பஸ்காப் பண்டிகைக்கு
ஆறு நாட்களுக்கு முன்,
பாடுகளின் வீடு எனப்படும் பெத்தானியாவில்
இயேசுவுக்கு இராவிருந்து.
இறப்பினின்று எழுப்பிய லாசருவும்
பந்தியிருக்க,
மார்த்தாள் பணிவிடை செய்ய,
வெள்ளைக் கல் பரணியை,
ஊற்றினாள் நளதத்தை நாதனின் சிரசில்,
பரிமளத் தைலத்தை பாதத்திலும் பூசி,
பெண்ணின் மகிமையாம்
தன் கூந்தலால் துடைத்தாள்.
தைலத்தின் நறுமணம் இல்லமெங்கும் கமழ
துரோகியான யூதாவின் நெஞ்சம்
துடித்தது, தைலத்தின் விலையை எண்ணி,
விவசாயக் கூலியின் ஓராண்டு
வருமானத்தை ஒரே நிமிடத்தில்
ஊற்றி விட்டாளே எனக் குமுறினான்.
தைலத்தை விற்று
ஏழைகளுக்குக் கொடுக்காமல் போனதென்ன?
எனக் கேள்வி எழுப்பினான்.
ஏழைகள் மீது கரிசனையா? அல்ல.
பணப்பை அவனிடமிருந்தது.
பண ஆசை பிடித்த அவன்
அதிலிருந்து திருடுவதுண்டு.
எனவேதான் அவ்வாறு பகர்ந்தான்.
ஏசுபெருமான் எடுத்தியம்பினார்,
என்னை அடக்கம் பண்ணும்
நாளுக்காக வைத்திருந்தாள்.
நற்கிரியை என்னிடதில் செய்திருக்கிறாள்,
தன்னால் இயன்றதைச் செய்தாள்,
என் சரீரத்தில் தைலம் பூசிட
நற்செய்தி பரவும் நானிலமெங்கும்,
நங்கையிவள் செய்த செயலாலும்,
நன்று சொல்லப்படும் என்றார் இயேசு.
ஆறு நாட்களுக்குப் பின்,
அருமை ஆண்டவர் சிலுவையில் பலியாவார்.
அடக்கம் பண்ணப்பட்டபின்
மூன்றாம் நாளிலே அவரது சரீரத்துக்கு
நறுமணத் தைலம் பூசவேண்டும்.
யூதர்களின் வழக்கம் இது.
அஃதே போல் இயேசுவுக்குத் தைலம் பூச,
மகளிர் கூட்டம் செல்லும்.
ஆனால்... ஆண்டவர் அதிகாலையிலேயே
உயிரோடெழுந்து விடுவார்.
மானிட சரீரத்துக்கு மாசில்லா தைலம்
பூச இயலாது என்பதை அவர் அறிவார்.
முந்திக் கொண்டாள் மரியாள்
என முன்மொழிந்தார்.
தன்னையே தந்து என்னை மீட்ட
தயாபரன் இயேசுவுக்குத் தன்னையும்
தனக்குரியவைகளையும் தருவதற்கு,
முந்திக் கொள்வோம் முனைப்புடனே!
Author: Sis. Vanaja Paulraj