வான சாஸ்திரிகள்

நாங்கள் வான சாஸ்திரிகள்
விண் ஆய்வாளர்கள்
விஞ்ஞானிகள்

நாங்கள்
மழை காலத்தின் வானிலை அறிவிப்பாளர்கள்
அல்ல
ஊழிகாலத்தின் இறைநிலை செய்தியாளர்கள்

வானிலை ஆய்வு
வரலாம் வரக்கூடும் என உச்சரிக்கும்
இறைநிலை தோய்வு
வருகிறது திருந்திவிடு என எச்சரிக்கும்.

நாங்கள் கிழக்கில் இருந்து வந்தவர்கள்
உலகின் விடியலைத் தேடி
கிழக்கில் இருந்து மேற்கே பயணம் செய்தோம்.

ஆனால்
உலகின் நடுவர் எங்களை
உலகின் நடுவில் நிறுத்தினார்.

நாங்கள்

உலகின் இருளை அழிக்கும்
பேரொளியைக் கண்டவர்கள்
அவ்வொளி 12 மணி நேரத்தில்
மறைந்து போகும் கதிர் ஒளி அல்ல

கால வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படாத
கடவுள் ஒளி
எங்களுக்கு வழிகாட்டி வால்நட்சத்திரம்
வெண்ணிலா இரவின் அடையாளம்
விடிவெள்ளி விடியலின் அடையாளம்
நட்சத்திரம் மாலையின் தொடக்கம்
வால் நட்சத்திரம் விடுதலையின் தொடக்கம்

நாங்கள் பகலில் படுத்து ஒய்ந்து
இரவில் தான் பயணம் செய்தோம்
ஏனெனில் எங்கள் வழிகாட்டி
இரவில் மட்டுமே தெரிவார்

ஆம் எங்களுக்கு வழிகாட்டி வால்நட்சத்திரம்.

பகலில் பயணம் செய்தால்
பத்துப்பேர் கேட்பார்கள்
எங்கே பயணம் என்று
பகலில் சொல்ல வேண்டி இருக்கும்
பரலோக இரகசியத்தை
எனவே தான்
எங்கள் பயணத்தை 
இரவில் அமைத்தார்  இறைவன்

இது புரியாமல் உதவி கேட்டோம் ஏரோதிடம்
விண் அறிவு பெருத்த எங்களுக்கு
மண் அறிவு சிறுத்தே போனது.

அதனால் தான் ஆண்டவன் பிறப்பு பற்றி
அரசனிடம் கேட்டோம்
உலகங்களின் அரசன் என கேட்காமல்
ஊரின் அரசன் என கேட்டுவிட்டோம்

அவனும் ஆண்டவரை தனக்குப் போட்டியாக
அரசன் என எண்ணி கலங்கிப்போனான்.
அந்த மண்ணையும் கலங்க வைத்தான் -
  
விண் நட்சத்திரத்தை நோக்கியவாறே
இருந்த எம் பயணம்
மண் அரசன் நோக்கி உதவி நாடியதால்
எங்கள் பயணத்தில் தடை
அரசன் மனதில் பகை
குழந்தைகளின் படுகொலை
என அசம்பாவிதங்கள் அடுக்கடுக்காய்
அரங்கேறின.

உலக பயணத்தில்
நம் நோக்கம் விண்பற்றியே இருந்தால்
பாதை தெளிவாகும்
பயணம் இனிதாகும்
இடையூறாய் எவரும் வரமாட்டார். 
இடறலாய் நாமும் இருக்க மாட்டோம்.

ஏரோது எங்களிடம் இனிமையாய்ப் பேசினான்
தனிமையில் கொடியவனாய் யோசித்தான்
பெத்தலேகேமை அடையாளம் காட்டியது
அவன்தான் 
ஆனால் பிள்ளையை அடைவதற்கல்ல
அழிப்பதற்கு

சிலரது உறவு நமக்கும் நம்மைச் சார்ந்தவருக்கும்
துன்பம் தரும்
ஆனால் இறைவனின் உறவு எப்போதும்
இன்பம் தரும்.

