பழுக்காத அத்தியின் வீடு என்று
பொருள்படும் பெத்தானியாவிலிருந்து
எருசலேம் செல்லும் சாலையிலே,
இயேசுவும் சீடர்களும் நடக்க,
எட்டத்திலே அத்திமரம் கண்டு,
எட்டி நடை போட்டார்கள்.
இயேசுவுக்குப் பசி. பழம் கிடைக்குமென,
ஏறெடுத்துப் பார்த்தார்.
ஐயகோ! பச்சைப் பசேலென
அடர்ந்த இலைகளேயன்றி,
கனியொன்றும் காணவில்லை.
கனிவு நிறைந்த கர்த்தரும்
கோபம் கொண்டார். இனி
"ஒருவனும் ஒருக்காலும் உன்னிடத்தில்
கனியைப் புசியாதிருக்கக்கடவன்" என்றார்.
கடந்து சென்றார், அவ்விடம் விட்டு,
தேவாலயம் வந்தார்.
கள்ளர் குகையாய் காட்சியளித்த
கடைகளைக் கண்டார், வெகுண்டார்.
காசுக் கடைக்காரர் பலகைகளைக் கவிழ்த்தி,
வியாபாரிகளை விரட்டி,
"என் வீடு ஜெபவீடு" என முழங்கினார்.
மூச்சொடுங்கினர் ஆசாரியர் வேதபாரகர்.
மறு நாள் காலை அவ்வழியே பயணம்.
வேரோடு பட்டுப் போயிருந்தது அந்த மரம்.
பேதுரு அதைச் சுட்டிக் காட்டினார்.
விசுவாசத்தினால் சாதிக்க முடியாதது
வையகத்தில் எதுவுமில்லை.
விளைந்திருக்கும் மரத்தைப் பார்த்து,
"வேரோடு நீ பிடுங்குண்டு
நடுக் கடலில் நடப்படுவாயாக"
என நீ கூறி, கூறியபடி
நடக்குமென நம்பினால்,
அப்படியே நடக்குமென
நாதர் இயேசு செப்பினார்.
அத்திமரத்தை ஏன் சபித்தார்?
அடர்ந்த இலைகள் இருந்தால்
அதில் கனிகள் இருக்க வேண்டும்.
ஆனால் இங்கோ........
இலைகள் இருந்தன, கனிகள் இல்லை.
கனியிருப்பதாக,
பாவனை செய்து கொண்டு,
பசியோடு வரும் வழிப்போக்கரை,
ஏமாற்றிக் கொண்டு நின்றிருந்தது, அந்த அத்திமரம்.
எனவே சபித்தார்.
இலைகள் குறிப்பது பக்திக்குரிய செயல்கள்
கனிகள் என்பது ஆவியின் கனியால் நிரம்பி,
தேவனுக்கு முதல் அன்பை செலுத்தி,
தன்னைப் போல் பிறனை நேசித்து,
வாழும் சீடத்துவ வாழ்வு.
வெறும் பக்தி வேடம் போட்டால்
விளைவது ஆக்கினைத் தீர்ப்பே!
சிந்திப்போம்! விரைந்து
செயல்படுவோம்.
Author: Sis. Vanaja Paulraj