அலை மோதும் நினைவுகள் கரை கடப்பதில்லை
கரை மீது மோதினாலும் தரை தடுப்பதில்லை
தர தரவென்றுஇழுத்துச் செல்லும் சிந்தனை
செல்லுகிற பாதையில் செவிக்கினிய நல் வார்த்தை
நல்கிடும் நல்லவரே நாதனேசுவே
நாதகீத வேத மனைத்துமென்
பாதம் செல்லும் பாதைத் துணையே
வாதை எண்ணி வருத்தமில்லை
வருந்தி அழைக்கும் இரட்சகரே
இரங்கி என்னையும் ஆற்றுவாரே
ஆறாத காயங்களும் காயாத கசப்புகளும்
கசடற கழுவி கறை திரை நீக்கி
நீக்கமற அவர் நினைவில்
நீசன் என் தோஷமற அகற்ற
அகலம் உயரம் நீளம் ஆழம்
அளவிட முடியாதன்பு
முள்முடி சூடி எனக்காக வாடி
வதைபட்டவருக்கோ காடி
என கண்ணீர் வந்திடுதே
என் கவலைகள் மறந்திடுதே
மறவாதவர் என் உறவானவர்
உறைவிடமாகஎன்னுள் வந்தவர்
எனக்குள் நினைவுகள் இனி அலைபாய்வதில்லை.
அலைகள் மீது நடந்தவர் அதை அடக்கினவர்
அவரில் அடங்கி அவர் அன்பில் மூழ்கி
எனையே நான் மறந்தேனே
இனி நினைப்பதற்கு எதுவுமில்லையே
அவரைத் தவிர!