மாம்சமாகுதலா அல்லது மெய்நிகர் உண்மையா?

திருச்சபை ஒன்றுக்கு பல நகரங்களில் கிளை சபைகள் உள்ளன.  ஆனாலும் கூட, அவரின் எல்லா சபைகளிலும், அப்போதகர் ஒருவர் மட்டுமே பிரசங்கிக்கிறார், அதாவது நவீன டிஜிட்டல் தொழில்நுட்ப உதவியுடன், காணொளிக்காட்சி மூலமாக மாபெரும் திரைகளைப் பயன்படுத்தி சபைகளில் காண்பிக்கப்படுகிறது.  ஒருவகையில் கால இடைவெளியையும்  நேரத்தையும் மிச்சப்படுத்த தொழில்நுட்பம் உதவுகிறது உண்மைதான். இருப்பினும், இரத்தமும் சதையுமாக இல்லையே. இது வெறும் மெய்நிகர் உண்மை. ஆனால் நம் தேவன் இந்த உலகத்திற்கு ஒரு மெய்நிகர் யதார்த்தமாக வரவில்லையே, அவர் மாம்சமான தேவனல்லவா (யோவான் 1:14-18).

எழுதுகோலும் மையும்: 
அப்போஸ்தலனாகிய யோவான் ஊழிய நண்பனான காயுவுக்கு எழுதும் போது, எழுதுகோலையும் மையையும் பயன்படுத்தி தொடர்புகொள்வதில் தனது அதிருப்தியை இவ்வாறாக வெளிப்படுத்தினார். “உனக்கு நான் கூற வேண்டிய பல செய்திகள் உள்ளன. ஆனால் எழுதுகோலையும் மையையும் பயன்படுத்த விரும்பவில்லை.  நான் உன்னை விரைவில் சந்திக்க விரும்புகிறேன். அப்போது நாம் ஒருமித்துக் கூடிப் பேசலாம்” (3 யோவான் 1:13-14). அதாவது அவர் தன்னை பின்பற்றுபவர்களை, விசுவாசிகளை நேருக்கு நேர் பார்க்க விரும்பினார்.  தொலைதூரத்திலிருந்து காணப்படும் உருவமற்ற தொடர்பு யோவானைத் திருப்திப்படுத்தவில்லை. 

மேய்ப்பர்கள்:  
கிறிஸ்தவ தலைவர்கள் பிரதான மேய்ப்பர்கள் என்று வேதாகமம் போதிக்கிறது.   ஒரு மந்தைக்கு மேய்ப்பர்கள் இல்லாதது சாத்தியமில்லை.  மேய்ப்பர்கள் தங்கள் மந்தைகளோடு வசிக்க வேண்டும், வாழ வேண்டும், பராமரிக்க வேண்டும், உணவளிக்க வேண்டும், சுத்தம் செய்ய வேண்டும், வழிநடத்த வேண்டும், அவர்களைப் பாதுகாக்க வேண்டும்.  அவர்கள் தங்கள் கைகளை அழுக்கு செய்து, இந்த பணியை செய்ய வேண்டும்.  அருட்பணி என்பது தனிப்பட்ட அர்ப்பணிப்பு, தொடர்பு, ஐக்கியம், புலம்பல், அரவணைத்தல் மற்றும் ஒன்றாக உண்டு உறங்கி என உடனிருத்தல் ஆகும்.  தொழில்நுட்பம் இரத்தமும் சதையுமான அருட்பணிக்கு ஈடாக முடியாது. 

சூப்பர் மேய்ப்பர்களா?  
சில தலைவர்கள் தாங்கள் மிக நல்ல மேய்ப்பர்கள் என்று நினைக்கிறார்கள்.   கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே பிரதான மேய்ப்பன், பெரிய மேய்ப்பன், நல்ல மேய்ப்பன் என்பதை மறந்துவிடுகிறார்கள் (1 பேதுரு 5:4; எபிரெயர் 13:20; சங்கீதம் 23:1).  எல்லா மனிதர்களும் அவருக்கு கீழ் உள்ள மேய்ப்பர்களே.  இந்த சூப்பர்-மேய்ப்பர்கள் ஊழியம் செய்ய வரும் மற்ற மேய்ப்பர்களை ஊக்கமிழக்க செய்கிறார்கள் மற்றும் அழிக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். 

பாதுகாப்பான மேய்ப்பர்களா?  
அத்தகைய பல தலைவர்கள் தங்கள் அழைப்பைப் பற்றி பயமுள்ளவர்களாக இருக்கின்றனர், ஆனால் அவர்களின்  வரங்களைக் குறித்து அதீத நம்பிக்கை கொண்டுள்ளனர்.   தங்களுடைய பதவியை மற்றவர்கள் கைப்பற்றிவிடுவார்கள் என்றும், தங்களுக்கு பணியில்லாமல் போய்விடும் என்றும் அஞ்சுகிறார்கள்.   தங்களை அழைத்த தேவனை நம்புவதற்கு பதிலாக, அவர்கள் தங்கள் தாலந்துகள், ஆவிக்குரிய வரங்கள் மற்றும் திறமைகளை நம்புகிறார்கள்.   அவர்களின் பாதுகாப்பின்மை அவர்களின் செயல்திறனால் மறைக்கப்படுகிறது.   எந்தவொரு திறமையான அல்லது தாலந்துள்ள இளைஞனும் அத்தகைய தலைவர்களுக்கு அச்சுறுத்தலாகும்.

தேவனின் மந்தை:  
மோசே தனது மாமனார் எத்திரோவின் மந்தையையும், யாக்கோபு லாபானின் மந்தையையும் கவனித்துக்கொண்டதால், ஒரு குறிப்பிட்ட சூழலில் பெரியவர்கள், போதகர்கள் மற்றும் தலைவர்களின் பராமரிப்பில் சிலரை தேவன் ஒப்படைத்துள்ளார். மனித தலைவர்கள் வெறும் உக்கிராணக்காரர்களே  (காரியதரிசிகளே) தவிர மந்தையின் உரிமையாளர்கள் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மாம்சமாகுதலின் கொள்கையைப் புரிந்துகொண்டு, பாராட்டுகிறேனா, என் வாழ்க்கையில் பயன்படுத்துகிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்

Rev. Dr. J.N. Manokaran


Read more