தாவீது பேசுறேன்

வீட்டாருக்கும் 
நாட்டாருக்கும் 
ஏன் கொல்ல வந்த 
எதிரிகளுக்கும் கூட 
நான் பிரியமானவன்

நான் படிக்காத மேதை 
இருந்தும் 
என் சங்கீதங்களோ
படித்தவர்களுக்கு
புதுப்பாதை

இசைக்கல்லூரியில்
இசைப்பயிலாத
நான்
தேவனால் 
அங்கீகரிக்கப்பட்ட 
இசைஞானி 
 
நான் என் 
சுரமண்டலத்தை
இசைக்கையில்
சவுலின் மேல் இருந்த 
அசுத்த ஆவி
அவரை விட்டு 
அகன்று போனது

நான் பெத்லகேமிலே
யூத குலத்தில் 
பிறந்த 
ஈசாயின் 
அடிமர 
துளிர் வேர் 

நான் இறைக்கும் கிணறு
அதனால்தான் 
ஆட்டு மேய்ப்பனாய் 
இருந்த என்னை  
நாட்டு மேய்ப்பனாய் 
ஆண்டவர்  
மாற்றினார்

காட்டு ராஜாவாக 
இருந்த என்னை 
நாட்டு ராஜாவாக 
மாற்றினார்

வீழ்த்த முடியாத 
கோலியாத்தை 
என்னைக் கொண்டு
நெத்தியடியால் 
வீழ்த்தினார்

சகோதரரில் 
அற்பமாய் எண்ணப்பட்ட 
என்னை 
அற்புத பாத்திரமாய் 
மாற்றிய 
பரம குயவனின்
கிருபையை 
என்னவென்று பாராட்டுவேன் 

நான் அரசனாகியும்
என் நம்பிக்கை 
என் மாம்ச புயத்தின் மீது
இருந்ததில்லை
தொடர்ந்து  
என் நம்பிக்கை 
அவராகவே இருந்தார்
என் கேடகம் 
என் கோட்டை 
என் துருகம்
எல்லாம் அவரே

நான் அவரின் 
இதயத்துக்கு 
ஏற்ற தாசன்

இதை வாசிக்கிற 
நீங்கள் அற்பமாய் இருந்தாலும் 
அற்புதரை 
உறுதியாய் 
பற்றிக் கொள்ளுங்கள்
உன்னதரின் பிரசனத்தில் 
உங்கள் வாழ்க்கை 
உயர்வடையும் 

இப்படிக்கு
 பிரியமுடன் தாவீது 

கவிமுகில் சுரேஷ் 
தர்மபுரி



Topics: Bible Kavithaigal

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download