வேளை வந்தது!
பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும்
அனுப்பின திரளான ஜனங்கள்,
பட்டயத்தோடும், தடிகளோடும்
பாய்ந்துவர , வந்தான் யூதாஸ்,
பாசத்துடன் அழைப்பதுபோல்,
"ரபீ" என்று கூறி, இயேசுவின் கன்னத்தில்
முத்தமிட்டான்.
"சிநேகிதனே!"
அன்பு கனிந்த அழைப்பு,
ஆண்டவரிடமிருந்து!
"முத்தத்தினாலேயா மனுஷகுமாரனைக்
காட்டிக் கொடுக்கிறாய்?"
கேட்ட கேள்விக்குப் பதில்
காவலர்கள் கைது செய்தனர்
கிறிஸ்தேசுவை!
ஓர்பாள் என்றாள் பெண்மான்
மாமியை முத்தமிட்டு,
மானெனத் துள்ளிச்சென்றாள்
மறு மணவாழ்வு தேடி,
பிரியா விடைபெறும்,
அவளிட்ட முத்தம்
அன்பின் முத்தம்.
பிரிந்து சென்ற அப்சலோமை
திரும்ப அழைத்து முத்தமிட்டான் தாவீது
மகனென்ற உறவினை ஏற்ற
அது நேச முத்தம்.
அப்சலோமின் துரோகத்தால்
அரண்மனையை விட்டகன்ற தாவீதை
பராமரித்த மகா பெரிய மனுஷனான
பர்சிலாவை முத்தமிட்டு தன் நாடு
பார்த்து புறப்பட்டான் தாவீது
நன்றியின் முத்தம் அது
பாச முத்தம்.
இயேசுவோடு மூன்றரை ஆண்டுகள்
இணைந்து பிணைந்து வாழ்ந்தும்
ஈடில்லா அன்பு கொண்ட இயேசுபிராணை
ஈவு இரக்கமின்றி
காட்டிக் கொடுக்க
யூதாஸ் முத்தமிட்டானே!
அது துரோக முத்தம்!
மோச முத்தம்!
Author: Sis. Vanaja Paulraj