மண்ணை விடுத்து மீண்டும்
விண்ணை நோக்கிய போது
எங்களுக்காய்க் காத்திருந்தார்
எங்கள் வழிகாட்டி வானில்

மீண்டும் தொடங்கியது
எங்கள் பயணம்
விண் நெறியில்

இறங்கும் இடம் வந்ததும் 
வண்டிகள் நிற்பது போல்
இறைவன் இல்லம் வந்ததும்
விண்மீன் நின்றது.
நாடுகள் காடுகள்

மக்கள் மாக்களை
கடந்த எங்கள் பயணக் களைப்பு
ஆண்டவரைக் கண்டதும் அகன்றது
வீட்டைக் கடந்து உள்ளே சென்றால்
கூடும் குழியும் இல்லாத தொழுவத்தின்
முன் பகுதி அவரது இல்லம்
கீழ்ப்படிதலின் வடிவமாய் யோசேப்பு
அர்ப்பணிப்பின் முழுவுருவாய் கன்னிமரியாள்

அருகே

விண்மீனை எங்களுக்கு பணியமர்த்திய
விந்தை இயேசு

கைகளை உயர்த்தியோ
கைகளைக் கூப்பியோ .
காலைத் தொட்டோ வணங்கவில்லை நாங்கள்
எம் மண்ணின் மரபில்
நெடுஞ்சாண் கிடையாய்
விழுந்து வணங்கினோம்
விண்ணின் வேந்தை

பொன் வெள்ளைப்போளம் தூபவர்க்கம்
எங்கள் பரிசாய் அளித்தோம் இயேசுவுக்கு
விலை மதிப்பில்லா பொருட்கள் என
விரும்பிப் படைத்தோம்.

இலவசம் விலையில்லா பொருட்கள்
இரண்டும் வேண்டாம்
கன்னமிட்டுத் திருடுவர் இல்லையேல் பழுதுபடும்
உயர்ந்த பரிசு உண்மை உள்ளம் தருவீரோ

என புன்னகையில் கேட்டது குழந்தை
தந்தோம் என அர்ப்பணித்தோம்
இல்லத்துக்குச் செல்லுங்கள்
அன்பைப் பகிருங்கள்
என்று பிஞ்சு விரல் அசைத்தது.

பயணம் திரும்புகையில்
மீண்டும் கிடைத்தது விண்தொடர்பு
மாற்று வழி செல்லுங்கள்
எங்கள் வாழ்வின் பயணத்தையும்
மாற்றியமைத்தார் இயேசு.

போகும் போது விண்மீன்
திரும்பும் போது விண்தூதர்கள்
இறையோடு இணையும் நிலை
ணையில்லா உயர்வு நிலை.

மக்களே

நாங்கள் பின் தொடர்ந்த நட்சத்திரம்
விண்ணகம் சார்ந்து
நீங்கள் பின் தொடரும் நட்சத்திரம்
எப்படிப்பட்டது.

ஆய்வாளர்களே

எங்கள் ஆய்வு உலகுக்கே நன்மையைக் காட்டியது
உங்கள் ஆய்வின் விளைவு நன்மையா தீமையா?
மனிதரைப் பிரிக்கவும் அழிக்கவுமா?

பயணம் செய்வோரே

உங்கள் பயணம் தீவிரிப்பது ...
எதைச் சென்று அடைய?

பாதைகளும்
பயணங்களும்
நம் முன்னே
தேர்வும் தெரிவும்
நம்முடையதே

எனினும்”

விண்ணகத் தொடர்பு எல்லைக்குள்
இருந்தால் 
மரண இருளின் பள்ளத்தாக்கும் .
மகிழ்ச்சி நிறை கிறிஸ்து பிறப்பு விழாவாகும். 

Author: Bro. Sebulon Brabudurai

இந்தக் கவிதை கி.பி.2015 கிறிஸ்துமஸில் இவர்களைச் சந்தித்தால் என்ற புத்தகத்தில் இருந்து Dr. M.  மைக்கேல் பாரடே அவர்களின் அனுமதியுடன் பெறப்பட்டது.



Topics: Bible Kavithaigal

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download