9:1 ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது வானத்திலிருந்து பூமியின்மேல் விழுந்த ஒரு நட்சத்திரத்தைக் கண்டேன்; அவனுக்குப் பாதாளக்குழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது.
9:2 அவன் பாதாளக்குழியைத் திறந்தான்; உடனே பெருஞ்சூளையின் புகையைப்போல அந்தக் குழியிலிருந்து புகைஎழும்பிற்று; அந்தக் குழியின் புகையில் சூரியனும் ஆகாயமும் அந்தகாரப்பட்டது.
9:3 அந்தப் புகையிலிருந்து வெட்டுக்கிளிகள் புறப்பட்டுப் பூமியின்மேல் வந்தது; அவைகளுக்குப் பூமியிலுள்ள தேள்களின் வல்லமைக்கொப்பான வல்லமை கொடுக்கப்பட்டது.
9:4 பூமியின் புல்லையும் பசுமையான எந்தப் பூண்டையும் எந்த மரத்தையும் சேதப்படுத்தாமல், தங்கள் நெற்றிகளில் தேவனுடைய முத்திரையைத் தரித்திராத மனுஷரைமாத்திரம் சேதப்படுத்த அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது.
9:5 மேலும் அவர்களைக் கொலைசெய்யும்படிக்கு அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்படாமல், ஐந்துமாதமளவும் அவர்களை வேதனைப்படுத்தும்படிக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது; அவைகள் செய்யும்வேதனை தேளானது மனுஷரைக் கொட்டும்போது உண்டாகும் வேதனையையைப்போலிருக்கும்.
9:6 அந்நாட்களில் மனுஷர்கள் சாவைத்தேடியும் அதைக் காணாதிருப்பார்கள், சாகவேண்டுமென்று ஆசைப்படுவார்கள், சாவோ அவர்களுக்கு விலகி ஓடிப்போம்.
9:7 அந்த வெட்டுக்கிளிகளின் உருவம் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணப்பட்ட குதிரைகளுக்கு ஒப்பாயிருந்தது; அவைகளுடைய தலைகளின்மேல் பொன்மயமான கிரீடம் போன்றவைகளிருந்தன; அவைகளின் முகங்கள் மனுஷருடைய முகங்கள்போலிருந்தன.
9:8 அவைகளுடைய கூந்தல் ஸ்திரீகளுடைய கூந்தல்போலிருந்தது; அவைகளின் பற்கள் சிங்கங்களின் பற்கள்போலிருந்தன.
9:9 இருப்புக் கவசங்களைப்போல மார்க்கவசங்கள் அவைகளுக்கு இருந்தன; அவைகளுடைய சிறகுகளின் இரைச்சல் யுத்தத்திற்கு ஓடுகிற அநேகங் குதிரைகள் பூண்ட இரதங்களின் இரைச்சலுக்கு ஒப்பாயிருந்தன.
9:10 அவைகள் தேள்களின் வால்களுக்கு ஒப்பான வால்களையும், அந்த வால்களில் கொடுக்குகளையும் உடையவைகளாயிருந்தன; அவைகள் ஐந்து மாதமளவும் மனுஷரைச் சேதப்படுத்துவதற்கு அதிகாரமுடையவைகளாயிருந்தன.
9:11 அவைகளுக்கு ஒரு ராஜன் உண்டு, அவன் பாதாளத்தின் தூதன்; எபிரெயு பாஷையிலே அபெத்தோன் என்றும், கிரேக்கு பாஷையிலே அப்பொல்லியோன் என்றும் அவனுக்குப் பெயர்.
9:12 முதலாம் ஆபத்து கடந்துபோயிற்று; இவைகளுக்குப்பின்பு இன்னும் இரண்டு ஆபத்துகள், இதோ, வருகிறது.