3:1 சர்தை சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் உடையவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்.
3:2 நீ விழித்துக்கொண்டு, சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்து; உன் கிரியைகள் தேவனுக்குமுன் நிறைவுள்ளவைகளாக நான் காணவில்லை.
3:3 ஆகையால் நீ கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவுகூர்ந்து, அதைக் கைக்கொண்டு மனந்திரும்பு. நீ விழித்திராவிட்டால், திருடனைப்போல் உன்மேல் வருவேன்; நான் உன்மேல் வரும்வேளையை அறியாதிருப்பாய்.
3:4 ஆனாலும் தங்கள் வஸ்திரங்களை அசுசிப்படுத்தாத சிலபேர் சர்தையிலும் உனக்குண்டு; அவர்கள் பாத்திரவான்களானபடியால் வெண்வஸ்திரந்தரித்து என்னோடேகூட நடப்பார்கள்.
3:5 ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன்.
3:6 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.
3:7 பிலதெல்பியா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர் சொல்லுகிறதாவது;
3:8 உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்.
3:9 இதோ, யூதரல்லாதிருந்தும் தங்களை யூதரென்று பொய் சொல்லுகிறவர்களாகிய சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை உனக்குக் கொடுப்பேன்; இதோ, அவர்கள் உன் பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்து, நான் உன்மேல் அன்பாயிருக்கிறதை அறிந்துகொள்ளும்படி செய்வேன்.
3:10 என் பொறுமையைக்குறித்துச்சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனைக்காலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்.
3:11 இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு.
3:12 ஜெயங்கொள்ளுறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதியநாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்.
3:13 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.
3:14 லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது;
3:15 உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும்.