் அறியார்க்கும்
அன்பின் சேதி சொல்வேன்!
தாகம் தருகின்ற
தாங்கவொணா வேதனையும்
சோகமும் கூக்குரலும்
அழுகையும் பற்கடிப்பும்,
மோகம் தலைக்கேறிய
மூர்க்கனைப்போல் எரிநரகத்
தீயின் நாவும் எனைத்
தின்றுவிட்டுப் போயிருக்கும்.
ஆயினும் அதைத் தடுத்து
அடிமை எனைக் காத்திடவே
தாயினும் அன்புவைத்தார்
தன்னையே கொடுத்துவிட்டார்!
அருளின் திருவுருவம்
அன்றொருநாள் சிலுவையிலே
இருளின் திரைமறைவில்
இழிநிலையில் தொங்கியதால்
இந்நாள் என்றனுக்கு
இன்பமய வாழ்க்கையிது
இலவசமாய்க் கிடைத்த வழி
இட்டமுடன் எடுத்துரைப்பேன்.
நாற்றமே சொந்தமென
நம்பியவன் வாழ்க்கையிலே
ஏற்றமும் தந்துவிட்ட
இயேசுபிரான் திருப்புனிதக்
குருதிப் பெருங்கடலில்
குளித்தெழுந்த சரிதம் சொல்ல
இறுதித் துடிப்புவரை
இயேசுவுக்காய்ச் சிறகடிப்பேன்!
- பொன் வ கலைதாசன்